×

தடைகளை தகர்த்து வெற்றிகள் தருவார் வீரஆஞ்சநேயர்

அஞ்சனை மைந்தன் என்றும் வாயு புத்ரன் என்றும் அழைக்கப்படும் ஆஞ்சநேயர், ராமாயணத்தில் ராமருக்கு தொண்டனாய் இருந்தவர். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ, அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். கடல் கடந்து சென்று சீதையை அடையாளம் காட்டியவர். எல்லோரையும் கலங்க செய்யும் சனிபகவனையே, ஒருமுறை கதிகலங்க செய்த ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலம் வாழ்வில் சகல சந்தோஷங்களையும் பெறலாம். விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு மோட்சகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப வீரஅருள் ஆஞ்சநேய ரிஷிமூல நாதே கண்ணன் ஆலயம் பிரசித்தி பெற்றது.

தல வரலாறு


இந்த ஸ்தலமானது 1990ம் ஆண்டு ஆழ்வார் ஒருவரால் கட்டப்பட்டது. இதற்கு முன்னர் இப்பகுதி வனத்தை போன்று காட்சியளித்தது. அதனை சரிசெய்து ஆழ்வார் தன்சொந்த முயற்சியில் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தை கட்டிமுடித்தார். தமிழகத்தில் இல்லாத ஒன்றான நாதே கண்ணன் அமையப்பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகின்றது. இந்த ஸ்தலம் 2015ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் கண்டது.

சிறப்புகள்

ஆஞ்சனேயர் ஆலயத்திற்கு அருகாமையில் உள் நாதே கண்ணன் ஆலயத்தில் உள்ள விமானத்தை சுற்றிலும் எட்டுதிசையிலும் எட்டு ரிஷிகள் அமர்ந்து, வாயுவை உள்வாங்கி கருவறைக்கு செல்லும் வகையில் அமையப்பெற்றுள்ளது. ஒரே நேர்க்கோட்டில் திருக்குளம், தீர்த்த குளம், தெப்ப குளம் என அமையப்பெற்று மேலும் கோயிலுக்கு சிறப்பு சேர்ந்துள்ளது. 13அடிய உயர வீர ஆஞ்சநேயர் சிலை கம்பீரமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. இந்த வீர ஆஞ்சநேயரை வணங்கி செல்வதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்கலாம், தீராத நோய்கள் சரியாகின்றது, ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கேற்றி, ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சார்த்துவதன் மூலம், சனியால் தடைபட்ட காரியங்கள் சித்தியாகும்.

விழாக்கள்:

சித்திரை மாத தமிழ்வருட பிறப்பு, மார்கழி மாத அனுமன் ஜெயந்தி மற்றும் சொர்க்க வாசல் திறப்பு, கிருஷ்ணஜெயந்தி, பிரதி ஞாயிற்றுகிழமை முழுவதும் சிறப்பு வழிபாடுகள், வருட உற்சவ (பங்குனி) விழாக்கள் என நடைபெற்று வருகின்றது. வருடத்தில் ஒருமுறை ஆஞ்சநேயர் தெப்ப உற்சவம் நடைபெறும். செல்வது எப்படி விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வழியாக 20 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து பட்டாம்பாக்கம் வழியாக 28 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து மடுகரை வழியாக 30 கி.மீ தொலைவிலும் இவ்ஆலயம் அமைந்துள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

Tags : Heroes ,
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...