×

செடி, கொடிகள் மண்டிய நிலையில் வேலூர் பாலாற்றில் கலந்தோடும் கழிவுநீர்

வேலூர்: வேலூர் பாலாற்றில் செடி, கொடிகள் வளர்ந்துள்ள நிலையில் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.வேலூர் மாவட்டத்தின் ரேகையாய் ஓடும் பாலாறு கடந்த ஆண்டு இறுதியில் பெய்த தொடர் மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளப்பெருக்கை கண்டது. வழக்கமாக தொடர் மழையின்போது பாலாற்றில் பரவலாக இருகரையையும் தொட்டபடி தண்ணீர் சில நாட்களுக்கு மட்டும் ஓடும். அல்லது ஓரிரு மாதங்கள் ஓடையாய் பாலாற்றில் தண்ணீர் ஓடும். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழை பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. சில நாட்களில் வெள்ளப்பெருக்கு வடிந்து சிறிதளவு தண்ணீர் பரவலாக இருகரையம் தொட்டப்படி ஓடியது. அதன் பின்னர் படிப்படியாக நீர்வரத்து குறைந்தது. அதேநேரத்தில் தொடர்ந்து அடிக்கடி பெய்யும் மழை காரணமாக இந்தாண்டு ஓடையாக பாலாற்றின் ஒரு பக்கம் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் பாலாற்றில் குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கேற்ப பாலாற்றில் தடுப்பணைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையின் நீராதாரப்பிரிவு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் பாலாற்றில் விருதம்பட்டு மற்றும் புதிய பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் கழிவுநீர் தாராளமாக வந்து பாலாற்றில் ஓடையாக ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கலந்து வருகிறது. அதேபோல் பாலாற்றில் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியிருக்கும் நீரை மறைத்தபடி செடி, கொடிகள் முளைத்து பாலாற்றின் தோற்றத்தை மாற்றியிருக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினர் பாலாற்று படுகையை தொடர்ந்து கண்காணித்து அங்கு கழிவுநீர் கலப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதோடு பாலாற்றுபடுகையில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செடி, கொடிகள் மண்டிய நிலையில் வேலூர் பாலாற்றில் கலந்தோடும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Vellore dam ,Vellore ,Vellore Balam ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...