×

சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ளது வெள்ளலூர் ஊராட்சி. வெள்ளலூரை இப்பகுதியில் உள்ளவர்கள் இன்றளவு வெள்ளலூர் நாடு என்றும் இதன்  அருகேயுள்ள ஐந்து ஊர்களை வெள்ளலூர் நாடு கீழ் உள்ள 5 மாகாணங்கள் என்றும் கூறி வருகின்றனர். வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா  இப்பகுதியில் மிகவும் பிரபலம். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாழ்ந்து வந்த அக்கா தங்கை இருவரில் அக்காவிற்கு குழந்தைகள் இல்லை. தங்கைக்கு ஏழு  குழந்தைகள் இருந்தனர்.

இதனால் தனது தங்கையின் குழந்தைகளை தனது குழந்தைகளாக எண்ணி, அந்த குழந்தைகள் மீது அன்பு செலுத்தி வந்துள்ளாள். தனது குழந்தைகள் தன்னிடம்  காட்டும் பாசத்தை விட தனது அக்காவான அவர்களது பெரியம்மாவிடம் பாசமாக இருப்பதை கண்டாள். அவளுக்குள் குழந்தைகள் பெரியவர்களானதும், நம்மை  விட்டு அக்காவிடமே சென்று விடுவார்களோ என்ற சந்தேகம் அவளிடத்தில் உருவானது. இதனால் ஒரு முறை அக்கா வரும் நேரம் பார்த்து  ஏழு குழந்தைகளை  சேர்த்து உட்கார வைத்து அவர்கள் மேல் கோழிக்கூடையை வைத்து மூடிவிட்டாள்.

குழந்தைகளை பார்க்க வந்த அக்காவிடம் தனது குழந்தைகள் வெளியில் விளையாட சென்று விட்டதாக கூறினாள் ‘‘சரி, கொஞ்சம் நேரம் இருந்திட்டு  போறேன்’’ என்றபடி அவ்விடம் அமர்ந்தாள் அக்கா. பின்னர் நேரம் போய் கொண்டிருப்பதை பார்த்து ‘‘சரி, அந்தி கருக்கல் முன்னாடி நான், என் வீடு போய்  சேருகிறேன்’’ என்று கூறிச்சென்றாள். அக்கா சென்ற பிறகு கூடையை திறந்து பார்த்தாள் தங்கை. அப்போது தனது ஏழு குழந்தைகளும் கற்சிலைகளாக மாறி  இருந்தனர். அதைக் கண்டு கதறி அழுது, தனது அக்காவிடம் நடந்ததை கூறி மன்னிப்பு கேட்டார் தங்கை.

அதனைத் தொடர்ந்து அக்கா வந்து தன் கையில் இருந்த பிரம்பு கொண்டு அந்த கற்சிலைகள் மீது தட்டினாள். மீண்டும் குழந்தையாக மாறினர். இதை நினைவில்  கொள்ளும் வகையிலேயே தற்போதும் ஏழு குழந்தைகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வெள்ளலூர் கிராமத்தில் சிறிய ஏழைக்காத்தம்மன்  கோயில் இருக்கிறது. இங்கிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள குறிச்சிப்பட்டியில் பெரிய ஏழைக்காத்தம்மன் கோயில் உள்ளது. இது அக்கா கோயில் என்றும்,  வெள்ளலூர் ஏழைக்காத்தம்மன் கோயில் தங்கை கோயில் என்றும் சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் இங்கு திருவிழா நடைபெறுகிறது.

முதல் செவ்வாய்கிழமை காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தங்கை ஏழைக்காத்தம்மனின் குழந்தைகளாக இருந்து அக்கா கோயிலுக்கு செல்லும்  விதமாக ஏழு பெண் குழந்தைகளை தேர்வு செய்வார்கள். அந்த குழந்தைகள் பருவம் அடையாதவர்களாக, அதே நேரத்தில் அந்த வயதை யொட்டி இருக்கும் ஏழு  பெண் குழந்தைகளை தேர்வு செய்வார். அதை கோயில் பூசாரி தான் தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்படும் ஏழு பெண் குழந்தைகளுக்கு கையில் காப்புகட்டி,  அம்மனாகவே அலங்கரிக்கப்பட்டு  15 நாட்கள் கடும் விரதம் இருப்பார்கள்.

திருவிழாவின்போது ஏழு சிறுமிகளும் தனது தாயின் வீட்டிலிருந்து பெரியம்மாவின் வீட்டிற்கு செல்வது போல குறிச்சிப்பட்டியிலுள்ள பெரிய ஏழைக்காத்தம்மன்  கோயிலுக்கு செல்கின்றனர். இளம் பெண்கள் தாங்கள் வேண்டியபடி பதுமைகளை ஏந்தி 11 கிமீ. தூரம் நடந்து சென்று குறிச்சிபட்டியில் உள்ள பெரிய  ஏழைகாத்தம்மன் கோயிலை சென்றடைகின்றனர். அதே நேரத்தில் பேரிளம் பெண்கள் ஜாக்கெட் அணியாமல் தென்னை பாலில் உருவாக்கிய மது கலயத்தை  தலையில் ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். ஆண்கள் தங்களது உடல் முழுவதும் வைக்கோலை பிரியாக சுற்றிக் கொண்டு முகத்தில்  அகோர முகமூடிகளை போட்டபடி 11 கிமீ. தூரம் நடந்து செல்கின்றனர்.

முடிவில் ஒவ்வொரு ஆணின் உடலிலும் ரத்த காயமின்றி இருக்க முடியாது. இதுகுறித்து வெள்ளலூர் முத்துலிங்கம் கூறியதாவது: எங்கள் ஊர் ஏழைகாத்தம்மன்  கோயில் திருவிழாவிற்காக 5 மாகாணத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கடும் விரதம் இருப்பார்கள். அந்த 15 நாட்களிலும் பச்சை மரத்தை வெட்ட மாட்டோம்,  புதிதாக வீடு கட்ட மாட்டோம், மண்ணை தோண்ட மாட்டோம், தாளித்த உணவுகளை சாப்பிட மாட்டோம். இப்பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் எந்த உணவும்  தாளிக்க மாட்டார்கள், எண்ணெயை உபயோகிக்க மாட்டார்கள். ஏழைகளுக்குரிய அம்மனாக இருந்து அனைவரையும் காப்பாற்றுபவர் தான் இந்த ஏழைகாத்தம்மன்  என்றார்.

சு.இளம் கலைமாறன்
படங்கள். ரெ.ஜெயகுமார்.

Tags : Goddess ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது