×

சரஸ்வதி தரிசனம்

* சமண புத்த மதங்களிலும், சரஸ்வதி அறியாமை இருளை நீக்கி, மாயையை விலக்கி, துன்பத்தைப் போக்கி, அறிவொளி தரும் கலைக்கடவுளாக விளங்குகிறாள்.

* சரஸ்வதி திருவடிவம் - சரஸ்வதி பிரம்ம வித்யையை முகமாகவும், 4 வேதங்களை கரங்களாகவும், இசை மற்றும் இலக்கணத்தை இரு தனங்களாகவும், எண்ணையும், எழுத்தையும் நயனங்களாகவும், இதிகாசம், புராணம் இரண்டையும் திருவடிகளாகவும், கொண்டவள். இவளது கையிலுள்ள வீணை ஓங்காரத்தின் வடிவம்.

* மேதா மஹா சரஸ்வதி  சரஸ்வதி புராண காலத்து கடவுள் மட்டுமல்ல, வேதகாலம் தொட்டு இன்று வரை வணங்கப்படுகிற ஒரு அரிய கடவுள். இன்றளவும் நமது நித்திய வாழ்க்கையை செழுமையாக்கும் வீணா சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள். அறியாமை இருள் நீக்கி ஆனந்த ஒளி தருபவள் சரஸ்வதி. வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியத்தின் ஐந்து வடிவங்கள், மஹி, இளா, சராமா, தட்சிணா மற்றும் சரஸ்வதி, சரஸ்வதி ‘வாக்கு தேவதையாகப் போற்றப்படுகிறாள். சரஸ்வதியின் ஒரு கரத்திலிருக்கும் தாமரை புனிதத்தையும், மற்றொரு கரத்திலுள்ள புத்தகம் அறிவையும், மற்றொரு கரத்திலுள்ள ஞான முத்திரை ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தையும் விளக்குகிறது. சரஸ்வதியின் பின்புறமுள்ள அன்னப்பறவை ஜீவாத்மாவைக் குறிக்கிறது. சரஸ்வதியின் அருளால் அது பரமாத்மாவை அடைகிறது.

* ஜப்பானில் வணங்கப்படும் 7 அதிர்ஷ்ட தேவதைகளில் ஒருவராக சரஸ்வதி திகழ்கிறாள். ஜப்பானில் சரஸ்வதி தேவியின் வழிபாடு சுவர்ண பிரபாச சூத்திரம் மூலமாக 6-ம் நூற்றாண்டுக்கும், 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பரவியது. சுவர்ண பிரபாச சூரத்திரத்தில் இவளைக்குறித்த ஒரு பிரத்யேக பகுதியே உள்ளது. தாமரை சூத்திரத்திலும் இவளைப்பற்றிய தகவல்கள் உள்ளது.

* சில கோயில்களில் சிவன் சந்நதி எதிரே சூரியனை மையப்படுத்தி சுற்றிலும் 12 ராசிகளின் சின்னத்தைப் பொறித்திருப்பர். சில தலங்களில் 27 நட்சத்திரங்களின் சிற்ப வடிவம் இருக்கும். மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் பன்னிரு ராசிகளுக்கு மத்தியில் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். கல்வியில் ஆர்வம் வளர இந்த ராசிக்கட்டத்தின் கீழ் நிற்க வைத்து வணங்கச்செய்வர். கிரக தோஷத்தால் படிப்பில் தடை, பின்தங்கியிருப்பது போன்ற குறைகளிருந்தால், சரஸ்வதியின் அருளாலும், நவக்கிரகங்களின் ஆசியோடும் அக்குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவரென்பது நம்பிக்கை.

* சரஸ்வதி  ஈரானில் `Aredvi sura ஆகவும், கிழக்கு ஈரானில் `Anarita’ ஆகவும், கிரேக்கத்தில் `Anaitis’ ஆகவும், `Ath Ain’ ஆகவும், `Althena’ ஆகவும், வெவ்வேறு வடிவங்களில் அறிவொளி தரும் கடவுளாக வணங்கப்படுகிறாள். ஜப்பானியர்கள் நில நடுக்கத்திலிருந்து காப்பாற்றும் `Benzaiten’ கடவுளாக வணங்குகின்றனர். திபெத்தில் ஞானம் தந்து காப்பாற்றும் அன்னை `Tara’ என்ற ரூபத்தில் வழிபடுகின்றனர். `Green Tara’ சிறந்த செயல்பாட்டின் சக்தியாகவும், `White Tara’ அன்பு மற்றும் கருணையின் வடிவமாகவும் வழிபடப்படுகிறார்கள். `Kanyin’ ஆக சீனாவிலும், `Kwannon’ ஆக ஜப்பானிலும் சிறந்த கருணை பொழியும் கடவுளாகக் கருதப்படுகிறாள்.

Tags : Sarasvati ,darshan ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே