×

பொதிகைத் தமிழ் வளர்த்த புகழ் வாணி

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாகிய பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்

 - என்றெல்லாம் பாரதி கலைமகள் உறையும் இடங்களைப் பட்டியலிட்டு உரைப்பார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலைமகள் தமிழ்ப் புலவர்களாய்த் தரணியில் வந்து அவதாரம் செய்து, ஆலவாய் என்னும் அணிநகரில் இருந்த சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் வளர்த்த சிறப்பினைத் திருவிளையாடற்புராணம் தெளிவாக எடுத்துரைக்கும்.  பாண்டிய நன்னாடு, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாம் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியின் கரையில் இருக்கும் மதுரையம்பதியில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமையை உடையது ஆகும். இச் சங்கத்து நாற்பத்தெட்டு புலவர்கள் இருந்து தமிழ் ஆய்ந்ததாகவும் அவர்களுள் நாற்பத்தொன்பதாம் புலவராய் கண்ணுதற் கடவுளாகிய சிவபெருமான் தோன்றி தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் அருள் செய்ததாகவும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது. மேற்கண்ட செய்தி தொடர்பான நிகழ்வினை திருவிளையாடற் புராணத்தின் வழி காண்போம்.

பாண்டிய நன்னாட்டினை வங்கிய சேகர பாண்டியன் செங்கோல் வழுவாது ஆண்டு கொண்டிருந்த காலம். அக்காலத்தில் ஒரு நாளில், கங்கையின் அழகிய துறை அமைந்த அழியாத காவலையுடைய மதில் சூழ்ந்த காசியில் தாமரைமலரில் உறையும் பிரம்மன், வேள்வி ஒன்றினைத் தேவர்கள் மகிழும் வண்ணம் மறைவழி போற்றிச் செய்தான். வேள்வி முடித்த பின்னர் ஒரு நாளில், நீராடும் எண்ணம் கொண்டு கலைமகளும், சாவித்திரியும் மந்திர வடிவாகிய காயத்திரியும் தன்னைச் சூழ்ந்து வர கங்கையாற்றினை நோக்கிச் சென்றான். அவ்வாறு செல்லும் பொழுது வானின் வழியே சென்ற ஒரு காந்தர்வ உலகத்துப் பெண் பாடுகின்ற இசையில் உள்ளம் பறிகொடுத்து நின்றாள் கலை மகள்.

தாமரையிற் தோன்றினவனாகிய தெளிந்த அறிவினையுடைய பிரம்மன் நதிக்கரையைச் சேர்ந்தான். கலைவாணியின் வருகை தாமதமானதால் மற்ற இரண்டு பெண்களோடும் பிரம்மன் நீராடிக் கரையில் ஏறினான். அப்போது அங்கு வந்த கலைமகள் பிரம்மனிடம் சென்று, நான் வராமல் மற்ற இரண்டு பெண்களுடன்  நீ நீராடியது ஏன்? எனச்  சினம் கொண்டாள். அதனைக் கேட்ட பிரமன் கந்தர்வலோகப் பெண்ணின் இசையில் மயங்கி நின்று காலம் தாழ்த்தி வந்தது உன்னுடைய குற்றம் ஆக அதனை உணராது  என்மேல் கோபம் கொண்டது எவ்வகையில் சரியானதாகும் என்றான். மேலும்  இத்தகைய குற்றத்தை செய்த நீ  நாற்பத்தெட்டு மனிதர்களாய்த் தோன்றி இப்பாவத்தினை அனுபவிப்பாய்! என்றும்  சாபமிட்டான். அச்சாபத்தைப் பெற்ற கலைமகள் அஞ்சிப் புலம்பித்  துன்பமுற்றாள்.

பின் பிரம்மனிடம் உனது அரிய உயிர்த்துணையாகிய நான், இந்த மனிதப் பிறப்பெடுத்து மயங்குவேனோ! என்று கூறி நின்றாள். கலைமகளுக்கு இரங்கிய பிரம்மன் கலைமகளே! உனது  வடிவமாகிய ஐம்பத்தொரு முதலெழுத்துக்களில், விளங்குகின்ற   ஆகாரம் முதல் ஹாகாரம் இறுதியாக உடைய நாற்பத்தெட்டு எழுத்துக்களும், நாற்பத்தெட்டுப் புலவர்களாகி, நிலவுலகில், அவதரித்திடுவதாக என்று அருளினார். நாற்பத்து எட்டு எழுத்தாவன வடமொழி உயிரெழுத்தில் ஆகாரம் முதலிய பதினைந்து எழுத்துகளும் ககரம் முதலிய முப்பத்து மூன்று எழுத்துகளும் கூட்டப்படுவதால் வருவன ஆகும். ஏனைய மூன்றெழுத்துகள் சுட்டெழுத்துகள் ஆதலின் நீக்கப்பட்டன.

இதனை, முகிழ்தரு முலைநின் மெய்யா முதலெழுத்து ஐம்பத்து ஒன்றில் திகழ்தரு
ஆகா ராதி ஹாகார மீறாச் செப்பிப் புகழ்தரு
நாற்பத் தெட்டு நாற்பத்தெண்
புலவ ராகி அகழ்தரு கடல்சூழ் ஞாலத் தவதரித் திடுவ வாக.

 - என்ற திருவிளையாடல் புராணப் பாடல் விளக்கி நிற்கும். மேலும் இவ்வாறு வரும் நாற்பத்தெட்டு எழுத்துகள் அனைத்திலும் ஊர்ந்து நின்று, அந்த எழுத்துக்களின் உண்மைத் தன்மையுடன் கூடி, அவற்றை வெவ்வேறு தன்மையுடையனவாய் இயங்கச் செய்யும் ஆற்றல் பெற்றது அகரம் ஆகும். அத்தகைய சிறப்புடைய அகரத்திற்கு முதல்வனாய் உள்ள, ஆலவாய் அண்ணலாகிய சோமசுந்தரக் கடவுள் தாமும் ஒரு புலவராய்த் தோன்றி, சங்கப் பலகையில் நாற்பத்தொன்பதாவது புலவராய் இருந்து அந்நாற்பத்தெட்டு புலவர்க்கும் அறிவை விளக்கி, அரணாகப் புலமையைக்  காத்தருளுவர் என்று பிரம்மன் கூறினான்.

இதனை,

அத்தகு வருணம் எல்லாம் ஏறிநின்று அவற்ற வற்றின்
தாமொரு புலவ ராகித் திருவுருத் தரித்துச் சங்க
மாமணிப் பீடத் தேறி வைகியே நாற்பத் தொன்பது
ஆமவ ராகி உண்ணின் அவரவர்க்கு அறிவு தோற்றி
ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப் புத்தேள்.

- என்ற பாடலால் அறியலாம்.

பிரம்மன் கூறியவாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும் அவ்வழி வேறுவேறு புலவர்களாய்ப் பிறந்தனர். அவர்கள் பல சிறப்புடைய  கலைகளின் வகைகளைத் தெரிந்து ஆரிய மொழியையும் மற்றைய பதினெட்டாகத் தொகுக்கப்பட்ட மொழிகளையும் ஆராய்ந்து, பெருமை வாய்ந்த தமிழ்க்கலையின் நுண்ணிய தன்மைகளையும் தெரிந்து தலைமை பெற்றனர். மேலும், அவர்கள் மணிகளாலும் வைரங்களாலும் புனையப்பெற்ற அணிகலன்களுடன் ருத்ராட்ச மாலையாகிய  மணிக்கலனையும் அணிந்து  நிலாப்போன்ற  திருநீற்றினை நெற்றியில் தரித்த மேனியையுடையவராய்ச் சிறந்த  சொற்களாற்  தொடுக்கப்பட்ட பாடல்கள் ஆகிய பாமாலைகளுடன்  புதிய  மலர் மாலைகளையும் வைத்துச்  சிவ வழிபாடு செய்து வந்தனர்.

மேலும் நாடுகள் தோறும் சென்று, புலமைத் திறத்தால் அங்குள்ள புலவர்களை எல்லாம்  வென்று, பகைவரது நிலத்தைத் தனது போர்த்திறனால் வென்ற செல்வத்தினையுடைய பாண்டியனது, செங்கோலால் நன்மை பொருந்திய மதுரையை நோக்கி வந்தனர். அங்ஙனம் அவர்கள் வரும்பொழுது மாட்சிமைப்பட்ட தேர்ச்சியை உடைய மறையின் பயனாய்  நிலைபெற்ற ஞானமூர்த்தியும் எம் தந்தையும் ஆகிய மதுரைப் பிரானாகிய சோமசுந்தரக்கடவுள் அங்கு, கல்வியும் கேள்வியும் நிறைந்த புலவராகி, சொற்களால் வருணிக்க இயலாத தன் திருவடிகள் நிலத்திற் தோய நடந்து வந்தார்.

அவ்வாறு வந்த சோமசுந்தரக் கடவுள் நாற்பத்தெட்டு புலவர்களை நோக்கி,  நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்? என்று கேட்டார். அதற்குப் புலவர்கள், பெருமிதமுடைய காளை வாகனம் போல்வீர், நாங்கள் புலவர்கள். தன்னை அடைந்தாரது  பாவத்தைப் போக்கும், பொருநை சூழ்ந்த பாண்டி நாட்டில் இருந்து வந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறினர். அதனைக் கேட்ட அளவில் தனியே வந்த புலவராகிய  சோமசுந்தரக் கடவுள், நீங்கள், இனிய தமிழையுடைய திருவாலவாயில் எழுந்தருளியுள்ள எமது கனிந்த அருளையுடைய சோமசுந்தரக்கடவுளின்  வீரக்கழல் அணிந்த  திருவடியை வணங்கவேண்டும், ஆதலால் இப்பொழுதே வருவீர்! என்று கூறினார். அதனைக் கேட்ட புலவர்கள் எங்களுக்கு அளவிறந்த கோடி துன்பத்தைத் தரும் வினைகளைப் போக்கி அருளும் சோமசுந்தரக்கடவுள் நீரே!  என்று கூறிப் பணிந்து நின்றனர்.

வேதத்தின் வழியே நடக்கும் மாட்சிமைப்பட்ட கலைகளைப் போல மாண்பமைந்த  வேள்வித் துறையின் வழியே நடக்கும் தன்மை கொண்டவர்கள் நாற்பத்தெட்டுப் புலவர்கள். அவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, புலவராய் வந்த சோமசுந்தரக் கடவுள், திரும்பி திரு ஆலவாய் சென்று நஞ்சுண்டமையால் கருத்த கண்டத்தினை உடைய இறைவனை வணங்குவித்து மறைந்தருளினார். அதனைக் கண்ட புலவர்கள், வியந்து வானிலிருந்து இறங்கிய இந்திர விமானத்தில் எழுந்தருளிய இறைவனைப் பல பாடல்களால்  துதித்துப் புகழ்ந்து, திருவடிகளை  வணங்கினர். பின்னர் வாகை மலர்மாலை சூடிய சிவந்த வேலையுடைய பாண்டிய மன்னனைச் சென்று கண்டனர்.

வெற்றிமிக்க சக்கரத்தையும் செங்கோலையும் உடைய வங்கிய சேகர பாண்டியன், வந்த புலவர்களின் அறம் நிறைந்த கல்வியை நோக்கியும், அவைக்களத்தில் அவர்கள்  இருத்தற்குரிய தகுதியை நோக்கியும், தகுதி பெற்ற  சிறந்தவர்கள் என்று கருதி, மகிழ்ந்தான்.  மேலும் சந்திரனாகிய அழகிய மாலையை அணிந்த, சிவந்த அழகிய சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின், மங்கலம் மிகுந்த  திருக்கோயிலின், வடமேற்றிசைப் பக்கத்தில், ஒரு சங்க மண்டபம் எடுத்து, தகுதி நிறைந்த பல வரிசைகளை அளித்து அங்கே தங்கி யிருப்பீராக! என்று அப்புலவர்களை இருத்தினான்.

பாண்டிய மன்னன் இனிய  தமிழையுடைய  புலவர்களுக்குப்  பல பரிசுகளை அளிக்க அதனைக் கண்ட  சங்கத்தில் இருந்த பழைய  புலவர்கள் உள்ளம் நொந்தனர். உடன் அவர்கள்  புதிதாய் வந்த நாற்பத்தெட்டுப்  புலவர்களை  நெருங்கிச் சென்று  வாதம் செய்து அதனால் தங்களுக்கு முன்பிருந்த  புலமையையும் இழந்து, துன்புற்றுச் சென்றனர்.  இந்தப் புலவர்கள் போலவே, வேற்று நாட்டிலுள்ள  புலவர்களும் வந்து வந்து விவாதம் செய்து தோற்றனர். தங்களிடம் வந்த புலவர்களை எல்லாம் வென்ற நாற்பத்தெட்டுப் புலவர்களும் சோமசுந்தரக்கடவுளை வணங்கி, எங்களோடு தொடர்ச்சியாக வந்து  புலவர்கள் பலரும் விவாதம் செய்கின்றனர். எனவே  புலவர்களின்  புலமையைச் சீர்தூக்கி அளக்குங் கருவியாக, எமக்கு, ஒரு சங்கப் பலகை அளித்தருளுவாயாக! என்று வேண்டி வணங்கினர்.

புலவர்களின் வேண்டுகோளைக் கேட்ட சோமசுந்தரக் கடவுள், முன்பொருமுறை  தம்மைப் பாடிய பாணபத்திரனுக்கு  பலகை அருளியது போல் புலவர் வடிவம் தாங்கி வந்து பலகை தந்தருளினார்.  இறைவனால் வழங்கப் பெற்ற
அப்பலகை சதுர வடிவினதாகவும் இரண்டு சாண் அளவுள்ளதாகவும் சந்திரனை விட வெண்மை நிறம் கொண்டதாய் அமைந்திருந்தது. மேலும் மந்திர வலிமை உடையதாகவும் அமைந்திருந்தது. அதனைப் புலவர்களிடம் வழங்கிய சோமசுந்தரக் கடவுள் அறிவால் சிறந்த புலவர்களுக்கு இந்த சங்கப் பலகை ஒவ்வொரு முழமாக வளர்ந்து இருக்கை அளிக்கும். மேலும், இப்பலகை உங்களுக்கு  அளவுகோலாயும் இருக்கும் என்று கூறித் தந்தருளினார்.

கலைமகள் வடிவாக வந்த அப்புலவர்களுக்கு வெள்ளைத் தாமரையாகிய மலரினையே ஒரு பலகையாகச் செய்து தருவதுபோல, இறைவன் தந்தருள, அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு திருக்கோயிலை,  வலம் வந்து  தமது அவையிற் புகுந்தனர். அச்சங்கப் புலவர்கள் இறைவன் அளித்த அப் பலகைக்கு பூமாலைகளால் அலங்காரம் செய்து பன்னீர், சந்தனம், தூய்மையான வெண்ணிற ஆடை போன்றவற்றைச் சார்த்தி தீப வழிபாடு செய்தனர். பின்னர் அப்பலகையில் முதலில் நக்கீரர் ஏறி அமர்ந்தார். அவருக்குப் பின் பரணர் ஏறினார். அதன் பின் புலவர்கள் பலரும் ஏறி அமர்ந்தனர். இறைவனால் வழங்கப் பெற்ற அச்சங்கப் பலகை ஒவ்வொருவருக்கும் விரிந்து இடமளித்தது. இந்நிகழ்வானது எழுத்தாற் சுருங்கி பொருளால் விரிந்து தோன்றும் நூலினை ஒத்ததாய் அமைந்திருந்தது.

நாறுபூந் தாம நாற்றி நறும்பனி தோய்ந்த சாந்தச்
சேறுவெண் மலர்வெண் டூசுழூ செழும்புகை தீபமாதி
வேறுபல் வகையாற் பூசை வினைமுடித் திறைஞ்சிக்கீரன்
ஏறினான் கபில னோடு பரணனு மேறினானே.

அறிவால் சிறந்த அப்புலவர்கள், நூல்களில் அமைந்த பொருள் விளங்க,  தம்முள், ஏதுவும் உதாரணமும் கூறும்போது,  அவற்றைக் கேட்டுத் தெளிந்த கிளியும் நாகணவாய்ப் பறவையுமே,வெளியே வந்து, வாதம் செய்யும் பிற புலவர்கள்  வந்தால், அவர்கள் கொள்கையை மறுத்துத் தம்கொள்கையை நிலைநாட்டும்.அத்தகைய சிறப்புடைய சங்கப் பலகையில் இருந்த புலவர்கள் தமிழுக்குப் பாடல் புனைந்து அழகு செய்து வந்தனர். அப்புலவர் பலரும் செய்த பாடல்கள் அனைத்தும், உரை காண்போர் அறிவிற்கேற்றவாறு  பொருள், சொல் வளம்,  செய்யுளிலே குறிப்பு போன்றவற்றால்  வேறுபாடு அறிய முடியாது  மயங்கிக் கிடந்தன. எனவே அப் புலவர்கள் ஒருவருக்கொருவர் தம்முள் மாறுபாடு கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர்.

அதனைக் கண்ட சோமசுந்தரக் கடவுள் அவர்களின் சண்டையினை நீக்கும் பொருட்டு ஒரு புலவராய்த் தோன்றினார். சங்கப் புலவர்களிடம், புலவராய் வந்த இறைவன் மயக்கம் தரும் பாடல்களைக் கொண்டு வருக! என்று கூறப் புலவர்கள் இறைவன் முன் கொண்டு வந்து வைத்தனர். தூய சொல்லும் அதனைத் தொடர்ந்த பொருளுமாகிய இறைவன் அந்தப் புலவர்களின் பொருள் முதிர்ச்சி வாய்ந்த பாடல்களின், வேறுபாடுகளை அறிந்து,  அவரவர் மனம் பொருந்துமாறு எடுத்து அருளினார். அவற்றை வாங்கிய சங்கப் புலவர்கள் மனமகிழ்ந்து,  நீங்களும்  எம்முடன் ஒருவராய் இங்கே சிறந்து வாழ்வீராக! எனக் கூறி தங்களைத் தாங்குகின்ற பொன்னாலாகிய சங்கப் பலகையில் அமர்த்தினர். பொற்பலகை என்னும், பொன்னாலாகிய ஆபரணத்தில்  நாற்பத்தெட்டு புலவர்களும் சுற்றிலும் பதித்த மணிகளாக இருந்தனர். சோமசுந்தரக்கடவுள் பெருமை பொருந்திய நடுநாயகமணியாய் வீற்றிருந்து அருளினார்.

பொன்னின் பீடிகை யென்னும்பொன் னாரமேல்
துன்னு நாவலர் சூழ்மணி யாகவே
மன்னி னார்நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந் தார்மது ரேசரே.

அதனைக் கண்டு மகிழ்ந்திருந்த வங்கிய சேகரபாண்டியன், சிறந்த புவியாட்சியை அளித்து  இம்மையில் அமைந்த வினைப்பாசம் என்னும் பகைமையை நீக்கி  மறுமையில் சிவபெருமான் திருவடியிற் கலந்து  வீடுபேற்றை அடைந்தான். செந்தமிழ்ப் புலவர்களாய்த் தமிழ்நிலத்தில் வந்தருளி சங்கத்து இருந்து சோமசுந்தரக் கடவுளையும் தலைமையேற்க வைத்து, கன்னித்தமிழ் வளர்த்தெடுத்த கலைமகளின் கருணைநிகர் திருவடிகளைக் கருத்தில் கொண்டு புவனத்தில் புகழ் பெறுவோம்!!

முனைவர் மா. சிதம்பரம்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?