×

குரு பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்

மேஷம்: சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம், சென்னை ராமாபுரத்தில் உள்ளது. நொடியிலே தோன்றி,  நொடியிலே இரண்யனை வதைத்து, நொடியிலே மறைந்த மூர்த்தி, நரசிம்மர். கிருஷ்ணதேவராயரால் விரும்பி வழிபடப்பட்ட இந்த லட்சுமி நரசிம்மனை தரிசித்து  வாருங்கள். தன் மடியின் இடது பக்கத்தில் மகாலட்சுமியை அமரவைத்து அழகே உருவாய் அருள்கிறார். கருவறையில், இடது புறம் அமிர்தவல்லித் தாயார்  அற்புத தரிசனமளிக்கிறார். ராமாபுரம், திருவள்ளுவர் சாலை, கங்கையம்மன் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது. கிண்டி-பூந்தமல்லி  மார்க்கத்தில் முகலிவாக்கம் எஸ் அண்ட் எஸ் கம்பெனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும், வடபழநி-பூந்தமல்லி மார்க்கத்தில் வளசரவாக்கம் பேருந்து  நிறுத்தத்தில் இறங்கியும் இத்தலத்தை அடையலாம்.

ரிஷபம்: ஆஎனும் காமதேனு பசு பூஜித்ததால், ஆவூர் என அழைக்கப்படுகிறது. கோச்செங்கட்சோழன் எடுப்பித்த ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில் இது. தொன்மையான  தலம் இது என புறநானூறு விவரிக்கிறது. இரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் கோட்டையாக சிறப்புற்றிருக்கிறது. தசரத சக்ரவர்த்தி சிவனை பூஜிக்கும்  புடைப்புச் சிற்பமும் அமைந்துள்ளது. இத்தலத்தில் இரண்டு அம்பாள் சந்நதிகள் உள்ளன - மங்களாம்பிகை மற்றும் பங்கஜவல்லி. பங்கஜவல்லியே தேவாரத்தில்  ‘பங்கயமங்கை விரும்பும் ஆவூர்’ என அழைக்கப்படுகிறார். இரு தேவியரும் அபய, வரத ஹஸ்தம் காட்டி வலது கையில் அட்சர மாலையும், இடக் கரத்தில்  தாமரை மலரையும் ஏந்தி அருள்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக திருக்கருக்காவூர் செல்லும் பாதையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

மிதுனம்: இடும்பையால் பூக்கப்பட்டு ஆராதிக்கப்பட்ட தலமாதலால் அவளின் திருப்பெயரிலேயே திருஇடும்பாவனம் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலின் பிரதான  விஷயமே இது பிதுர் முக்தித் தலம் என்பதேயாகும். மூலவராக கருவறையில் சற்குணேஸ்வரர் பேரருள் பொழிந்தபடி வீற்றிருக்கிறார். புராண புருஷர்களால்  ஆராதிக்கப்பட்ட மூர்த்தியை பிற்காலத்தில் வந்த சமயக் குரவர்களான திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரும் திருப்பதிகங்கள் பாடி வழிபட்டனர்.  ஞானசம்பந்தப்பெருமான் இத்தல ஈசனை தரிசிக்க வேண்டுமென நினைத்தவுடனேயே இத்தலத்திலுள்ள மணல்கள் எல்லாம் சிவலிங்கமாக காட்சி தந்தனவாம்.  அதனாலேயே சம்பந்தக் குழந்தை சிவிகை மீதமர்ந்து பயணிக்காமல், கால்களாலும் சிவமணல்களை மிதிக்காமல், தலைகீழாக கைகளாலேயே நடந்து வந்தார்  என்று சொல்லப்படுகிறது. திருஇடும்பாவனம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள திருத்துறைப்பூண்டியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

கடகம்: தமிழ்நாடெங்கிலும் பலருக்கு குலதெய்வமாக இந்த சித்தாத்தூர் அன்னை திகழ்கிறாள். தம் குலதெய்வம் எதுவென்று அறியாத பலர் கனவில் இந்த மாரி  தோன்றி, சித்தாத்தூர் வரும்படி கூறி மறைகிறாள். அதனால் இன்றும் சில பக்தர்கள் தன் குலதெய்வமான இந்த அம்மாவை கண்டுபிடித்துவிட்டதாக கூறி  மெய்சிலிர்க்கின்றனர். கருவறையுள் சுதை வடிவில் அமர்ந்த அம்மனும், கீழே மூன்று சிரசு அம்மன்களையும் கண்டு வணங்கலாம். எண்ணற்றோர் வாழ்வில்  அற்புதங்களையும், திருப்பங்களையும் நிகழ்த்தும் இந்த மாரியம்மனுக்கு ஆடி வெள்ளிக் கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில், ஆரணி -வந்தவாசி பேருந்து சாலையில் ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சித்தாத்தூர்  அமைந்துள்ளது.

சிம்மம்: சென்னை - பொன்னேரிக்கு அருகில் உள்ளது சின்னக்காவணம் கிராமம். இங்கு 500 வருட பழமையான நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  வடமொழியில், அஷ்டோத்ர ஈஷ்வர். ஒரு மாலைப் பொழுதில் இங்கு வந்த அகத்தியர், சிவபூஜை செய்ய விரும்பினார். அருகிலேயே பிரவாகமாக ஓடிக்  கொண்டிருந்த ஆற்று மணலை எடுத்து, அருகிலிருந்த அங்கோள மரத்தடியில் நூற்றியெட்டு சிவலிங்கங்களை உருவாக்கினார். ஆனால், இந்தச் செயலுக்கு  முன்னால் வழக்கமாக அனுசரிக்க வேண்டிய விநாயக பூஜையை செய்ய மறந்துவிட்டார். அதனால் அவர் 108வது லிங்கம் செய்ததும், அவை யாவும் ஒன்று  சேர்ந்து ஒரு விநாயகர் வடிவமாகிவிட்டன! அந்த விநாயகர் மூஞ்சூறு வால் போன்ற மிகச் சிறிய தும்பிக்கையுடன் அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.  தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயக பூஜை செய்து, பிறகு, ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கம் நூற்றெட்டீஸ்வரர் என்கிற பெயரில்  மூலவராகவே அமைந்துவிட்டது. நூற்றெட்டீஸ்வரி எனும் திருநாமத்தோடு அம்மனும் அருள்பாலிக்கிறாள்.

கன்னி: சுருட்டப்பள்ளியில் ஈசன் பள்ளிகொண்டு காட்சி தருகிறார். பொதுவாக விஷ்ணுதான் பள்ளி கொண்டிருப்பார். ஆனால், சிவபிரான் பள்ளிகொண்ட  கோலத்தில் காட்சி தருவதை சுருட்டப்பள்ளியில் மட்டுமே காணமுடியும். விஷம் உண்ட களைப்பில் ஈசன் சுருண்டு படுத்து பள்ளி கொள்ள, அன்னை உமை  அவர் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள். இதனாலேயே இந்த தலம் சுருட்டப்பள்ளி என்றானது; மூலவரும் பள்ளி கொண்டேஸ்வரர் ஆனார். ஆலய  பிராகாரத்தில் பூரண, புஷ்கலா சமேத சாஸ்தா, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாகிக் காட்சியளிக்கும் ஏக பாத மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா,  வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சூரியன் ஆகியோரின் அற்புத விக்ரஹங்களை தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்திக்கு எதிரில் அமர்ந்த நிலையில், வீணை  ஏந்திய சரஸ்வதியையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். சென்னை-திருப்பதி பாதையில், சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் ஊத்துக் கோட்டைக்கு அருகே  சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. திருவள்ளூரிலிருந்தும் செல்லலாம்.

துலாம்: தாமிரபரணி கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒரே இடத்தில் இரண்டு திருப்பதிகள் இருக்கும் காரணத்தினால் அவை இரட்டை திருப்பதி  என்றழைக்கப்படுகிறது. பகவான் சுப்ரபர் எனும் முனிவரிடம்  ‘‘இனி மலர் பறிப்பதற்காக ஆற்றை கடந்து வந்து சிரமப்பட வேண்டாம். இங்கேயே இருந்து  அர்ச்சித்தால் போதும்,’’ என்றார். அது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் தன்னை பக்தர்கள் தாமரை மலர்களால் அர்ச்சித்தால், அவருடைய அனைத்துப்  பாவங்களையும் தான் போக்குவதாகவும் அபயமளித்தார். அதோடு, தான் தாமரை மலர்களை விரும்பி இங்கு நின்றதால் இங்கே தான் அரவிந்த லோசன் என்ற  நாமத்தில் விளங்குவதாகவும் அறிவித்தார். அஸ்வினி தேவர்கள் இரட்டையராக இருந்து இந்த இரண்டு தலங்களையும் வழிபட்டதால் இத்தலம் இரட்டைத்  திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏரல்  செல்லும் வாய்க்கால்கரை சாலையில் தேவர்பிரான் கோயில் அருகே அமைந்துள்ளது.  ஆழ்வார் திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து ஆட்டோ, மினி பஸ் வசதி உண்டு.

விருச்சிகம்: முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் சிவபெருமான், அகத்தியர் மற்றும் அருணகிரிநாதர் மூவரும் ஆவர். அகத்தியர், முருகப் பெருமான்  குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றார். ஒருமுறை அகத்தியர் இந்த கதித்த மலைக்கு வந்தார். ஆண்டவருக்கு பூஜை, நைவேத்தியம் செய்ய  நீரின்றி தவித்தார். அவர் முருகப் பெருமானை வேண்டிக்கொள்ள, முருகனும் காட்சி தந்து மலையில் தம் வேலை ஊன்றி ஓர் ஊற்றை ஏற்படுத்தினார்.  பெருமகிழ்ச்சியுடன் தம் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்ட அகத்தியர் தொடர்ந்து சில நாட்கள் இத்தலத்தில் தங்கி முருகவேலை வழிபட்டார். முருகன் தன்  கூர்வேல் கொண்டு உருவாக்கிய மலை ஊற்று, இன்றுவரை வற்றாமல் நீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. கொங்கு நாட்டின் சிறப்புப் பெற்ற கூனம்பட்டி  ஆதீனத்தோடு தொடர்புடையது இக்கோயில். கதித்த மலை, ஈரோடு மாவட்டத்தில் திருப்பூர் அருகே அமைந்துள்ளது.

தனுசு: கருவறையில் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருட்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம்  தட்சிணாமூர்த்தியும் நர்த்தன விநாயகரும், மேற்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்கின்றனர். உட்சுற்று பிராகாரத்தில் தென்புறம் 63  நாயன்மார்களின் சந்நதி உள்ளது. இறைவன் சந்நதியின் வடபுறம் குபேர மூலையில் இறைவி காமாட்சியம்மன் தனி சந்நதியில் திருக்கோலம் காட்டுகிறாள். சுமார்  800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, கதை  வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில்  குபேரனின் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செட்டிக்குளம்.

மகரம்: அம்மனின் அருளைப் பெற்ற குறி சொல்லும் சிறுவன் ஒருவன் அரசனின் சிம்மாசனத்தின் அடியில் புதைந்திருந்த மர்மத்தை வெளிப்படுத்தினான். மன்னன்  வியப்புற்றான்! அச்சிறுவனின் வேண்டுகோளின்படியே தான் சிறைப்படுத்தியிருந்த குறி சொல்வோரையெல்லாம் விடுவித்தான். சிறுவனோ, ‘உடுக்கையின்  நாதத்தால் அன்னை காமாட்சியின் அருள் காலமெல்லாம் விளங்கிக் கொண்டிருக்கும்,’ என்று தன் கோரிக்கைக்கு விளக்கம் கொடுத்தான். மன்னனும் உடுக்கை  அளித்தான். இன்றும், பெரிய உடுக்கு என்ற பெயருடன் அதனை சத்திரம் ஆலயத்தில் காணலாம். அரிமழத்தில் வாழ்ந்து வருபவர்கள் உருவாக்கியதே சத்திரம்  காமாட்சி அம்மன் ஆலயம். காளையார் கோவிலில் மன்னரால் சிறப்பிக்கப் பெற்றவரும் அன்னையின் அருள் பெற்றவருமான அன்றைய சிறுவனே, இன்று  சத்திரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ‘பாட்டையா’வாகப் பரிமளிக்கிறார். புதுக்கோட்டையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் அரிமழம் சத்திரம் காமாட்சி  அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

கும்பம்: தரணி போற்றும் தாமிரபரணி நதியின் கீழ் பக்கத்திலுள்ள வளமிக்க ஊர்தான் ஆற்றூர். ஆற்றின் கரையில் அழகுற அமைந்ததால் ஆற்றூர்  என்றழைக்கப்பட்டது. பின்னாளில் அதுவே ஆத்தூர் என மருவியது. தல புராண சான்றாக “பசு பால் சொரியும் காட்சி” கோயிலின் மகாமண்டபத்திலுள்ள  அனுக்ஞை விநாயகர் சந்நதியில் தென்மேற்கு மூலையில் சிலையாக வடித்து வைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் முயலகன் மீது அமர்ந்து சின் முத்திரை  காட்டி அருட்பாலிக்கிறார். உள்ளே நுழைந்தால் மகா மண்டபம். இதில் அதிகார நந்தி, சூரியன் ஆகியோர் உள்ளனர். அடுத்து அர்த்த மண்டபம். மூலவராக கர்ப்ப  கிரகத்தில் அகிலத்தையும் காக்கும் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் என்ற இடத்தில் இறங்கி  அங்கிருந்து ஆட்டோவில் கோயிலுக்குச் செல்லலாம்.

மீனம்: பாண்டிச்சேரியில் அருள் புரியும் மணக்குள விநாயகர் டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் போன்ற அந்நிய ஆட்சியாளர்களுக்கும் அருள்புரிந்தவர்.  பிரெஞ்சுக்காரர் ஆட்சிக்காலத்தில் தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி மணல் குளமாக இருந்ததால் மணல்குள விநாயகர் என அழைக்கப்பட்டு நாளடைவில்  மணக்குள விநாயகர் என்று ஆனார். அக்காசாமிகள், சித்தானந்த சாமிகள், அரவிந்தர், வ.வே.சு.அய்யர், மகாகவி பாரதியார் போன்றோர் இந்த மணக்குள  விநாயகரின் குறிப்பிடத் தகுந்த பக்தர்கள். ஆலயம் தங்க முலாம் பூசப்பட்ட விமானகலசத்தோடும், கொடிமரத்தோடும் ஒளிர்கிறது. கருவறையில் மணக்குள  விநாயகரோடு, மற்றுமொரு சிறு கணபதியும், நாகர்களின் திருமேனியும் உள்ளன. பிராகார வலம் வரும் போது நர்த்தனமாடும் கணபதியின் உற்சவ விக்ரகத்தை  தரிசிக்கலாம். ஊர்வலங்களில் இடம்பெறும் இந்த விக்ரகம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பவர். பாண்டிச்சேரியில் புகழ்பெற்ற அரவிந்த ஆசிரமத்திற்கு அருகில்  உள்ளது இத்தலம்.

Tags : Temples of Guru Parish Parikrama ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்