×

பாடத்தில் முதன்மை தரும் பரிமுகக் கடவுள்

ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந்நாராயணன் அர்ச்சா ரூபியாய் எழுந்தருளி, ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைஷ்ணவத் திருத்தலங்களில், திருவஹிந்திபுரம், குறிப்பிடத் தகுந்ததாகும். அஹீந்தரன் (ஆதிசேஷன்) நிர்மாணித்த தலம் ஆதலால் அஹீந்திரபுரம் (திருவயிந்தை) எனப் பெயர் பெற்றது. கருடனால் கொண்டு வரப்பட்ட விரஜா தீர்த்தம், கருடநதி என்ற பெயரில் ஓடுகின்றது. ஆதிசேஷன் கொண்டு வந்த பாதாள கங்கை, சேஷ தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்குள்  பிராகாரத்தில் தாயார் சந்நதி முன்பு உள்ளது. கருட தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும், சேஷ தீர்த்தம் நிவேதனங்கள் தயாரிக்கவும் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆஞ்சநேயர் இலங்கைக்கு சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும்பொழுது, இங்கே நழுவி விழுந்த சிறு மலைத்துண்டு, ஔஷதகிரியாக வளர்ந்துவிட்டது. இந்த மருந்து மலையில் உடல் பிணி அகற்றி உயிர்காக்கும் மூலிகைகளும் செழித்து வளர்ந்தன. அதற்காக அனுமானைப் போற்றி நன்றி கூறி வழிபடும் விதமாகவும், இந்த மலை அடிவாரத்தில் இருந்துகொண்டு பெருமானை சேவிக்க வரம் வேண்டி அனுமான் பெற்றதாலும் மலையடிவாரத்தில் வடக்கு முகமாக சஞ்சீவி ஆஞ்சநேயர் அருட்பாலிக்கிறார் என்று புராணங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்சாரமாகிய ரோகத்துக்கு மருந்தாகிய பகவான் நித்யவாசம் செய்து வருவதனாலும் ஔஷதாசலம் (மருந்து மலை) என்ற திருநாமம் பெற்றது.

கோயிலுக்குள் பிரதான மூர்த்தி, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருக்காட்சியளிக்கின்றார். திருமலை ஸ்ரீநிவாசனுக்கு தமயனாராக இவரைக் கூறுவது ஐதீகம். திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை அதனால் இங்கும் செலுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. வேங்கடேச அஷ்டோத்தர சதநாமார்ச்சனையே இப்பெருமாளுக்கும் வழிபாட்டில் இடம் பெறுகின்றது. “வையமேழும் உண்டு என்ற பாசுரத்தால் திருமங்கை ஆழ்வாரும்.”வெற்புடணொன்றி என்ற பாசுரத்தாலும், “நின் வடிவழகு மறவாதார்பிறவாதவரே” என்றும் வேதாந்த தேசிகரால் மங்களாசனம் செய்யப்பட்டவர். உற்சவர் அச்யுதன், மேவுஜோதி, வெவ்வினை தீர் மருந்து, மூவராகிய மூர்த்தி முதலான பல திருநாமங்களுடன் விளங்குபவர்.

சோழ அரசனுக்கு பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் தாம் ஒருவனே என்று உணர்த்த மூம்மூர்த்திகளின் அங்க அடையாளங்களாகிய பத்மம், ஜடை, நெற்றிக்கண், சங்கு, சக்கரம், கதை எல்லாம் தரித்த மூவராக தேவநாதன் திருக்காட்சியளித்தார். தாயார், ஹேமாம்புஜநாயகி. அம்புருஹவாசினி, பார்கவி, தரங்கமுக நந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் மகா வரப் பிரசாதியாக விளங்குகின்றார். இத்தலத்தில் பிரார்த்தனை செய்து செய்துகொண்டபின், திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் கூடிவருகின்றன. பிருகு மகரிஷிக்கு பிரம்மன் அருளால் கிட்டிய மகளே இத்தலத்து தாயார்.

மகரிஷி உருவாக்கிய பூ தீர்த்தம் என்ற தடாகத்தில், ஒருநாள் ஆயிரம் இதழ்களைக் கொண்ட பொற்றாமரை ஒன்று மலர அதற்குள் மகாலட்சுமி குழந்தையாய் மகரிஷிக்கு திருக்காட்சி அளித்தாள், அவளை பாசத்துடன் எடுத்து செல்ல மகளாய் வளர்த்தார். தக்க பருவத்தில் தெய்வ நாயகனையே தன் கணவராக வரித்து, திருமணமும் செய்து கொண்டார். தாமரையில் உதித்தவளை தன் திருமார்பிலும், பிருகுமகரிஷியான தன் மாமனாரை தன் இடப்பக்கத்திலும் சேர்த்துக் கொண்டார் பெருமாள்.

ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், பள்ளி கொண்ட பெருமாள், ராஜ கோபாலன், லட்சுமி நரசிம்மன், அஹீந்திரபுர நாதன், ஆண்டாள், கருடன், விஷ்வக்ஸேனர், ஆழ்வார்-ஆசார்யர்கள், தேசிகன் ஆகியோர் சந்நதிகள் கொண்டு அருட்பாலிக்கிறார்கள். வேதாந்த தேசிகன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தூப்புல் என்னும் ஊரில் அவதரித்தவர். இத்தலத்தில் 40 ஆண்டுகாலம் வசித்துள்ளார். தேசிகன் கருட மந்திரத்தை உச்சாடனம் செய்து, கருடன் பிரத்யஷமாகி ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசிக்க அதனை தியானித்து ஹயக்ரீவரை தேசிகன் சேவித்ததாகவும், கருடனால் தரப்பெற்ற யோக ஹயக்ரீவரை பூஜித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன் தம் திருக்கைகளாலேயே நிர்மானித்த திவ்ய மங்கள விக்ரகத்தையும், அவர் எழுந்தருளியிருந்த திருமாளிகையையும், அவர் கட்டிய திருக்கிணற்றையும் இன்றும் இத்தலத்தில் தரிசிக்கலாம். மலை மேல் லட்சுமி ஹயக்ரீவர், யோக ஹயக்ரீவர், யோக நரசிம்மர், வேணுகோபாலன், கருடன் ஆகியோர் ஒரே சந்நதியில் எழுந்தருளியுள்ளனர். பிரளய காலத்தில் உலகம் அழியும் சமயம் பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள் வேதங்களை பெண்  குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதல பாதாளத்தில் ஒளித்து வைக்க, அதனை மீட்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே குதிரைமுகப் பெருமான் ஆவார்.

பரிமுகப் பெருமான் வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாய் விளங்குகின்றார். தமிழகத்திலேயே ஹயக்ரீவருக்கு முதன் முதலில் கோயில் அமையப் பெற்றது இங்குதான் என்கிறார்கள். இச்சிறு மலை மேல் பரிமுகப்பெருமாள் லட்சுமி தேவியுடன் லட்சுமி ஹயக்ரீவராகத் திருக்காட்சி அளிக்கின்றார். இத்தலத்தில் மாணவ பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். தலமரம் வில்வம். இது சிவனுக்கு உகந்தது. எனவே சிவபெருமானும், பெருமாளோடு சேர்ந்தே உறைவது புலப்படுகின்றது. பிரம்மா மலைமேலும், பரமசிவன், அருகே திருப்பாதிரிப்புலியூர் தலத்திலிருந்துரிலிருந்தும், எப்பொழுதும் தேவநாதனை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

சதா சர்வ காலமும் பெருமாள் இங்கே தங்கி இருப்பதை அறிந்த ஆதிசேஷன், ஒரு நகரை நிர்மாணிக்க அதுவே திருவஹிந்திரபுரம் ஆனது. பகவான் தாகத்திற்கு நீர் கேட்க, ஆதிசேஷன் தோண்டியதே ஆதிசேஷன் கிணறாகும். இத்தீர்த்தத்தில் உப்பு, வெல்லம், மிளகு, பால் இவற்றை பிரார்த்தனையாக சேர்த்து பக்தர்கள் ஸர்வரோக நிவாரணம் பெறுகிறார்கள். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில், புற்றுக்கு பால் ஊற்றுவதுபோல் இக்கிணற்றிலும் ஊற்றுகிறார்கள். சித்ரா பௌர்ணமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானவர் முடி காணிக்கை செலுத்துகின்றனர். 12 மாதங்களிலும் உற்சவங்கள் நடைபெறுவதும் இக்கோயிலின் தனி சிறப்பாகும். காலை 6 முதல் பகல் 12 வரையும் மாலை 4 முதல் இரவு 8.30 வரை ஆலயம் திறந்திருக்கும். கடலூரிலுள்ள திருப்பாதிரிப்புலியூர்க்கு மேற்கே 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து பேருந்துகள் மற்றும் ஷேர்-ஆட்டோக்கள் உண்டு.

Tags : god ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?