×

நெல் வயலை காத்த பார்வதி அம்மன்

சிவகங்கையிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவிலூர். இங்கு பழமையான கொற்றவாளீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக கொற்றவாளீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். நெல்லையம்மன் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் சிலைகள் உள்ளன. கோயிலின் முன் புறத்தில் சதுர வடிவில் தெப்பம் உள்ளது. நடுவில் 16 தூண்களுடன் நீராழி மண்டபம் காணப்படுகிறது.

தல வரலாறு

பண்டைய காலத்தில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்பட்ட காளையார்கோவில் பகுதியை மன்னர் வீரபாண்டியர் ஆண்டு வந்தார். சிவபக்தரான மன்னரிடம் ‘கொற்றவாள்’ என்ற அரிய வாள் இருந்தது. அந்த வாளுடன் போர்புரிந்து, எதிரிநாட்டு மன்னர்களை அவர் வென்று வந்தார். ஒருநாள் வேட்டையாட மன்னர் காட்டிற்கு சென்றபோது, அவருடன் திருவிளையாடல் நடத்த சிவபெருமான் விரும்பினார். வேட்டையின்போது, எதிரில் தென்பட்ட மானை மன்னர் துரத்தி சென்றபோது, அவரது கையிலிருந்த வாள் திடீரென மாயமானது.

மாயமான வாளை தேடி மன்னர் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணரை புலி தாக்க முயன்றது. அந்தணர் மீது இரக்கம் கொண்ட மன்னர், புலியுடன் சண்டையிட்டு அதனை கொல்ல முயன்றார். அப்போது அந்தணரும், புலியும் திடீரென மறைந்தனர். அப்போது அங்கிருந்த வன்னிமரத்தடியில் உள்ள சுயம்பு சிவலிங்கம் முன்பு தனது வாள் இருப்பதை மன்னர் பார்த்தார். இதனால் நடந்தவை அனைத்தும் சிவபெருமானின் திருவிளையாடல் என்பதையறிந்து மன்னர் மகிழ்ந்தார். இந்த நிகழ்வையொட்டி, அந்த சுயம்புலிங்கத்தை சுற்றிலும் மன்னர் ஒரு கோயில் எழுப்பினார். மாயமான கொற்றவாளை மன்னருக்கு வழங்கியதால், சிவபெருமானுக்கு ‘கொற்றவாளீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது.

பிற்காலத்தில் இப்பகுதியில் சிவகுப்தன் என்ற சிவபக்தர் இருந்தார். சிவகுப்தன்-சுதன்மை தம்பதியருக்கு ெசாந்தமான வயலில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. சுதன்மை, தனது மகள் அரதனவல்லியை வயல்வெளி காவலுக்கு செல்லும்படி கூறி அனுப்பினாள். அரதனவல்லி வயலுக்கு செல்லாமல், அருகிலிருந்த மலர் தோட்டத்திற்கு தனது தோழிகளுடன் சென்றாள். சுதன்மை, அரதனவல்லி வயலில் இருப்பதாக கருதி அவளுக்கு மதிய உணவு எடுத்து சென்றாள். ஆனால் வயல்வெளியில் அரதனவல்லி உருவத்திலிருந்த பார்வதியம்மன் பயிர்களை காவல் காத்து கொண்டிருந்தார்.

இதனையறியாத சுதன்மை, அம்மனுக்கு தான் கொண்டு வந்த உணவை வழங்கினாள். அம்மனும் ஆர்வத்துடன் அந்த உணவை வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரம் கழித்து சுதன்மை வீட்டிற்கு திரும்பியபோது, அங்கு அரதனவல்லி, பசியுடன் காத்திருப்பதை அறிந்தார். பின்னர் அரதனவல்லியுடம் விசாரித்த போது, வயலில் காவல் பணியில் இருந்தது பார்வதியம்மன் என்பது சுதன்மைக்கு தெரியவந்தது. இந்த நிகழ்வுக்கு பின்னர், நெல் வயலில் காட்சி தந்ததால், இங்குள்ள அம்மனுக்கு ‘நெல்லையம்மன்’ என்று பெயர் ஏற்பட்டது என்பது புராணம். நெல்லையம்மனை வழிபட்டால் நம்மை சார்ந்த பொன், பொருள், பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் பாதுகாவலாக துணை நிற்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
*********
பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். வேலை கிடைக்க வேண்டியும், படிக்க செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டியும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை தினமும் காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்