×

சிவனின் சகோதரியான சரஸ்வதி

அம்பிகையான பராசக்தியிடமிருந்தே இதர சக்திகள் உண்டானார்கள். எப்படி? எல்லா வர்ணங்களையும் கொண்ட அட்டைகளைச் சுழற்றினால் வெறும் வெண்மை நிறம்தான் தோன்றும். ‘ஸ்பெக்ட்ரம்’ என்ற சாதனத்தைக் கொண்டு வெண்மையான ஒளியிலிருந்து ஒரு வர்ணத்தை மட்டும் பிரித்தால் மற்ற வர்ணங்களும் வெளிப்பட்டு விடுகின்றன. பிரம்மம் என்பது வர்ணம் இல்லாத சுத்த ஒளி மாதிரி. அதில் காரியமே இல்லை. ஆனாலும் சகல காரியங்களுக்கும் ஆதாரமான சகல சக்திகளும் அதில்தான் உள்ளன. எல்லா வர்ணங்களும் சுத்த ஒளிக்குள் இருக்கிற மாதிரி. காரியம் இல்லாத பிரம்மம் தன்னைத்தானே உணர்ந்துகொண்டது. ஒரு சலனம்-ஒளிச்சிதறல் மாதிரி.

இந்த ஒளிச்சிதறலில் முதலில் சிவப்பு பிரிகிறது. பிரம்மம் அம்பாளாகிறது. இவளே காமாட்சி - காமேஸ்வரி. பிரம்மத்திலிருந்து காமேஸ்வர - காமேஸ்வரி என்ற சிவப்பு பிறந்தபின் செம்மஞ்சளான பிரம்மாவும், லட்சுமியும் சேர்ந்து வெளிப்பட்டார்கள். பின்னர், நீலமான மகாவிஷ்ணுவும், பார்வதியும் ஆவிர்பவித்தார்கள். வெள்ளையான ருத்திரனும், சரஸ்வதியும் தோன்றினார்கள். பிரம்ம சக்தியிலிருந்து இரட்டையாகத் தோன்றியவர்கள் இவர்கள். பிரம்மனும், லட்சுமியும் உடன் பிறந்தவர்கள். தங்க நிறம், தாமரை ஆசனம். பிரம்மா ஜீவராசிகளைப் பெருக்கினார். லட்சுமி ஐஸ்வர்யத்தைப் பெருக்கினாள்.

 நீலமேக சியாமள வர்ணம் கொண்ட விஷ்ணுவும், பார்வதியும் உடன் பிறந்தவர்கள். பரிபாலனமும், மாயா விலாசமும் முக்கியமாக இருக்கிற நிலை இது. சிவன் கோயில் வடக்குப் பிராகாரத்திலுள்ள துர்க்கையைப் பாருங்கள். அவள் விஷ்ணு மாதிரியே சங்கு சக்கரம் வைத்துக் கொண்டிருப்பாள். இதனால்தான் பார்வதிக்கு நாராயணி, சியாமளி முதலிய பெயர்கள் உண்டு. சிவனும், சரஸ்வதியும் உடன் பிறந்தவர்கள். சிவன் கோயில் தெற்குப் பிராகாரத்தில் பார்வதி கலப்பில்லாமல் உள்ள தட்சிணாமூர்த்தியைப் பார்த்தால் இது தெரியும். சரஸ்வதி மாதிரியே இவர் புத்தகமும், ஜபமாலையும் வைத்திருப்பார். இருவரும் ஞான மூர்த்திகள்; இருவரும் வெளுப்பு.

பிரம்மா சிவனின் சகோதரியான சரஸ்வதியை மணந்தார். சிவன் மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியை மணந்தார். மகாவிஷ்ணு பிரம்மாவின் சகோதிரியான லட்சுமியை மணந்தார். வெள்ளை என்பது சத்வ குணம், செம்மஞ்சள் ரஜோ குணம், நீலம் தமோ குணம் என்பார்கள். முக்குணங்களைத் தனித்தனியாகப் பிரித்துவிடாமல் இருக்கவே அவர்களுடைய சக்திகள் அவர்கள் குணங்களுக்கு மாறுபட்டதாக இருக்கிறார்கள்.

Tags : Saraswati ,Shiva ,
× RELATED கராத்தே மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கல்