×

நினைத்ததை நிறைவேற்றும் மாடக்குளம் அம்மன்கள்

மதுரை நகரின் மேற்கே உள்ளது மாடக்குளம் கிராமம். பண்டைய காலத்தில் இந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் மாடுகளும், பெரிய குளம் ஒன்றும் இருந்ததால் ‘மாடு குளம்’ என பெயர் பெற்றது. நாளடைவில் இது ‘மாடக்குளம்’ என மருவியதாக கூறப்படுகிறது. இந்த கிராமம் குறித்து மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பலத்த மழைக்கு இங்குள்ள கண்மாய் நிறைந்து வழிந்தது. உடையும் நிலையில் கண்மாய் கரைகள் இருந்தன. இதனை கண்டு கண்மாயை காவல் புரியும் தலைவன் மாடன் கவலையடைந்தான்.

அப்போது ‘கிராமத்துக்கு சென்று ஆட்களை அழைத்து வரும் வரை, கரை உடையாமல் பாதுகாக்கிறேன் என அப்பகுதியில் ஓர் அசரீரி ஒலித்தது. இதன்பேரில் கிராமத்துக்கு விரைந்த மாடன் நடந்தவற்றை மக்களிடம் தெரிவித்தான். மாடன் திரும்பிச் சென்றால், இறைவன் தனது காவல் பணியை கைவிட்டு விடுவார். இதனால் கண்மாய் கரை உடைந்து விடும் என அச்சமடைந்த மக்கள், கரையிலேயே மாடனை பலியிட்டனர். இதில் மாடனின் ரத்தம் நீண்ட தூரம் வழிந்தோடியது. ரத்தம் வழிந்தோடிய தூரம் வரை அவனது குடும்பத்திற்கு கிராமத்தினரால் மானியமாக வழங்கப்பட்ட ‘மாடன் வயல்’ இன்றளவும் உள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில் கண்மாய் கரையில் ‘மடை காத்த மாடன்’  என்ற பெயரில் இங்கு கருப்பசாமி கோயில் கட்டப்பட்டது. பின்னர் ‘மாடன்’ பெயரிலேயே கண்மாயும், ஊரும் ‘மாடன் குளம்’ என்றழைக்கப்பட்டு, ‘மாடக்குளம்’ ஆனது என்கின்றனர். மாடக்குளத்தை ஒட்டியுள்ள பசுமலையில் கபாலீஸ்வரி-அலங்காரி அம்மன் கோயில் உள்ளது. கபாலீஸ்வரியை, பராசக்தி என்போரும் உண்டு. மாடனின் தங்கையே கன்னி தெய்வமாக கோபத்தோடு கபாலீஸ்வரியாக மலைமீது இருக்கிறார் என்கின்றனர். இங்கு கபாலீஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்தவே பாலாபிஷேகம் நடக்கிறது.

கபாலீஸ்வரி அம்மனுக்கு தினமும் பாலாபிஷேகம் நடத்தும் பூசாரி ஒருமுறை வீட்டில் பாலை மறந்து வைத்துச் சென்றிருக்கிறார். அவரின் மனைவி, குழந்தைக்கு அந்த பாலை புகட்டி விட குழந்தை இறந்தது. இதில் மனமுடைந்து மனைவியும் இறந்ததால், பூஜித்த தனக்கே இழப்பைத் தந்த சாமியை பூஜிக்க பூசாரி மறுத்தார். அவரது கனவில் தோன்றிய கபாலீஸ்வரி, ‘உன் பிள்ளையையும் தெய்வமாக மக்கள் வணங்கட்டும். எனக்குச் செய்யும் அத்தனை பூஜைகளும் உன் குழந்தைக்கும் உண்டு’ என்று கூறி மறைந்தார். அப்போது முதல் இந்த இரு அம்மன்களும் மாடக்குளம் மக்களால் கும்பிடப்பட்டு வருகின்றனர்.

கபாலீஸ்வரி எதிரே குழந்தையாக படுத்திருக்கும் அலங்காரி அம்மனுக்கு வயிற்றில் பாலூற்றி அபிஷேகம் நடக்கிறது. குழந்தையான அலங்காரி அம்மனுக்கு மேல் கூரை அமைக்கப்படாமல் வெளிச்சம் மற்றும் வெயில் படும்படி அமைக்கப்பட்டுள்ளது. மலை மீது 540 படிகள் ஏறி கபாலீஸ்வரியை கும்பிட வசதி செய்யப்பட்டிருக்கிறது.  இந்த கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நவராத்திரி உற்சவமும் சிறப்பு பூஜையுடன் நடக்கிறது. புரட்டாசி மாதம் 9 நாள் திருவிழா நடக்கிறது. 10ம் நாளில் சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்படுகிறது.

11 வகையான பொருட்களால் காபாலீஸ்வரிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இது தவிர, மாடக்குளம் மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஊர்வலமாக வந்து ‘செவ்வாய் சாற்று விழா’ நடத்துகின்றனர். ‘நினைத்ததை நடத்தித் தரும் அம்மன்கள்’ என்றே  கபாலீஸ்வரி, அலங்காரி அம்மன்களை வழிபடும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மனதில் ஒரு காரியத்தை நினைத்து, தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமை இங்கு வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நடக்கும் என்கின்றனர்  இப்பகுதி மக்கள்.

Tags : Madamkulam Ammans ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்