கதிரவன் முன் நிற்கச்செய்யுங்கள் மதி தெளியும்

?கடந்த எட்டு வருடங்களாக என் மகளின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இருக்கும் குணம் மறுவேளை மாறிவிடுகிறது. கோபமாக பேசுவது, அழுவது, உக்கிரமாகப் பார்ப்பது என்று பலவித தொல்லைகள் கொடுக்கிறாள். இந்தப் பெண்ணால் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பல டாக்டர்களையும் பார்த்தாகிவிட்டது. உரிய பரிகாரம் கூறுங்கள்.

- கலா, திருவள்ளூர்.

ஒரு சில விஷயங்களில் பிரச்னையை எதிர்கொள்வதே சிறந்த பரிகாரமாக அமைகிறது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியும், மனோகாரகனும் ஆகிய சந்திரன் நீசம் பெற்று சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார். மேலும் அதே ஐந்தாம் வீட்டில் மனக்குழப்பத்தை உண்டாக்கும் கேதுவும் இணைந்துள்ளார். இவர்களுடன் அந்த ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆகிய செவ்வாயும் இணைந்துள்ளதால் மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். அதோடு நில்லாமல் புத்தி காரகன் புதனும், நல்லறிவினைத் தரும் குருவும் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்கள். இவை அனைத்தும் இணைந்து உங்கள் மகளின் பிரச்னையை தீவிரமாக்கி உள்ளது. பரம்பரையில் நிகழ்ந்த குற்றங்களும், மகளின் கர்ம வினையும் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளதால் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வினைக் காண இயலாது. என்றாலும் அவரை சமாளிக்க இயலும். பெற்ற தாயார் ஆகிய உங்களுக்கு பொறுமை என்பது மிகவும் அவசியம். பிரதி சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு உங்கள் மகளை அழைத்துச் சென்று 12 முறை சந்நதியை வலம் வரச் செய்வதோடு ஆதரவற்ற நிலையில் உள்ள வறியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினையும் செய்து வாருங்கள். அவரது மனநிலை கட்டுப்பாட்டிற்குள் இருந்து வரும்.

?என் மகளுக்கு பத்து வயது இருக்கும்போது கடுமையான காய்ச்சல் வந்து கை, கால் மூட்டுகள் வீங்கிவிட்டது. இந்த ஜூரத்தினால் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். 13 வருடங்களாக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். தற்போது திருமண வயதில் உள்ள அவருக்கு வாழ்க்கை நல்லபடியாக அமைய பரிகாரம் கூறவும்.

- புனிதா, காஞ்சிபுரம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதக பலத்தின்படி தற்போது அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. எந்த விதமான பயமும் இன்றி நீங்கள் அவரது திருமணத்திற்கான ஏற்பாட்டில் இறங்கலாம். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொஞ்சம், கொஞ்சமாக மாத்திரைகளின் வீரியத்தைக் குறைத்து  முற்றிலுமாக நிறுத்திவிடுவதற்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. அவரது ஜாதகத்தின்படி நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளது. உடல்நிலையை வலிமைபடுத்திக்கொள்ள தினமும் அதிகாலையில் சூரிய உதயம் ஆகும் நேரத்தில் சூரியனின் ஒளிபடும்படியான இடத்தில் அவரை ஒரு அரை மணி நேரத்திற்கு அமர்ந்திருக்கச் செய்யுங்கள். கதிரவனின் கதிர்வீச்சு மகத்துவத்தால் அவரது உடல்நிலை முற்றிலும் சரியாவதோடு குடும்ப வாழ்வும் நல்லபடியாக அமையும். ஞாயிறுதோறும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதோடு அங்கு தரப்படுகின்ற விபூதி பிரசாதத்தை மகளின் உடம்பின் மீது தினமும் பூசி வாருங்கள். மந்திரமாவது நீறு என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

?என் மகன் பி.டெக் படிப்பை முடித்திருந்தாலும் அரியர் வைத்திருக்கிறான். எவ்வளவோ எடுத்துக் கூறியும் முடிக்காமல் இருக்கிறான். தற்போது குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறான். அவனது எதிர்காலத்தை நினைத்து கவலையாக உள்ளது. அவனது வாழ்வு சிறக்க நல்ல வழி கூறுங்கள்.

- சகாயமேரி, ஆவடி.

ஐந்து வருடங்களுக்கு முன்பே படிப்பை முடித்திருந்தும் இன்னமும் அரியர் வைத்திருக்கும் மகனைப் பற்றி கவலையோடு கடிதம் எழுதியிருக்கிறீர்கள். மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நேரம் நன்றாக இருந்தாலும் அவரது மனம் படிப்பில் ஈடுபடாது. தனக்கான உத்தியோகத்தை நிலைப்படுத்திக் கொள்ள அவர் முயற்சிப்பதே நல்லது. படித்து பட்டம் பெறுவதால் மட்டும் உங்கள் மகனின் சம்பாத்யம் உயர்ந்து விடாது. தனது சொந்தத்திறமையால் மட்டுமே அவர் முன்னேற இயலும். இந்த உண்மையை உங்கள் மகன் நன்கு உணர்ந்திருக்கிறார். அவரை அரியர் தேர்வெழுதச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். அதனால் எந்தவிதமான பயனும் உண்டாகப் போவதில்லை. தற்போது அவர் வேலைக்குச் சென்றிருக்கும் இடம் நல்லதொரு அனுபவப்பாடத்தினைக் கற்றுத் தரும். அதன் மூலமாக அவர் விரைவில் சுயதொழில் செய்யத் தொடங்குவார். அவரது திருமணம் என்பது உறவு முறையிலேயே அமையும். திருமணத்திற்குப் பின் அவரது வாழ்வின் வளர்ச்சி என்பது அற்புதமாக அமையும். உங்கள் மகனின் மனநிலைக்கு ஒத்துழைப்பு தருவதோடு அவரது முயற்சிகளுக்குத் துணை நில்லுங்கள். ஞாயிறு தோறும் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்வதோடு மதிய நேரத்தில் ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களின் தாகத்தினைத் தீர்க்கும் விதமாக நீர்மோர் அளித்துவாருங்கள். மகனின் வாழ்வு சிறக்கக் காண்பீர்கள்.

?35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவருக்கு இன்னமும் ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் ஆறு மாதம், ஒரு வருடம்தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய முடிகிறது. நிரந்தர வேலையின்றி தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். நல்லதொரு வழி காட்டுங்கள்.

- மாபுலால், சேலம்.

பரிகாரம் இந்து முறைப்படி செய்ய வேண்டுமா அல்லது இஸ்லாம் முறைப்படி செய்ய வேண்டுமா என்றும் கேட்டு எழுதியுள்ளீர்கள். மதம் என்பது இறைவனை அடைவதற்கான ஒரு மார்க்கம் என்பதையே அனைத்து மதங்களின் புனித நூல்களும் அறிவுறுத்துகின்றன. நீங்கள் எந்த மத்தினைப் பின்பற்றி இறைவனை வணங்குகிறீர்களோ, அந்த மதக் கோட்பாட்டின் படியே பரிகாரத்தினைச் செய்யலாம். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகப்படி அவர் அடுத்தவர்களிடம் கைகட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. சொந்தமாக வியாபாரம் செய்ய முயற்சிக்கலாம். ஜென்ம லக்னத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிய புதன் நீசபலத்துடன் அமர்ந்துள்ளார். புதன் சனியின் சாரம் பெற்றிருக்கும் நிலையில் சனி உச்ச பலத்துடன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அதிக விலையைக் கொண்டிருக்கும் ஆடம்பரப் பொருளாக இருந்தாலும் அது நீசமான அளவில் இருக்கும் பொருள் சார்ந்த வியாபாரமாக அமையும். உதாரணத்திற்கு விலை உயர்ந்த காலணிகளை வியாபாரம் செய்யும் தொழிலை இவர் கையில் எடுக்கலாம். கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருந்தாலும் இதுபோன்ற தொழில் அவருக்கு நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் ஆடம்பர பொருட்களையும் இவரது வியாபாரத்தோடு இணைத்துக் கொள்வது நன்மை தரும். தோல் சார்ந்த பெல்ட், கைப்பை போன்ற பொருட்களும் நல்ல லாபத்தினைத் தரும். உங்கள் மகனிடம் சுயதொழில் செய்ய முயற்சிக்கச் சொல்லுங்கள். தற்போது நேரம் நன்றாக இருப்பதால் வங்கி சார்ந்த கடனுதவி கிட்டுவதில் தடையேதும் இருக்காது. 24.02.2020 முதல் அவரது வாழ்வினில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண்பீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

Related Stories: