×

தக்க சமயத்தில் அருள்வாள் தாயினும் நல்லவள்

தாயினும் நல்லவள் இது வார்த்தை இல்லை, திருநாமம். ஆம், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள மிரட்டுநிலை என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் அருள்பாலிக்கும் அம்பாளின் பெயர் தாயினும் நல்லவள். சிவனின் நாமம் ஸ்ரீ அடியார்க்கு எளியவர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திற்குட்பட்டது மிரட்டுநிலை கிராமம்.  இந்த ஊர்  புதுக்கோட்டைக்கு தெற்கில் 12.கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மிரட்டுநிலை ஊருக்கு வடபுறத்தில் ஸ்ரீதாயினும் நல்லவள் சமேத அருள்மிகு ஸ்ரீஅடியார்க்கு எளியவர் என்ற சிவன் கோயில் உள்ளது. சிவன்கோயில் அருள்மிகு ஸ்ரீஅடியார்க்கு எளியவர் என்ற இச்சிவன் கோயில் ஊரின் மேல்புறமுள்ள தீர்த்தக்குளம் என்ற ஊரணியின் வடகரையில் செங்கல் கட்டுமானத்தாலான ஒரு சிறிய சுற்று மதிலுக்குள் சின்னஞ்சிறிய கோயிலாக இருந்தாலும், அழகிய எழிலுடனும், வனப்பு மிகுந்த வடிவுடனும், கருவறை அர்த்த மண்டபம், இடைக்கட்டு என்ற உண்ணாழி, மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியவைகளைக் கொண்ட எழில் தோற்றத்துடன் காட்சி தருகிறது.

கட்டடக்கலையும், வனப்பும் அதன் தன்மையும், கருவறை அதிட்டானம் தொடங்கி வியாழவரி என்ற கூரை வரை கருங்கல்லாலும் அதற்கு மேல் விமானம் செங்கல் சுண்ணாம்பு, கலவையாலும் கட்டப்பட்ட அமைப்பைக் கொண்டதாகும். அதிட்டானம், உபானம் அதற்கு மேல் ஜகதி அடுத்து கண்டம் என்ற உள்வாங்கிய அமைப்பு மூன்று பட்டைகளாலான முப்பட்டைக்குமுதம், கண்டம் என்ற உள்வாங்கிய அமைப்பு வேதிகை, வேதிகைக்கு மேல் சுவர், சுவருக்கு மேல் எழுதகம் (வியாழவரி) என்ற பிரஸ்தரம் யாழிவரி முதலான கூரை, அதற்கு மேல் விமானம், கலசம் ஆகிய அங்கங்கள் என்ற உருப்பினைக் கொண்டதாகக் இக்கோயில் அமைந்துள்ளது.

கருவறையில் தெற்கு, மேற்கு, வடக்கு என மூன்று பக்கங்களிலும் மூன்று தேவகோட்டங்களும், அர்த்த மண்டபத்தில் தெற்கு மற்றும் வடக்கு பக்கங்களில் இரண்டு தேவகோட்டங்களும் (அதாவது தெய்வங்கள் வைக்கும் மாடங்கள்) ஆகியவைகளைக் கொண்டவையாக உள்ளன. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றின் சுவர்களில் ஆங்காங்கே அரைத்தூண்கள் கட்டப்பட்டுள்ளன. அரைத்தூண்கள் என்பது இயல்பாக அமைக்கப்படும் முழுமையான வடிவ தூண்களைப் போன்று இல்லாது சுவர் கற்களில் தூண்கள் வடிவம் தெரியவேண்டும் என்ற அழகுணர்வின் பொருட்டு அரைத்தூண்களின் வடிவம் அடிமுதல் நுனிவரை அரை வடிவில் அதாவது தூண் பாதியாக தெரியுமாறு அரைத்தூண்கள் அமைந்துள்ளன.

அரைத்தூண்கள் எப்போதும் பாதம் என்ற அடியும், அதற்கு மேல் கால், காலிற்கு மேல் கலசம், கலசத்திற்கு மேல் குடம், குடத்திற்கு மேல் பலகை ஆகியவைகளைக் கொண்டவையாக உள்ளன. கருவறையின் தேவகோட்டம் என்ற தென்பக்கமுள்ள மாடத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு தேவகோட்டத்தில் அதாவது லிங்கோத்பவர் என்ற அண்ணாமலையார் உருவச்சிலையும், வடபுறமுள்ள தேவகோட்டத்தில் (மாடத்தில்) பிரம்மாவும் அர்த்த மண்டபத்தின் வடபுறம் உள்ள தேவகோட்டத்தில் விஷ்ணு, துர்க்கையும் காட்சி தருகின்றனர்.

தேவகோட்டங்களிலுள்ள பரிவார தேவதைகள் போக, மூலப்பிள்ளையார், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனியாக கோயில்களும், அவைகள் ஒவ்வொன்றிலும் சிறு சிறு விமானங்களும் அமைந்துள்ளன. நந்தி, சந்திரன், சூரியன் முதலான தெய்வங்களும் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. நவகிர சந்நதி ஒன்றும் உள்ளது. தாயினும் நல்லவள் என்ற இக்கோயில் அம்பாள் முன் மண்டபத்திற்கு வடக்கில் கருவறை அர்த்த மண்டபம் ஆகியவைகள் அமைந்து தெற்கு பார்த்த கோயிலாக முன் மண்டபத்தில் முகப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்பாள் கோயிலின் கட்டிட அமைப்பு சுமார் 500 ஆண்டுகள் பழமையுடைதாகும். ஆனால் இங்குள்ள அம்பாளின் சிலையை யாரோ ஒருவர்  பக்கத்தில் உள்ள தீர்த்தக்குளத்தில் தூக்கிக் கொண்டு போட்டுவிட்டனர். அதனால் அந்த இடத்தில் புதிய ஒரு அம்பாள் சிலையை வைத்தனர். ஆனால் அந்த அம்பாள் சக்தி வாய்ந்த சிலை என்பதால் அங்குள்ள தீர்த்தக்குளம் தூர்வாரும் போது கண்ணில் தென்பட்டது அதனால் மீண்டும் அந்த அம்பாளை கொண்டு வந்து பைரவர்க்கு பக்கத்தில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி கோயிலின் கருவறையில் இறைவன் லிங்கவடிவில் மூலவராக உள்ளார். லிங்கம் தானே தோன்றியதாக அதாவது சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார்.

கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபம் இதில், கணபதி வைக்கப்பட்டுள்ளார். கருவறை தெற்கு கோட்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஞானத்தை முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் கீழ் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடக்கி வலது காலினை முழங்காலில் இருக்குமாறு அமர்ந்து நான்கு கரங்களில் வலது முன் கையினை அஞ்சாதே என்ற குறிப்பு காட்டும் கையை விரித்தவாறுள்ள அபயமுத்திரையிலும் வலது முன் கை அல்லது வலது மேல் கையில் அக்கமாலையை கையில் பிடித்தவாறும், இடது முன்கை அல்லது கீழ் கையினை இடது தொடை மீதும் வைத்தும், இடது பின் கையில் நாகத்தை பிடித்தவாறும் சிவன் தனக்கே உரிய அம்சத்தோடு ஞானத்தை உபதேசிப்பவராகக் காணப்படுகிறார்.

தட்சிணாமூர்த்தியின் தொங்க விட்ட கால் முயலகன் என்ற அசுரனின் உடல் மீது உள்ளவாறு உள்ளது. இங்குள்ள அடியவர்க்கு எளியவரை தொடர்ந்து அடிபணிந்து வேண்டுபவர்கள் வேகமாக வாழ்க்கையில் முன்னேறுகின்றனர். அதுபோல தாயினும் நல்லவள் என்ற திருநாமத்தில் அம்பாள் விளங்குவதால் அனைவருக்கும் இந்த அம்பாள் தாயிக்கு மேலாக விளங்குகிறாள். அதைவிட தாய் இல்லாதவர்கள் இந்த தாயை வந்து வேண்டினால், மற்ற பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாதுகாப்பாள் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்: ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை, நவராத்திரி விழா, பிரதோஷம் ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அதுபோல தைப்பூசம், பொங்கல், சித்திரை திருவிழா ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் 1 மணிவரை மட்டுமே கோயில் திறந்திருக்கும். இக்கோயிலுக்கு புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் பேருந்தில் ஏறி மிரட்டுநிலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் கோயில் அமைந்துள்ளது.

புதுகை - பொ.ஜெயச்சந்திரன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?