×

ஆதரவற்றவர்களை அழைத்து வந்து மொட்டை அடித்த அமைப்பினர்: 6 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்துள்ள கெம்பனூரில் அட்டுக்கல் என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது. மலைவாழ் மக்கள் குடியிருக்கும் இப்பகுதியில் ‘பிளஸ் இந்தியா’ என்ற தனியார் அமைப்பின் பள்ளி மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது. யானை நடமாட்டம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த விடுதி மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் இரவு நேரத்தில், ‘அய்யோ அம்மா எங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், என கூச்சல் கேட்டது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, 100க்கும் மேற்பட்டோருக்கு மொட்டை அடிக்கப்பட்டு ‘கருணை பயணம்’ என்ற லேபிள் பொறித்த நீலநிற சீருடை அணிவிக்கப்பட்டு இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர்களும், பெண்களும் ஏராளமானோர் இருப்பதைக் பார்த்த ஆதிவாசி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பேரூர் போலீசார், பேரூர் தாசில்தார் இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ‘விழுப்புரத்தை சேர்ந்த ‘கருணை பயணம்’ என்ற தன்னார்வ அமைப்பினர் கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் படுத்திருந்த பிச்சைக்காரர்கள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வேன்களில் அழைத்து வந்து அவர்களுக்கு மொட்டை அடித்து ‘கருணை பயணம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நீல நிற சீருடைகளை அணிய வைத்து உணவு வழங்கி பராமரித்து வந்தது தெரிய வந்தது.பேரூர் மருதமலை உள்ளிட்ட கோயில்களின் வாசல்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர்கள், பேருந்து நிலையம், மருத்துவமனை, பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்து வந்தவர்களையும் இந்த தன்னார்வ அமைப்பினர் ஆம்புலன்ஸ், வேன்களில் அட்டுக்கல் பகுதிக்கு அழைத்து வந்தது தெரிய வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றவுடன் அங்கிருந்த ஆதரவற்றவர்களில் பலர் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தனர். 40க்கும் மேற்பட்ட பெண்கள் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் கை, கால் ஊனமுற்ற சிலர் நடக்க முடியாமலும், அப்பகுதியில் இருந்து தப்பிக்க முடியாமலும் தவித்தனர். அப்போது, ஆதரவற்றவர்களை அழைத்து வந்து சித்ரவதை செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆதிவாசி மக்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கருணை பயணம் அறக்கட்டளை நடத்த உதவிய பெண் நிர்வாகி ஒருவரை விடுதியை விட்டு உடனடியாக வெளியேற்றினர். மொட்டை அடிக்கப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். மலை கிராமங்களில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்ததோடு ஆதரவற்றோர்களை அழைத்து வந்து மொட்டை அடித்து சித்ரவதை செய்தது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது தொடர்பாக தன்னார்வ அமைப்பினர் 6 பேரை கைது செய்துள்ளனர்….

The post ஆதரவற்றவர்களை அழைத்து வந்து மொட்டை அடித்த அமைப்பினர்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Attukal ,Kempnoor ,Thondamuthur, Coimbatore district ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...