×

முத்தான வாழ்வருளும் முப்பெரும் தேவியர்

செல்வ வளம் கொழிக்கச் செய்யும் மும்பை மகாலட்சுமி, வீரத்தோடு மங்கள வாழ்வருளும் பட்டீஸ்வரம் துர்க்கை, அறிவாற்றலையும், கலைத்திறன்களையும் அள்ளி வழங்கும் கூத்தனூர் சரஸ்வதி ஆகியோரை இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் ஒரே தலத்தில் தரிசிக்க ஆவலா?  ஆம் எனில் நீங்கள் செல்ல வேண்டியது சென்னையிலுள்ள துர்க்கா,  லட்சுமி, சரஸ்வதி ஆலயத்திற்குதான். ஆலய முகப்பில் முப்பெரும் தேவியரும் சுதைவடிவில் அருள்கின்றனர். கொடிமரம் இல்லாததால் இத்தலத்தில் உற்சவ விக்ரகங்கள் இல்லை. கருவறை மூர்த்தங்களுக்கே விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அழகான பெரிய மண்டபத்தில் முதலில் தரிசனம் தருகிறார், பட்டீஸ்வரம் துர்க்காம்பிகை.

தேவியின் திருவுரு முன் கருங்கல்லினாலான மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நவாவரண பூஜைகள் இந்த மகாமேருவிற்கு விதிப்படி நடத்தப்படுகிறது. 11 வெற்றிலைபட்டி கட்டி 11 சுமங்கலிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. மகாமேருவிற்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. துர்க்கையின் எதிரே சிம்ம வாகனம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையன்றும் ராகுகாலத்தில் இந்த துர்க்காம்பிகைக்கு துர்க்கா ஸஹஸ்ரநாம வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்து நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள் மும்பை மகாலட்சுமிதேவி. மேலிரு திருக்கரங்கள் தாமரையை ஏந்த, கீழிரு கரங்கள் அபய, வரத ஹஸ்தமாகத் துலங்குகின்றன. சில்ப சாஸ்திரத்தில் மகாலட்சுமிக்கு வாகனமாக நந்தி கூறப்பட்டுள்ளபடியால் இந்த மகாலட்சுமியின் முன் நந்தியம்பெருமான் வீற்றருள்கிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மாலை 6,7.30 மணிக்குள் லட்சுமி ஸஹஸ்ரநாமம் இந்த சந்நதியில் பாராயணம் செய்யப்படுகிறது. மூன்றாவதாக கூத்தனூர் சரஸ்வதி தரிசனம். அழகே உருவாய் அருளே வடிவாய் அருள்கிறாள் அன்னை. தேவியின் முன் அவளுடைய வாகனமாகிய அன்னப் பறவை தேவியை நோக்கியபடி அமர்ந்துள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையிலும் மாலை 6-7.30 மணிக்குள் சரஸ்வதி ஸஹஸ்ரநாமம் இந்த சரஸ்வதிக்கு பாராயணம் செய்யப்படுவது விசேஷம். 1990ம் வருடம், காஞ்சி சங்கரமடத்து முத்தையா ஸ்தபதி அவர்களுக்கு ஓலைச்சுவடியில் வந்த அருளுரைப்படி இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. முழுவதும் பொதுமக்கள் ஆதரவாலேயே எழுப்பப்பட்டு பொதுமக்களே நிர்வகிக்கும் ஆலயம் இது. 2008ம் வருடம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் சந்நதியும் இங்கு நிர்மாணிக்கப்பட்டது.

ஒவ்வொரு சுக்ல பட்ச (அமாவாசைக்கு அடுத்த) சஷ்டியின் போதும் இந்த முருகப்பெருமானுக்கு த்ரிசதி அர்ச்சனையும். ஷண்முகார்ச்சனையும் நடத்தப்படுகின்றன. அச்சமயத்தில் ஆறு வகை பூக்களால் அர்ச்சனை, ஆறுவகை பழங்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன. விநாயக சதுர்த்தியின் போது தலவிநாயகர் விசேஷமாக வழிபடப்பட்டு பத்து நாட்கள் இன்னிசைக் கச்சேரிகளால் ஆலயம் களை கட்டுகிறது. அதேபோன்று ஒவ்வொரு வருடமும் மே மாதம் ராதா கல்யாண மஹோற்சவம் இத்தலத்தில் விமரிசையாக நடக்கிறது. நவராத்திரியின் போது நவ சண்டி யாகம் இயற்றப்படுகிறது. உலகனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரி கொண்டாட்டத்தின் தத்துவம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் மாகேஸ்வரி, கௌமாரி, வாராஹியாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்கள் நாரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதியாகவும் நவசக்திகளாக தேவியை பூஜிப்பது மரபு.

அத்தகைய நவராத்திரி பூஜை இத்தலத்தில் மிக விமரிசையாக முப்பெரும் தேவியருக்கும் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று இந்த ஆலயத்தில் நடைபெறும் நவசண்டியாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. நவம் என்றால் ஒன்பது. சண்டி என்றால் 700 மந்திரங்களை உள்ளடக்கிய தேவி மகாத்மியதுதியைக் குறிக்கும். அம்பாளைக் குறித்து 700 மந்திரங்களால் ஒன்பது முறை யாகத்தில் மந்திரம் கூறி ஹவிஸை சமர்ப்பிப்பதே நவசண்டியாகம். சரஸ்வதி பூஜையன்று மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்கும் அந்த யாகம், மறுநாள் விஜயதசமி அன்று மாலை 4 மணிக்குத்தான் முடியுமாம். 35 கிலோ சர்க்கரைப்பொங்கல், அதே அளவில் பாதுஷா, மைசூர்பாகு உட்பட பலவிதமான திரவியங்கள் அந்த யாகத்தில் ஆஹுதியாக இடப்படுகின்றன. 20,000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவையும் தேவிக்கு யாகத்தின் பொது ஹவிஸாக போடப்படுகிறது. இந்த யாகத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு வியாபார அபிவிருத்தி, தீர்க்காயுள், தீர்க்கசுமங்கலி பாக்கியம், வாழ்வில் நிம்மதி, சந்தானபாக்கியம் ஆகியவை கிட்டும் என கூறப்பட்டுள்ளது. சென்னை போரூர் மதனந்தபுரம், சந்தோஷ்புரத்தில் அமைந்துள்ள துர்க்கா - லட்சுமி - சரஸ்வதி ஆலயம்.

Tags : Great-grandfather ,goddess ,
× RELATED பள்ளூர் வாராஹி