×

பக்தர்களை காக்கும் பச்சையம்மன்

அங்காளபரமேஸ்வரி அம்மனுடன் தொடர்புடைய பாவாடைராயன் பெயரால் ராயபுரம் எனப்பெயர் பெற்றுள்ள இடம், இங்கு மேம்பாலத்திற்கு வடக்கே கிழக்கு நோக்கியவாறு மன்னார்சாமி பச்சையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

மன்னார்சாமி சாலை என்றே இந்தசாலை அழைக்கப்படுகிறது, சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில் இதுவாகும். கிழக்கு நோக்கிய சிறிய ராஜ கோபுர வாயில் உள்ளது. கோயிலுக்குள் வலம்புரி விநாயகர் கிழக்கு நோக்கி அரசமரத்தடியில் அமர்ந்துள்ளார், நாகதோஷம் உள்ளவர்கள் பூஜை செய்யும் நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பார்த்து வாழ்முனி.(அகத்தியர்) பெரிய உருவோடு இருக்கிறார். அவர் இடக்கரத்தில் எதிர்த்து வந்த வீரமுத்துவின் தலையைத் தூக்கிப் பிடித்திருக்க, வலக்கையில் பெரிய வாள் ஏந்தி அமர்ந்து இருக்கிறார். அவரின் மற்றொரு பக்கத்தில் வீராச்சி வாழ்முனியிடம் தன் கணவனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டுகிறாள். செம்முனி (வஷிஷ்டர்) கரிமுனி (விஸ்வாமித்திரர்) ஜடாமுனி ( பராசரர்) வேதமுனி ( நாரதர்) லாடமுனி (வியாக்ரபாதர்) முத்துமுனி ( வியாசர் ) ஆகியோர் பெரிய பெரிய சுதை வடிவில் காட்சி தருகின்றனர். இவர்களின் காலடியில் பாதாள அரக்கர்கள் உள்ளனர்.

வாழ்முனிக்கு எதிரில் குதிரை வாகனம் உள்ளது. சந்நதிக்கு எதிரில் கௌதம மகரிஷி ஒரு கரத்தில் லிங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டும் மற்றொரு கையில் ருத்ராட்ச மாலையைக் கையில் வைத்துக் கொண்டும் நின்ற கோலத்தில் பச்சையம்மனை வணங்கிக் கொண்டும் இருக்கின்றார். சந்நதியின் வலப்புறம் மகாமண்டபத்தில் சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் ஒரு சந்நதியிலும், இடப்புறம் ஐயப்பன் ஒரு சந்நதியிலும் வீற்றிருந்து அருள்கின்றனர். கருவறைக்கு முன்பு விநாயகர் இருக்கிறார். கருவறையில் முன்புறம் சிறியதாக சிறிய சுயம்பு பச்சையம்மனும் அவளுக்குப் பின்னால் கிழக்குப் பார்த்த சிலா பச்சையம்மன் 4 கரங்களுடன் அபய,வரதம் பாச அங்குசம் கொண்டு நின்ற கோலத்தில் அருள்கிறாள்.

அவளுக்கு வலதுபுறம் லிங்கம் வள்ளி தெய்வானையுடன் முருகன், நாகலிங்கம் இடது புறம் பூவுடையாளும் காத்தாயிஅம்மனும் உள்ளனர். சிலா விக்கிரகத்தின் பின்புறம் பெரிய சுதை வடிவில் பச்சையம்மன் வீராசனத்தில் தவக்கோலத்தில் அமர்ந்தருள்கிறாள். பிராகாரத்தின் வடக்கில் மன்னாதீஸ்வரர் சிலாஉருவில் தனிசந்நதியில் அமர்ந்து  அருள்கிறார். சந்நதிக்குப் பின்புறம் கிழக்கு நோக்கியபடி கன்னியம்மன் சந்நதியும் ரேணுகாதேவி சந்நதியும் உள்ளது. ஈசான மூலையில் வில்வேஸ்வரனும் வில்வநாயகியும் உள்ள சந்நதி உள்ளது. இந்த சந்நதியின் விமான அமைப்பு லிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு பார்த்து சிலா வடிவில் மதுரை வீரன் சந்நதியும்உள்ளது. இத்திருத்தலத்தில் வார நாட்களில் ஞாயிறு, செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மக்கள் வரவு அதிகம் இருக்கும்.

அதேபோல் .ஆடி மாதம் வெள்ளி திங்கட்கிழமை மக்கள் வருகை அதிகளவில் இருக்கும். நவராத்திரி சமயத்தில் அம்பாள் தரிசனம் செய்ய என மக்கள் அதிக அளவில் வருவார்கள். கார்த்திகை முதல்நாள் முதல் ஐயப்பபக்தர்கள் வரத்தும் அன்றுமுதல் மண்டல பூஜையும் நடைபெறும். பிரதோஷம்,பௌர்ணமி, புத்தாண்டு,பொங்கல், மஹாசிவராத்திரி, பல உற்சவங்கள் பிற்காலத்தில் சேர்த்துக் கொண்டாடப்படுகின்றன. சென்னை கந்தகோட்டம் அருள்மிகு கந்தசாமிப் பெருமான் வேடர்பறி உற்சவத்திற்கு ராயபுரம் வந்து திரும்பும் போது இத் திருக்கோயிலுக்கு நேர் எதிரில் முருகப்பெருமான் நிற்க இருவருக்கும் ஏக காலத்தில் கற்பூர ஆரத்தி நடந்து அதன் பிறகே திரும்புவார். திருக்கோயில் தினமும் காலை 6.30மணியிலிருந்து 10.30 மணி வரையும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரையும் தரிசனத்திற்கென திறந்து இருக்கும். திருக்கோயிலுக்குச் செல்ல விரும்புவோர்கள் மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்.

Tags : Pachayayamman ,devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி