*நூற்றாண்டு கனவு மத்திய அரசு மனசு வைத்தால் நனவாகும்தேவாரம் : கம்பம் தொகுதியின் நூற்றாண்டு கனவான தேவாரம்- சாக்குலூத்து மெட்டு சாலை திட்டம் நிறைவேற்றப்பற்றப்பட்டால் தமிழகம்- கேரளாவுடன் எளிதாக இணைந்து பொருளாதாரம் உயர வழிவகுக்கும் எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய வனத்துறை அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்ககூடிய போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு சாலைகள்இருந்தாலும், இச்சாலைகள் அனைத்தும் நீண்ட தூரம் கொண்டவையாக உள்ளன. இதனால் 60 கிலோ மீட்டர், 40 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இச்சிரமங்களை போக்கிடும் வகையில் சாக்குலூத்து மெட்டு சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. தேவாரம் டி.மீனாட்சிபுரத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் தூரம் மட்டும் இணைப்பு சாலை அமைத்தால் கேரளாவின் தூக்குப்பாலம், உடுப்பஞ்சோலை போன்ற ஊர்கள் இணைக்கப்பட்டு விடும். இத்திட்டம் அமைய உள்ள 4.5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டிற்குள் வருகிறது. ரிசர்வ் பாரஸ்ட் பகுதி என்பதால் இதற்கு முட்டுக்கட்டை போடபட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சாலை அமைக்கப்பட்டால் மிக எளிதாக கேரளாவிற்கு செல்வதுடன் தினந்தோறும் வேலைக்கு செல்லக்கூடிய ஏலதோட்ட தொழிலாளிகள் அரை மணிநேரத்தில் கேரளாவிற்கு செல்வர். எனவே தேவாரம் சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த பகுதிகளின் பொதுமக்கள், வர்த்தகர்கள், ஏலதோட்ட தொழிலாளர்கள் என அனைவருமே இந்த திட்டம் வரும் என எதிர்பார்க்கும் நிலையில் மத்திய அரசு மனசு வைத்தால் மட்டுமே ஒப்புதல் கிடைக்கும். இதற்கு தமிழக அரசும், வனத்துறை மூலம் தீவிரப்படுத்தி இத்திட்டம் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்குவது மிக.. மிக.. அவசியம்.அதிமுக எம்பி ‘கப்சிப்’தேனி தொகுதியின் அதிமுக எம்பியான ரவீந்திரநாத், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இத்திட்டம் கொண்டு வருவதற்கு முழுமையாக பாடுபடப்போவதாக பிரசாரம் செய்தார். காரணம் 4.5 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள அடர்ந்த காட்டுப்பகுதி, மத்திய அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. ரிசர்வ் பாரஸ்ட் பகுதியாக உள்ளதால் இதனை மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் கொண்டு போய் சேர்த்து, இத்திட்டத்தின் பயன் மக்களை எந்த அளவிற்கு போய் சேரும் எனக்கூறி அனுமதி பெற்றால் மட்டுமே சாத்தியமாகும். இதேபோல் கடந்த 2 முறை தொடர்ந்து அதிமுக ஆட்சிக்காலம் நடந்தபோது கூட சட்டசபையில் முக்கிய பிரச்னையான சாக்குலூத்து மெட்டு சாலை திட்டம் பற்றி பேசவே இல்லை. மறுபுறம் அதிமுக எம்பிக்களே தொடர்ந்து 10 வருடங்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.நூறு வருட ஏக்கம்.. கேரளாவை இணைக்கக்கூடிய சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தினால் தமிழர்கள் மட்டும் அல்லாமல், கேரளா மக்களும் எளிதாக வந்து செல்வர். பொருளதாரத்தில் மிகவும் பின்தங்கிப்போன தேவாரம் வளமான பூமியாக மாறும். இதற்காகவே பல போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தினார்கள். 100 ஆண்டு ஏக்கமான இத்திட்டம் எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.திமுக ஆட்சியில் பலமுறை வேகம் எடுத்தது…இதுகுறித்து கம்பம் தொகுதி எம்எல்ஏவும், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான ராமகிருஷ்ணன் கூறும்போது, தேவாரம் மக்களின் பொருளாதார பாதுகாப்பு திட்டமாக உள்ள சாக்குலூத்து மெட்டு மலைச்சாலை திட்டம், கேரளாவுடன் 30 நிமிடத்தில் பல முக்கிய நகரங்களை இணைக்கக்கூடியது. நான் சட்டமன்ற உறுப்பினரான பின்பு இதுவரை பலமுறை குரல் கொடுத்துள்னேன். திமுக ஆட்சி செய்யும்போதெல்லாம் சாக்குலூத்து திட்டம் பற்றி தனிக்கவனம் செலுத்தப்பட்டு மத்திய வனத்துறை கட்டுப்பாட்டு அலுவலகம் கொண்டு செல்லப்படும். ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசின் வனஇலாகா கிடப்பில் போடப்படுவது தொடர்கிறது. கம்பம் தொகுதி மக்களின் குறிப்பாக தேவாரம் சார்ந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மத்திய வனத்துறை சாலை அமைக்க அனுமதி பெற தொடர்ந்து முயற்சிப்பேன். எனது குரல் சட்டமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கும். மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்….
The post தமிழகம், கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு சாலை திட்டம் நிறைவேறுமா? appeared first on Dinakaran.