×

யுகங்கள் நான்கிலும் தீபாவளி

ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகையில், அதிலிருந்து அமுதமும் லட்சுமி தேவியும் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றிய லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாகத் தேவர்களும் முனிவர்களும் வரிசையாகத் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். வடமொழியில் ‘ஆவளி’ என்றால் வரிசை. (இறைவனின் திருநாமங்களை வரிசையாகச் சொல்லும் போது அதை ‘நாமாவளி’ என்று சொல்கிறோம் அல்லவா?) லட்சுமி தேவியை வரவேற்கும் பொருட்டு வரிசையாகத் தீபங்கள் ஏற்றப்பட்டதால், இந்நாள் ‘தீபாவளி’ (தீப + ஆவளி, தீபங்களின் வரிசை) என்று பெயர் பெற்றது.

‘லட்சுமி பூஜை’ என்ற மற்றொரு பெயரும் தீபாவளிக்குப் பண்டிகைக்கு உண்டு. லட்சுமி தேவி தோன்றியதைக் கொண்டாடும் விதமாக நிறைய பட்சணங்கள் செய்து தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம். அனைத்து நோய்களையும் குணப்படுத்தவல்ல அமுதம் இந்நாளில் தோன்றியதன் நினைவாகத் தான் தீபாவளி மருந்து தயாரிக்கப் படுகிறது. நான்கு யுகங்களுள் முதல் யுகமான கிருத யுகம் தொடங்கியே இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பெற்று வருவதாகப் பாஞ்சராத்திர ஆகமம் கூறுகிறது. அப்பய்ய தீட்சிதர் என்னும் மகான், தனது யாதவாப்யுதய விளக்க உரையிலும் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

இரண்டாவது யுகமான திரேதா யுகத்தில், விஜயதசமி அன்று ராவணனை வீழ்த்திய ராமன், சீதையோடு அயோத்திக்குள் நுழைந்த தினம் ஐப்பசி மாத அமாவாசையாகும். எனவே, சீதா ராமர்களை நாட்டுக்குள் வரவேற்கும் விதமாகவும் தீபங்கள் ஏற்றி இந்நாளை நாம் கொண்டாடுகிறோம். மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில், நரகாசுரன் என்னும் அசுரனைக் கண்ணன் வதம் செய்த நாள், ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியின் இரவு ஆகும் (ஐப்பசி அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு). இறக்கும் தருவாயில் இருந்த நரகாசுரன், “நாளைய தினம் மக்களுக்கு நல் விடிவாக விடியவுள்ளது.

எனவே நாளை (ஐப்பசி அமாவாசை அன்று) விடியற்காலையில் யாரெல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடுகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் கங்கையில் நீராடிய புண்ணியத்தை நீ அருளவேண்டும். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு ஐப்பசி அமாவாசை காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர்க்கு இவ்வருளை நீ புரிய வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டு உயிர்நீத்தான். இதன் விளைவாகவே ‘நரக சதுர்த்தசி ஸ்நானம்’ என்பது ஏற்கனவே ஐப்பசி அமாவாசையில் கொண்டாடப் பட்டு வந்த தீபாவளியோடு இணைக்கப்பட்டது.

அதனால் தான் தீபாவளி அன்று விடியற்காலையில் கங்கா ஸ்நானம் செய்து விட்டு, அதன்பின் தீபங்கள் ஏற்றியோ, அல்லது பட்டாசுகள் கொளுத்தியோ ஒளிமயமாக நாம் கொண்டாடி வருகிறோம். கலியுகத்தில் பக்தி நெறியை வளர்ப்பதற்காகத் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினார்கள். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய முதல் மூன்று ஆழ்வார்களும் நாம் தீபாவளியைக் கொண்டாடும் மாதமான ஐப்பசி மாதத்திலேயே தோன்றினார்கள். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாரும், அவிட்ட நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாரும், சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாரும் அவதரித்தார்கள். அவர்கள் மூவருமே தீபங்கள் ஏற்றித் திருமாலை வழிபட்டார்கள்.

முதலாழ்வாரான பொய்கை ஆழ்வார்,

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.”

என்ற பாடலில், உலகையே அகல் ஆக்கி, கடல் நீரையே நெய்யாக்கி, சூரியனைச் சுடராக்கித் தீபம் ஏற்றித் திருமாலைப் போற்றினார்.

இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார்,

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புனைந்த நான்.”

என்ற பாடலில், அன்பையே அகல் ஆக்கி, ஆர்வத்தையே அதில் நெய்யாக விட்டு, சிந்தையையே திரி ஆக்கி, ஞானம் என்னும் விளக்கை ஏற்றினார். இவர்கள் இருவரும் ஏற்றிய தீபங்களால் இருள் நீங்கவே, மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார், அந்த விளக்கொளியில்,

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.”

என்று திருமாலைத் தரிசித்து மகிழ்ந்தார். இவ்வாறு அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளியைத் தரவல்ல திருநாள் இந்த தீபாவளித் திருநாளாகும்.

குடந்தை உ.வே.வெங்கடேஷ்

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...