×

பேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்

*கோபாலசமுத்திரம், நெல்லை மாவட்டம்.

கயிலாய மலையில் தேவியுடன் சிவபெருமான் வீற்றிருந்த வேளையில், தேவர்கள் சிவசக்தியை காண, கைலாச மலைக்கு வந்தனர். சிவனுடைய பாதத்தை வணங்கி நின்ற வேளையில், சிவன் தேவர்களை பார்த்து சொல்லுகிறார்.
‘‘மண முடிந்த தருணத்தில் எங்களை காண வந்த தேவர்களே, எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்’’ என்று கேட்க, ‘‘தேவா! இந்தக் கயிலாயத்தில் இல்லாத வகை என்ன இருக்கின்றது. தாங்களோ, விருப்பு வெறுப்பு இல்லாதவர், எதையும் தாங்கள் விரும்பியது கிடையாது.” அப்போது சிவபெருமான் சொல்லுகிறார்.

‘‘தேவர்களே! அரிதிலும் அரிதான பாற்கடலில் பிறக்கும் பொன்னரிய மாலையை கொண்டு வாருங்கள். உங்கள் திறத்தைப் பார்ப்போம். என்று சொன்னதும் தேவர்கள் நிச்சயம் கொண்டு வருவதாக கூறிச் சென்றனர். திருப்பாற்கடலில் மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு அமிர்தம் கடைய, பல்வேறு பொருட்கள் வந்து கொண்டிருந்தாலும் பொன்னரிய மாலை வரவில்லை. உடனே தேவர்களின் தலைவனான இந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டார். பிரம்மதேவன் அரளிப் பூவெடுத்து உருப்பிடித்துப்போட கடலில் பொன்னரிய மாலை வந்தது. அதை எடுத்த தேவர்கள் மனது மகிழ்ந்தனர். பின்னர் அதை பொன் குடம் ஒன்றில் வைத்து கயிலாயத்திற்கு எடுத்து வருகிறார்கள்.
 
வரும் வழியில் ராட்ஷச படைகளுடன் வந்து கொண்டிருந்த சண்டமுண்டன் என்ற ராட்ஷசன் தேவர்களிடம் வம்பு செய்தான். அப்போது அவர்கள் கொண்டு வந்த பொன்னரிய மாலையை பொன்குடத்துடன் அபகரித்துச்சென்றான். பொன்னரிய மாலையை பறிகொடுத்தவர்கள் வெறுங்கையுடன் கயிலாயம் சென்றார்கள். நடந்ததை சிவனாரிடத்தில் எடுத்து உரைத்தார்கள். உடனே சிவபெருமான், எமதர்மராஜனையும், ஆதித்தனையும் அழைத்து சண்டமுண்டனிடம் இருக்கும் மாலை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு இறைவா! அது எங்களால் இயலாத காரியம் அன்றோ என பதிலுரைத்தனர். உடனே பார்வதி தேவி, சிவனாரிடம் மகாதேவா, சக்தி என்னால் முடியும் என்றுரைக்க, பிரம்ம தேவன், தேவா, உங்களுக்கு செய்யும் பணி செய்யும் பொருட்டு என்னை இதில் உட்படுத்துங்கள் என்றார். புன்னகைத்தார் சிவபெருமான். ம்... ஆகட்டும் என்றவர் சேவகர்களை அழைத்து 51 அடி ஆழமும், 64 அடி சதுர வடிவமும் கொண்ட வேள்விகுழியை வெட்டுமாறு கூறினார்.

அதில் பலவகையான மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அணலை மூட்ட தயாரானார்கள். சிவன், சக்தியை பார்க்க, சக்தியின் அம்சம் சிவனுள் செல்ல, அதை சிவன் தன் நுதலில்(நெற்றி) ஏற்றி, நெற்றிக்கண் வழியாக அணலாக வெளிக்கொணர்ந்தார். நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்தினார் பிரம்மதேவன். பின்னர் அதை வேள்விக்குழிக்குள் விடுகிறார். வேள்வித்தீ  கொளுந்து விட்டு எரிகிறது. அதில் பிரம்மன் தனது சக்தியை மெருகேற்றி கலைமகளின் ரூபமாக வெண் தாமரையும், மலைமகளின் ரூபமாக செவ்வரளி மலரையும், மஞ்சளும், குங்குமம், மஞ்சனையையும் அந்த தீயில் போட்டார். உடனே தீ பிளம்பிலிருந்து தோன்றினாள் பிரம்ம சக்தி. பிரம்மனால் ஒருங்கிணைந்து ஆக்கப்பட்ட சக்தி என்பதால் பிரம்மராக்கு சக்தி என்றும் அழைக்கப்பட்டாள்.

பிரம்மராக்குசக்தி, சண்டமுண்டன் என்னும் ராட்ஷசனை அழித்தாள். தென் மாவட்டங்களில் பேச்சியம்மன் துணையோடு தான் பிரம்ம சக்தி நிலையம் கொண்டிருக்கிறாள். சில இடங்களில் பிரம்மசக்தியையும் பேச்சியம்மன் என்றே தனித்தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர். நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் சீவலப்பேரி சுடலை கோயிலில் பேச்சி, பிரம்மசக்தி வீற்றிருக்கின்றனர்.  பிரச்சனைகளை தீர்த்து வைத்து நல்லருள் புரிகின்றனர். பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர், தனது முறைப்பெண் அதே ஊரைச்சேர்ந்த பண்டாரம் என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சில ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் தெரிந்தது. லட்சுமி பூப்பெய்ய வில்லை, அதனால் பெண்களுக்கு உண்டான மாதவிடாய்கள் வருவதில்லை. ஆகவே குழந்தை பேருக்கு சாத்தியமில்லை என்றனர். உடனே சுப்பையாவின் தாயார் வற்புறுத்தலின் பேரில் லட்சுமியை அடுத்த தெருவிலிருக்கும் அவரது வீட்டில் கொண்டு விட்டார். பின்னர் வாரிசு இல்லாத வாழ்வு என்ன வாழ்க்கை என்று கூறி, தனது மகன் சுப்பையாவிற்கு வேறு பெண் பார்க்க முற்பட்டாள் அவரது தாயார்.

லட்சுமியை நினைத்து அழுத அவளது தாயார், கோபாலசமுத்திரத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மன் சந்நதிக்கு தனது மகளை அழைத்து வந்தார். பேச்சியிடம், தாயே, ‘‘நீயும் ஒரு பெண் தானே, நீ தெய்வமாக இருந்தாள் என் மகள் முழுமையான ஒரு பெண்ணாக மாற்றித்தா, இல்லையேல் என் மகளை இந்த மண்ணுலகை விட்டு எடுத்துவிடு. பொம்மையாக ஒரு பிள்ளை எனக்கெதுக்கு’’ என்று அழுதாள். முறையிட்டாள். கோயில் பூசாரி திருநீறு கொடுத்து அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து 21 வது நாள் லட்சுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு மங்கையானாள்.

சுப்பையா இதை அறிந்து மனைவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். மறு வருடமே அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அது மட்டுமன்றி தொடர்ந்து மொத்தம் 3 பெண் குழந்தைகளை பெற்றாள். முதல் குழந்தைக்கு பேச்சியம்மன் என்றும், 2 வது குழந்தைக்கு பிரம்மராக்கு சக்தி என்றும், 3 வது குழந்தைக்கு செல்வசுடலி என்றும் தனக்கு வாழ்க்கை கொடுத்த கோயிலின் மூல தெய்வங்களின் பெயர்களையே சூட்டினாள்.  பெண்களின் பிரச்னையை தீர்ப்பதில் பேச்சி வல்லமை கொண்டவளாக திகழ்கிறாள்.  கோயில் தொடர்புக்கு. 9994971427.

சு.இளம் கலைமாறன்
படங்கள்:  ச.சுடலைரத்தினம்

Tags : Pachi ,Brahma Sakthi ,
× RELATED விஜயநாராயணம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது