×

பெருமாளை வேண்டி குரு பகவான் தவமிருந்த குருவித்துறை

மதுரையிலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ளது குருவித்துறை. பண்டைய காலத்தில் ‘குரு  வீற்றிருந்த துறை’ என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் காலப்போக்கில்  ‘குருவித்துறை’ என்று மருவியது. இங்கு பழமையான சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் உள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார். கோயிலில் கொடிமரம் உள்ளது. இந்த கோயிலின்  எதிரில் குரு பகவான் கோயில் உள்ளது. மூலவராக குரு பகவானும், அருகே  சக்கரத்தாழ்வார் சிலையும் உள்ளது. பெருமாளை நோக்கி குரு பகவான் தவக் கோலத்தில் காட்சியளிப்பது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.  ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலில் இந்த கோயிலின் பெருமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தல வரலாறு

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரிடம் ‘மிருதசஞ்சீவினி மந்திரத்தை கற்று வரும்படி குரு பகவானின் மகன் கசனை தேவர்கள் அணுகினர். சுக்கிராச்சாரியாரிடம் சென்று தனக்கு மந்திரத்தை கற்று தரும்படி கசன் வேண்டினார். இதற்கு சம்மதம் தெரிவித்த  சுக்கிராச்சாரியாரும், கசனுக்கு பயிற்சியளித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அசுரர்கள், கசனை தீயிலிட்டு சாம்பலாக்கினர். பின்னர்  சுக்கிராச்சாரியாருக்கு ஒரு பானத்தில் அந்த சாம்பலை கலந்து கொடுத்தனர்.

பின்னர் சுக்கிராச்சாரியார், கசன் தனது வயிற்றில்  இருப்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தார். ‘மிருதசஞ்சீவினி’ மந்திரத்தை  பயன்படுத்தி கசனை மீண்டும் உயிர் பெற செய்தார். தனது மகள் தேவயானியை மணம் செய்து கொள்ளுமாறு கசனிடம், சுக்கிராச்சாரியார் கூறினார். சுக்கிராச்சாரியார் வயிற்றிலிருந்து உயிர் பிழைத்து வந்ததால், தேவயானி தனக்கு சகோதரி முறை வேண்டும் என்று கூறி, கசன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த தேவயானி, சப்த பர்வத மலைக்குள் புதைந்து போகுமாறு கசனுக்கு சாபமிட்டாள்.

இதற்கிடையே கசனை காணாமல் தவித்த குரு பகவான், வைகை நதிக்கரையில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். அவர் முன்பு  தோன்றிய பெருமாளும், கசனை மீட்டு குரு பகவானிடம் ஒப்படைத்தார். இந்த  நிகழ்வுக்கு பின்னர் குரு பகவான் அந்த இடத்தில் பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து சித்தர ரத வல்லப பெருமாள் என்று பெயர் சூட்டி வணங்கினார். இந்த நிகழ்வையொட்டி பாண்டிய மன்னர்களால் இங்கு குரு பகவான் கோயில் கட்டப்பட்டது என்பது புராணம்.

********
திருமண பாக்கியம், தம்பதியர்  ஒற்றுமை, தொழில் மற்றும் கல்வியில் மேன்மை உள்ளிட்டவற்றை இங்கு வரும் பக்தர்களுக்கு குரு பகவான் வழங்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை படைத்து, சிறப்பு பூஜை செய்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி  நடக்கிறது. இந்தாண்டு குருப்பெயர்ச்சி வரும் செவ்வாய் கிழமை (அக்.29 தேதி) நடக்கிறது. அன்று அதிகாலை 3.39 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.

இதையொட்டி இங்கு வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு குரு பகவான் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு லட்சார்ச்ச பூஜை துவங்குகிறது. 28ம் தேதி இரவு 8 மணி வரை இந்த பூஜை நடக்கிறது. 29ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு பரிகார மகாயாகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 3.49 மணிக்கு புனித நீர் ஊற்றி குரு பகவானுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இந்தாண்டு ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் குரு பகவானுக்கு பரிகார பூஜை செய்து வழிபட வேண்டும்.

Tags : Guru Bhagavan ,Perumal ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...