×

தவத்துறை வீணாதரர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் அதாவது தவத்துறை என்றழைக்கப்படும் இக்கோயிலின் கருவறை தென்கோட்டச் சிற்பமாக வடிக்கப்பெற்றிருக்கும் இவரை கண்டவுடன் ஒருகணம் நம்மை உறைய வைக்கும் பேரழகர்.! திருச்சிராப்பள்ளி மாவட்ட முற்சோழர் கால கோயில்களில் இங்கு மட்டுமே இறையகக் கோட்டச்சிற்பமாக வீணையேந்திய பெருமானைக் காணமுடிவதாக முனைவர்.கலைக்கோவன் அவர்கள் தமது ‘தவத்துறையும் கற்குடியும்’ நூலில் குறிப்பிடுகிறார்.

சடைமண்டலத் தலையலங்காரம் நடுவில் மண்டையோடு அமையப்பெற்று சடைக்குழல் இருதோள் வரை பரவி வழிகிறது. மெருகூட்டும் எளிய ஆடை அணிகலன்களுடன் வலச்செவியில் மகரகுண்டலமும் இடச்செவியில் பனையோலைக் குண்டலமும் அழகு செய்கின்றன. இடது முழங்காலைச் சற்றே மடித்த நிலையில் நூற்றாண்டுகளாய் வசீகரிக்கும் உறைந்த புன்னகையுடன் தனது முன்னிரு கரங்களால் வீணையேந்தி வாசிக்கிறார்! அழகே உருவான அரிய முற்சோழர் கலைப்படைப்பு!

- பொன்னம்பலம் சிதம்பரம்

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்