×

ராஜிவ்காந்தி சாலையில் தாழ்வான சென்டர் மீடியனை உயர்த்தி அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை, அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ஆரம்பமாகி, சிறுசேரி வரை சுமார் 22 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. இச்சாலையில் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இதன்காரணமாக, இந்த சாலை சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் இச்சாலையை கடப்பதற்கு வசதியாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆவதால், பல இடங்களில் சாலை பழுதடைந்து உள்ளது. இந்நிலையில், புதியதாக சாலை அமைக்கும்போது, பழுதடைந்த சாலையை அகற்றாமல் அதன்மீது தார் சாலை அமைப்பதால் சாலையின் உயரம் அதிகமாகிறது இதனால் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் உயரம் குறைகிறது. இதனால் சாலையை கடப்பவர்கள் நடை மேம்பாலத்தை உபயோகிக்காமல் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் மீது ஏறி சாலையை கடக்கின்றனர். இப்படி சாலையை கடக்கும் போது அவ்வழியே அதிவேகத்தில் வரும் வாகனங்கள் மோதி ஏராளமானோர் படுகாயமடைகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சில சமயங்களில் உயிரிழக்கும் சம்பவம் ஏற்படுகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ராஜிவ்காந்தி சாலையில் உள்ள சென்டர் மீடியன் தாழ்வாக உள்ளதால், பலர் அதன்வழியே சாலையை கடந்து செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சென்டர் மீடியனை உயர்த்தி அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை கடக்க நடைமேம்பாலத்தை உபயோகிக்காமல், சென்டர் மீடியன் வழியாக சாலையை கடந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பினர். இந்நிலையில், சாலையை கடக்க பொதுமக்கள் நடைமேம்பாலத்தை உபயோகித்து வந்தனர். நாளடையில் பெரும்பாலானோர் சென்டர் மீடியனை தாண்டியே சாலையை கடக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சென்டர் மீடியனை உயர்த்தி அமைத்தால் சாலையை கடப்பவர்கள் நடை மேம்பாலத்தை பயன்படுத்துவார்கள். இதனால்,உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்படும்’’ என்றனர்….

The post ராஜிவ்காந்தி சாலையில் தாழ்வான சென்டர் மீடியனை உயர்த்தி அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Road ,Durai Pakkam ,Chennai ,Adyar Central Kailash ,Sirucherry ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு