×

தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் செண்பகவல்லி அம்மன்

- கோவில்பட்டியில் அருள்பாலிக்கிறாள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மிகவும் பிரசித்தி  பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில்  அமைந்துள்ளது. இக்கோயிலானது முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் வரலாறு சிறப்பு வாய்ந்ததாகும். ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன்செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை நோக்கிப் பயணமானார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்திரம் நீங்கப்பெற்றார். பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார்.

வெள்ளிமலை சிவக்குழவைச் சார்ந்த வாமனன் நந்திதேவரின் சாபத்தால் வெம்பக்‌கோட்டையில் ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். இக்கோயிலில் இறைவனும், இறைவியும் தனித்தனி கோயில்களில் எழுந்தருளி கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதால் சுவாமி அம்பாள் திருவாயில்கள் தனித்தனியாக உள்ளன. இதில் அம்பாள் திருவாயிலில் சுவாமி அம்பாள் திருமண காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைகோபுரம் உள்ளது.

சுவாமி சன்னதி முன்பு 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரமும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தினமும் பூஜைகள் காமிகா ஆகமப்படி 5 காலங்களாக நடந்து வருகிறது. இதில் காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், காலை 8 மணிக்கு விளாபூஜையும், பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8.30 மணிக்கு அர்த்தசாமம் பூஜையும் நடந்து வருகிறது. ஞாயிறு வார வழிபாடு, பிரதோஷ வழிபாடு போன்ற பல்வேறு வாராந்திர, மாதாந்திர சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

ஆண்டுதோறும் வசந்த உற்சவ திருவிழாவும், ஆடிப்பூர வளைகாப்பு திருவிழாவும், நவராத்திரி திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும், பங்குனி பெருந்திருவிழாவும் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ஐப்பசி திருக்கல்யாணம் மற்றும் பங்குனி பெருந்திருவிழாவின்போது தேரோட்டம், தீர்த்தாரி திருவிழா, தெப்பத்தேரோட்டம் நடக்கும். 11 நாட்கள் நடக்கும் பங்குனி பெருந்திருவிழாவில் கோவில்பட்டி மற்றும் வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. தீராத வினைகளை தீர்த்துவைக்கும் செண்பகவல்லி அம்மன் தன்னை நம்பி வருவோருக்கு சகல நன்மைகளையும் செய்து வருகிறாள்.

Tags : Shenbagavalli Amman ,
× RELATED தீராத பிணிகளை தீர்த்து வைக்கும் செண்பகவல்லி அம்மன்