×

திருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி

தேவர்களும் மனிதர்களும் கிடந்து புரண்டு வணங்கும் திருவேங்கட மாமலை. எங்கும் ஒரு இனிமையான மணிக்குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. குரலுக்கு உரியவரும் வேங்கடவனின் கைமணியின் அவதாரம் என்பதால் அவரது குரலை  வெண்கல மணிக்குரல் என்று வர்ணிப்பது தவறாகாது. சாட்சாத் அந்த கருடனே தரிசனம் தந்து இவருக்கு  ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார். இந்த மகான் அதை ஜெபித்து ஹயக்ரீவரின் தரிசனத்தைப் பெற்று, அவரது வாயமுதத்தையும்  உண்டார்.

இப்படிப்பட்ட இவரது பெருமையை எவ்வாறு புகழ்வது? மகிமைகள் அனேகமுடைய வேதாந்த தேசிகர் என்னும் மகானின் குரல்தான் அந்த வெண்கல மணிக்குரல். அவர் வேங்கடவன் சந்நதியில் கண்களில் நீர் வழிய கை குவித்து அஞ்சலி செய்தபடியே  இனிமையான கவிதைகளாகப் பொழிந்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் வேங்கடவன் முன்னே நின்று பாடுவது அவனது பெருமையை இல்லை. அவனது கருணையின் மொத்த வடிவான தயாதேவியின் பெருமையை!. என்றுமே மாலவனிடம் தாயாரின்  பெருமையைப் பேச வேண்டும். தாயாரிடம் பகவானின் பெருமையைப் பேச வேண்டும். இதை முதலில் செய்து காட்டியது வேதம்.
அம்பிகையை புகழும் ஸ்ரீ சூக்தத்தில் பிரார்த்தனை என்னவோ ‘‘ஜாதவேதஸ்’’ என்று அழைக்கப்படும்  மாலவனிடம்தான். வேதம் காட்டும் இந்த நெறியைப் பின்பற்றி நல்ல கதியை அடைந்தது சிறிய திருவடி. ஆம்... அவன் இலங்கைக்கு தூது போனபோது, பிராட்டியிடம் ராமனைப் பற்றியும் ராமனிடம் பிராட்டியைப் பற்றியும் சொல்லிச் சொல்லி  சிரஞ்சீவியாக ஆனான். மூன்றாவதாக இப்போது வேதாந்த தேசிகர், திருமலையில் திருமகளின் பெருமையை திருமாலிடம் கவிதையாகப் பாடிக் கொண்டிருந்தார். அதை நாமும் அருகில் சென்று கேட்போமா?  

‘‘தாயே தயா தேவி! இந்த வையகத்தில் அனைவரும் புதையலைத் தேடி அலைகிறார்கள். இவர்கள் தேடும் இந்தப் புதையல்கள் எளிதில் கிடைப்பதில்லை. அதிக சிரமப்பட்டே அதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இப்படி வெகு சிரமப் பட்டு  புதையலைத் தேடி அலையும்போது, எளிதில் புதையல் விழிகளில் அகப்படுவதற்காக அஞ்சனம் என்னும் ஒரு வகை மையை இட்டுக் கொள்வார்கள். (இது ஒருவகை மந்திரப் பிரயோகம்.)  இங்கு திருமலையில் ரிஷிகளும் முனிவர்களும் தேடித்  திரியும் ஒரு பொக்கிஷம் இருக்கிறது. அது, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனப்படும் நால்வகை புருஷார்தங்களையும் தரவல்லது. முக்கியமாக மோட்சமென்னும் செல்வத்தை தரவல்லது.

திருமலையில் இருக்கும் பெரும் நிதி ஒன்றே. அதை வேறு யாராலும் தர முடியாது. இப்படி அரிய செல்வங்களை அள்ளித்தரும் வேங்கடவனின் பாத கமலங்கள் என்னும் நிதி, புறக்கண்களுக்குப் புலப்படும்படியாக இருக்கிறது. அஞ்சன மையின் உதவியின்றியே பாமரனும் அந்த நிதியைக் காண்கிறான். வேதங்களும் காணா பரம்பொருள் அனைவருக்கும் புலப்படும் படி நிற்பது அதனுடைய தனிப் பெரும் கருணையால் அன்றோ? அந்த  கருணையின் வடிவான ‘‘தயா தேவியே நீ வாழ்க.’’ என்று வேங்கடவனின் தனிப் பெரும் கருணையை போற்றியபடியே தியானத்தில் ஆழ்ந்தார், தேசிகர்.

அவரது இதய கமலத்தில் தயா தேவி எழிலாக காட்சி தந்தாள். அவளது அற்புதத்  தோற்றத்தைக் கண்டுகொண்டே அவரது திருவாய் கவி பாடத் தொடங்கியது.    ‘‘அம்மா தயா தேவி உனது தலைவனான வேங்கடவன் அநேக கல்யாண குணங்களால் நிரம்பியவன். ஆனால், அவனது அத்தனை கல்யாண குணங்களும், நீ ஒருத்தி அவனோடு இல்லை என்றால் ‘‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’’  என்னுமாபோலே, மற்ற அத்தனை குணங்களும் பயனற்றதாகிவிடும். சீதையாக நீ அந்த ராமச்சந்திர மூர்த்தியுடன் இருந்த போது மாபெரும் அபசாரம் செய்த காகாசுரன் ரட்சிக்கப் பட்டான்.

ஆனால், நீ அவனோடு இல்லாத போது, பெரும் தவறு ஏதும் செய்யாத வாலி தண்டிக்கப் பட்டான். ஆக அவனது  ஞானம், தேஜஸ் ஐஸ்வர்யம் பலம் முதலிய குணங்கள் நீ அவனோடு இருந்த போது தீயவனுக்கும் அருளியது . நீ இல்லாத போது பெரும் பாவம் செய்யாத போதும் தண்டிக்கிறது.  மொத்தத்தில் நீ அவன் அருகில்  இருந்தால் தான்  சேதனர்களான  எங்களுக்கு அவனது கல்யாண குணங்கள் நன்மையை செய்கிறது. ஆகவே உன்னை நான் சரணாகதி செய்கிறேன்.’’ திவ்ய மந்திரம், ( வைஷ்ணவத்தில் மிக உயர்ந்த மந்திரம்)  லட்சுமியோடு கூடிய நாராயணனை சரணடைகிறேன் என்று சொன்னதன் பொருளை எவ்வளவு சுவையாக சொல்லிவிட்டார் இந்த  மகான்.

ஹயக்ரீவர் இவரது நாவில் நடனம் ஆடுகிறான் என்பதற்கு இதுவே சாட்சி. தேசிகர் இவ்வாறு கூறியதைக் கேட்ட தயா தேவி, அவரை ஒரு கேள்வி கேட்டாள்.’’உன்னால் கருணையின் சொரூபம் என்று போற்றப்படும் நான், பிரளய காலத்தில் அனைத்தும் அழியும்போது பார்த்துக் கொண்டிருந்தேனே! பிறகெப்படி நான் கருணையின் வடிவானவள் என்று நீ கருதுகிறாய்? பிராட்டி நியாயமான கேள்வியை  கேட்டாள். ஆனால், தேசிகர்  மசியவில்லை. அழகாக பதில் சொல்ல ஆரம்பித்தார். ‘‘தாயே.. தயா! உன்னை சும்மாவா ஆதி சங்கரர் ‘‘ ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளய கேளி சுசம்ஸ்திதாயை.’’ என்று சொன்னார்.

அதாவது உலகை படைத்து காத்து அழிப்பதை  ஒரு விளையாட்டாக செய்கிறாய் என்று சொன்னார்? இதற்கு பின்னே மாபெரும் ரகசியம் இருக்கிறது. ஆம். உலகில் துஷ்டத்தனமும் குறும்பும் செய்து கொண்டு திரியும் குழந்தைகளை இழுத்துப் பிடித்து வலுக்கட்டாயமாக அதனுடைய தாய்  உறங்க வைப்பாள். அந்தக் குழந்தையும் குறும்பை மறந்து கண்ணயர்ந்து விடும். அதுபோல, சம்சாரம் என்னும் நாரச் சேற்றிலே ஆட்டம் போடும் எங்களைப் போன்ற ஜீவாத்மாக்கள், செய்த பாவத்தை அனுபவிப்பதற்காக ஒரு பிறவி  எடுக்கிறோம்.

அந்தப் பிறவியில் மீண்டும் புதிதாக பல பாவங்கள் செய்து, அதை அனுபவிப்பதற்காக ஒரு பிறவியை மீண்டும் எடுத்து மீண்டும் பாவம் செய்து, இப்படி ஓயாமல் துஷ்டத்தனம் செய்கிறோம். இதைத்தான் பகவத்பாதர் ‘‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’’ என்றார் போலும். இவ்வாறு ஓயாமல் ஆட்டம் போடும் எங்களை, தயாதேவியான நீ, பிரளய காலத்தில் இழுத்துப் பிடித்து உறங்கச் செய்கிறாய். பிறவி எடுத்து எடுத்து களைத்திருக்கும் எங்களை மாயவனோடு சேரவைக்கிறாய்.நாங்களும் பிரளய காலத்தில்  மாயவன் வயிற்றில் அடங்கி, ஒரு தற்காலிகமான அமைதியைப் பெறுகிறோம்.

இப்படி உலகத்தின் பிரளயத்திற்கும்  மாலவனின் தயையான நீயே முழு காரணமாக இருக்கிறாய்.   துஷ்டத் தனம் செய்யும் குழந்தையை வலுக்கட்டாயமாக உறங்க வைத்த மாதா, தக்க சமயம் வந்ததும் துஷ்டக் குழந்தையை எழுப்பி, அதற்கு நல்லுபதேசம் செய்து, அது விரும்பும் தின்பண்டங்களைத் தருவாள். அதுபோலவே நீயும் தக்க  தருணம் வரும்போது எங்கள் மீது இரக்கம் கொண்டு, சிருஷ்டியைத் தொடங்குகிறாய். அதாவது, பிரளயம் என்னும் உறக்கத்தில் இருந்து முதலில் எங்களை எழுப்புகிறாய். பிறகு வேதம் முதலிய நல்லுபதேசங்களை உன் பதி கோவிந்தனை  விட்டு எங்களுக்கு தரச் சொல்கிறாய்.

எங்கள் மீது கொண்ட கருணையினால் அல்லவா, நீ இவ்வாறு செய்கிறாய்.அதுமட்டுமா? சம்சாரம் என்னும் திக்குத் தெரியாத  இருள் சூழ்ந்த காட்டில்,எங்களுக்கு ஒளி தந்து காப்பதும் நீ தானே!  நான் என்ன  ஒளி தந்தேன்? என்று கேட்கிறாயா? சொல்கிறேன் கேளம்மா! ‘‘ நீ எங்கள் பால் கொண்ட அன்பே, நெய்யாகவும் அவ்வப்போது எங்களுக்கு தோன்றும் தர்ம சிந்தனையே, திரியாகவும், வேதமே அஞ்ஞானம் என்னும் இருள் போக்கும் சுடராகவும், கொண்ட ஒரு தீ பந்தத்தை ஏந்தி வந்து சம்சாரிகளான எங்களைக் காக்கிறாய். நான் முன்பே சொன்னவாறு எங்கள் மீது கொண்ட அன்பினால், நீ விளையாட்டாக செய்த காரியங்கள் லோக ஸ்ருஷ்டியாகவும், பரிபாலனமாகவும்,  சம்காரமாகவும் ஜொலிக்கிறது.

ஆகவே தான் உன்னை முத்தொழிலையும் அனாயாசமாக செய்பவள் என்கிறார் பகவத் பாதர்.’’ இப்படி தயாதேவியின் புதிரான  கேள்விக்கு அற்புதமான விடை பகர்ந்த தேசிகரின் மீது கருணை பொழிய எண்ணினாள் பிராட்டி. உடன் அவரது மனதை அழைத்துக் கொண்டு வைகுண்டத்திற்குச் சென்றாள். அங்கே பெருமானுக்கும்  பிராட்டிக்கும் நடந்த ஒரு சம்பாஷனை நடந்துக் கொண்டிருந்தது. பாம்பணை மேல் அமர்ந்திருந்தான் பரமன். தயாதேவி மெல்ல அன்னம் போல நடையிட்டு அவனருகில் அமர்ந்து கொண்டு அவனது  தோளில் சாய்ந்துக் கொண்டாள். அழகிய குரலில் பேசவும் ஆரம்பித்தாள்.

‘‘பிரபு நீங்கள் பூலோகத்தில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக  வாசம் செய்யப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?’’ ‘‘முற்றிலும் உண்மை தேவி! ஆனால் எங்கு கோயில் கொள்வது என்று தான் விளங்கவில்லை’’ சிந்தித்த படியே பதில் தந்தான் பரமன்.  ‘‘சுவாமி! தாங்கள் விண்ணுலகில் வாழ்பவர்களுக்கும் பூலோகத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரே தெய்வம். நீங்கள் பூமியில் கோயில் கொண்டால் வானவர்கள் இறங்கி வந்து தங்களை சேவிக்க வேண்டும். ஆனால், மனிதர்களுக்கு சிரமம்  இருக்காது. அதே போல், வானுலகில் கோயில் கொண்டால் தேவர்கள் மட்டுமே தங்களை தரிசிக்க முடியும்.

அது மனிதர்களை வஞ்சித்தது போல் ஆகும்.’’‘‘என் குழப்பத்தை அழகாக விளக்கி விட்டாயே!’’ வியந்தான் மாயவன்.  ‘‘பொறுங்கள்! நான் இன்னமும் முடிக்கவில்லை. பூ உலகில் நீங்கள், மக்கள் உய்ய  வேதம் என்னும் விதையை விதைத்தீர்கள். அது உபநிஷத், இதிகாசம் புராணம் என்று கிளை விட்டு செழித்து வளர்ந்தது.’’   ‘‘அது கிளைத்து வளர்ந்ததற்கு நீ, உன் கருணை வெள்ளத்தை பூமி என்னும் வயலில் தக்க சமயம் பார்த்து பாய்ச்சியதே காரணம். அதையும் மறந்து விடாதே’’ மாதவன் குறுக்கிட்டான்.

‘‘போதும் புகழ்ச்சி. கேளுங்கள்.!’’ புகழ்ச்சியை புறக்கணித்து விட்டு பிராட்டி தொடர்ந்தாள். ‘‘சாஸ்திரங்களை, சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, புதிய போலி மதங்கள், என்னும் களையை பூமி என்னும் வயலில் ஏற்படுத்தினார்கள்.  அப்போது தாங்கள் நம்மாழ்வார், நாதமுனிகள், யாமுனர், ராமானுஜர் போன்ற ஆச்சார்ய புருஷர்களை  கொண்டு அந்தகளையை களைந்தீர்கள். இப்போது அந்த ஆச்சார்ய புருஷர்கள் வளர்த்த ஞானம் என்னும் பயிரைக் காக்க வேண்டியது விதைத்தவரான தங்களது கடமை அல்லவா?

ஆகவே பூமியில் உயரமான இடமான திருமலையில்  எழுந்தருளுங்கள். ஒரு விவசாயி எப்படி பரண் மீது நின்றுக் கொண்டு பயிரைக் காப்பானோ, அப்படி நீங்களும் திருமலை என்னும் பரணில் ஏறிக் கொள்ளுங்கள். பக்தர்களைக் காத்தருளுங்கள். அப்படி நீங்கள் உயர்ந்த ஒரு பரணில்  நின்று  கொண்டால் வானவர்கள் உங்களை இறங்கி வந்து சேவிப்பார்கள். மண்ணவர்கள் மலை ஏறி வந்து சேவிப்பார்கள்.

இப்படி செய்வதால் இரு பிள்ளைகளுக்குள் பாரபட்சம் பார்க்காதது போலாகி விடும்.’’ என்று சொல்லி பிரட்டி ஒரு மர்மப்  புன்னகை பூத்தாள். அவள் கூறிய யோசனையை வியந்த படியே மாயவன் வேங்கட மலைக்கு கிளம்ப ஆயத்தமானார். காட்சி மறைந்தது. இப்போது தேசிகரின் மனம் வேங்கட மலைக்கு திரும்பி வந்து விட்டது. ஆனால் வைகுண்டத்தில் அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்கச் செய்திருந்தது.

ஜி.மகேஷ்

Tags : Thirumalayappan ,Darsitha Dayadevi ,
× RELATED புரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும்