×

வலிமை பெருக்கும் மேஷ வாகன தரிசனம்

ஆடு என்பது இங்கே செம்மறி ஆட்டைக் குறிக்கிறது. இது அக்னியோடு தொடர்புடையது. அக்னிக்கு வாகனமாக இருக்கிறது. அக்னி வடிவாக விளங்கும் அக்னி  ஜாதர் என்னும் முருகப் பெருமானின் வாகனமும் ஆட்டுக்கடாவேயாகும். முருகன் ஆலயங்களில்  செந்நிறம் பூசப்பட்ட ஆட்டுக்கடா வாகனங்கள் இருக்கின்றன.  உடலெங்கும் திரட்சியான ரோம பத்தைகளுடன் உறுதிமிக்க கால்களைக் கொண்ட இந்த ஆடு உள்நோக்கி வளைந்த வலிய கொம்புகளைக் கொண்டுள்ளது.

ஒரு சமய நாரதர் பெரிய வேள்வி ஒன்றைச் செய்தார். அதில் கூறப்பட்ட மந்திரங்கள் தொளி மாறியதால், அவை எதிர் விளைவை உண்டு பண்ணி விட்டன.  வேள்ளிக் குணடத்திலிருந்து கொடிய அஞ்சத்தக்க வடிவம் கொண்ட பெரிய ஆடு தோன்றியது. அது திக்கெட்டிலும் குதித்துப் பெரிய அட்டகாசம் புரிந்தது. அதன்,  ஆர்ப்பரிப்பால் அனைவரும் அஞ்சி மிரண்டு நாலா பக்கங்களிலும் ஒடி ஒளிந்தனர். செய்தி அறிந்த முருகப் பெருமான் தனது இளவலாகிய வீரபாகுதேவரிடம்  ‘‘அந்த ஆட்டை அடக்கி இழுத்து வருக’’ என்று ஆணையிட்டார்.

வீரபாகுதேவர் விரைந்து சென்று அட்டகாசம் புரியும் அந்தச் செங்கண் செம்மறிக்கடாவை அடக்கி இழுத்து வந்தார். முருகப்பெருமான் சந்நதியில் அதை விடுத்தார்.  முருகப் பெருமான் அதன்மீது ஏறி அமர்ந்து, அதை எட்டுத் திக்கிலும் செலுத்தி விளையாடினர். அன்று முதல் ஆட்டுக் கடா அவருக்கு வாகனமாயிற்று. இந்த  வரலாற்றை கந்தபுராணம். கந்தர் கலிவெண்பா போன்ற நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

‘‘நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்
செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து
அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா!’’

 - என்பது கந்தர் கலி வெண்பாவின் தொடர்களாகும்.

தென்னகத்திலுள்ள பல முருகன் ஆலயங்களில் வெள்ளியாலான ஆட்டுக் கடா வாகனம் இருக்கிறது. சென்னை கந்தகோட்டத்தில் தங்க முலாமிடப்பட்ட  ஆட்டுக்கடா வாகனம் இருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை செங்குந்த கோட்டம் முருகன் ஆலயத்தில் பெரிய மரத்தாலான கலை வேலைப்பாடு மிக்க ஆட்டுக்  கடா வாகனம் இருக்கிறது. ஆட்டுக்கடா வாகனத்தில் பவனி வரும் பெருமானைத் தரிசிப்பவர்கள் செல்வ நிலையையும் பகைவரை மோதி அழிக்கும்  வலிமையையும் பெறுவர். அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று மேலான ஞானத்தை அடைவர் என்பது உறுதியாகும்.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!