×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன்

கண்கண்ட தெய்வமாய் விளங்கும் கந்தன் அருளாட்சி புரிந்து வரும் பல தலங்களுள் திருப்போரூர் பதியும் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு யுத்தபுரி என்ற பெயரும் உண்டு. கடலிலே போர் நடந்த இடம் திருச்செந்தூர் என்றும், நிலத்திலே போர் நடந்த இடம் திருப்பரங்குன்றம் என்றும், விண்ணிலே போர் நடந்த இடம் திருப்போரூர் என்றும் புராணங்கள் வாயிலாகத் தெரிய வருகிறது. மேலும், சமரபுரி, போரியூர், செருவூர், போரிநகர், திருஅமரப்பதி, சமதளப்பூர் எனப் பல்வேறு பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது.

பனங்காடாய்க் கிடந்த இப்பகுதியில், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தவஞானியாய் விளங்கிய சிதம்பர சுவாமிகளால் இங்கே ஒரு முருகன் ஆலயமும், திருக்குளமும் அமைக்கப்பட்டது. திருப்போரூர் சந்நதி முறை எனும் 726 பாடல்களை இங்கு அருளும் கந்தசாமிப்பெருமானின் மீது அவர் பாடியுள்ளார்.  ஆலயத்திற்குச் செல்வதற்கு ஒரு கி.மீ முன்னரே வேம்படி விநாயகர் எல்லையைக் காத்து அருள்கின்றார். விநாயகரை வணங்கி முருகனை தரிசிக்கச் செல்கிறோம். ஆலயத்திற்குச் செல்லும் முன் வள்ளலார் ஓடை என்றும், சரவணப் பொய்கை என்றும் அழைக்கப்படும் திருக்குளம் மிகப் பெரிய அளவில் காட்சி தருகிறது. இத்திருக்குளம் முருகனின் அருளைப் போல என்றுமே வற்றுவதில்லையாம். இதைத்தவிர பிரணவாம்ருதம் எனும் தீர்த்தம் இத்தல பிரணவ மலையிலும், வேலாயுத தீர்த்தம் எனும் தீர்த்தம் கண்ணுவர் பேட்டையில் உள்ள சிதம்பரசுவாமிகளின் திருமடத்தின் வடக்கிலும் உள்ளது.

ராஜகோபுரத்தைத் தாண்டி ஆலயத்தினுள் நுழைந்தால் இருபத்துநான்கு கல்தூண் மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி உள் மண்டபம் உள்ளது. அதையும் கடந்தால் தீரா வினை தீர்க்கும் கந்தசாமியின் சந்நதி உள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் கந்தசாமி, பனை மரத்தாலான சுயம்பு மூர்த்தமாக காட்சி தருகிறார். முருகனின் அருள் வெள்ளம் நம்மை நோக்கிப் பாய்வதைப் போல் உணர்கிறோம். வந்த வினைகளையும், வருகின்ற வினைகளையும் நீக்கும் கந்தசாமியான இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை.

புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அபிஷேகம் செய்வதற்காகவே அவர் திருமுன் கருங்கல்லினாலான முருகன், வள்ளி, தெய்வானை மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முருகப் பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரதக் கரங்களுடன் அருள்கிறார். இது முருகனின் திருக்கோலங்களில் ஒன்றான பிரம்மசாஸ்தாவின் அம்சமாகத் திகழ்கிறது.  அவர் சந்நதியின் முன் மயிலிற்குப் பதிலாக தேவேந்திரனின் ஐராவத யானை அமர்ந்துள்ளது. கருவறை பிராகாரத்தை வலம் வரும் போது கோஷ்ட தெய்வங்களையும், உற்சவ விக்ரகங்களையும் தரிசிக்கிறோம். உற்சவ விக்ரகங்களில் வில்லேந்திய வேலவனும், தந்தைக்கு மந்திர உபதேசம் செய்யும் சுவாமிநாதனின் உபதேசமூர்த்தியின் திருவுருவமும் மனதைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வலது காலை மயில்மேல் ஊன்றி வில்லேந்திய கோலத்தில் வேலவன் முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்துடன் அருளும் மூர்த்தமும், சிவபெருமானது மடியில் அவர் திருமுகத்தை நோக்கி முருகன் அமர்ந்திருக்க, ஈசன் வாய் புதைத்துக் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அற்புதக் காட்சியும் மனதை விட்டு அகல மறுக்கிறது. மானசாரம் எனும் சிற்ப நூலில் குறிப்பிட்டுள்ளபடி உள்ள இந்த அமைப்பை தேசிகர் என்கிறார்கள். பிராகார வலம் முடியும் இடத்தில் சிதம்பர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யந்திரம் உள்ள சந்நதி உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இதில் சகல தேவதைகளும் வாசம் புரிவதாக ஐதீகம். இந்த யந்திரம் ஆமைவடிவ பீடத்தில் எட்டு யானைகள், எட்டு நாகங்கள், கணங்கள் போன்றோரால் தாங்கப்படும் பெருமை உடையது.

மூல மூர்த்திக்குச் சமமாக இந்த யந்திரத்திற்கும் தினசரி பூஜைகள் உண்டு. கந்தசஷ்டி ஆறு நாட்களும் விசேஷமாக வழிபடப்படும் இந்த சந்நதியை தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதன் அருகில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி அருள்கிறார். வெளிமண்டபத்தில் நான்கடி உயரத்தில் வலது கையில் தாமரையும், இடது கையில் குவளை மலரும் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் கருணை பொங்கும் திருமுக மண்டலத்துடன் தெய்வானை தனிக்கோயிலில் அருள்கிறாள். இத்தலத்தில் உள்ள சர்வ வாத்யமண்டபம் ஓர் ஒப்புயர்வற்ற கலைக் கோயிலாய் துலங்குகிறது. ஈசனின் திருவிளையாடல்களும், முருகப்பெருமானின் திருவிளையாடல்களும் இங்கு அற்புதமான சிலைவடிவங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர வன்மீகேசர், நவவீரர்கள், காருண்ய அம்மையார், பைரவர் போன்றோரும் தனி சந்நதிகளில் அருள்கின்றனர். தலவிருட்சமாக வன்னிமரம் விளங்குகிறது.  மயில்மண்டபத்தில் துலாபார பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.  

இத்தலத்தில் உள்ள அறையில் பனைமரத்தின் அடிப்பாகத்தால் ஆக்கப்பட்ட நெற்குதிர்  போன்ற அமைப்பில் நிவேதன அரிசியைக் கொட்டி வைத்துள்ளனர். அதை ஆதி பனைமரம் என அழைக்கின்றனர். இத்திருக்கோயிலில் தினமும் நான்கு கால வழிபாடுகள் நடக்கிறது. தினசரி பூஜைகள் வன்மீகேஸ்வரரிடம் தொடங்கி பைரவரிடம் முடிகிறது. அசுரர்களுடன் போர் புரிந்த தோஷத்தை முருகப்பெருமான் இந்த வன்மீகேசரைப் பூஜித்து நீக்கிக் கொண்டதாக ஐதீகம்
உள்ளது இங்கு முதல் பூஜை இவருக்கே நடத்தப்படுகிறது.

திருப்போரூரில் முதலில் வேம்படி விநாயகர், பிறகு சிதம்பரசுவாமிகளின் சமாதி, அடுத்து எல்லையம்மன், பின் பிரணவ மலையில் அருளும் ஈசன், அம்பிகை என்ற வரிசையில் வழிபட்டு நிறைவாக கந்தசாமியை வணங்கும் மரபு உள்ளது. ஓம் எனும் பிரணவமே முருகப்பெருமானை பூஜித்து, பிறகு இந்த ஆலயத்தின் பின்னால் மலைவடிவில் துலங்குவதாக ஐதீகம். இந்த மலையில் கைலாசநாதர், பாலாம்பிகையோடு அருள்கிறார். மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற விழாக்கள் இத்தலத்தில் விமரிசையாக நடக்கிறது. கந்தசஷ்டியின் போது லட்சார்ச்சனை விழா மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இத்தல அர்த்த ஜாம பூஜையின்போது முருகப் பெருமானுக்கு மிளகு சாதமும், 16 மிளகு வடையும் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

மிளகு சாதம்  தேவையானவை:

அரிசி    1 படி
மிளகு தூள்    50 கிராம்
உப்பு    தேவையான அளவு
நெய்    5 இரண்டு தேக்கரண்டி

செய்முறை: முதலில் அரிசியை பொல பொலவென வேகவைத்துக் கொள்கிறார்கள். பின்பு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலந்து நிவேதிக்கிறார்கள்.

மிளகுவடை தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு    2 ஆழாக்கு
மிளகு        1 டீஸ்பூன்
அரிசி மாவு    2 டீஸ்பூன்
உப்பு        தேவைக்கேற்றவாறு
எண்ணெய்    பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கிறார்கள்.

மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்கிறார்கள். உரலில் உளுத்தம் பருப்பைப் போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்கிறார்கள். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்கிறார்கள் பின் ஈரத்துணியில் மெல்லிய வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கிறார்கள். கர கரவெனும் மிளகுவடை பிரசாதம்
தயார்.

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் 42வது கிலோமீட்டரில் உள்ளது, திருப்போரூர்.

ந பரணிகுமார்
படங்கள்: விவேகானந்தன்

Tags :
× RELATED திருத்தணி கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகையை ஆன்லைனில் காண ஏற்பாடு