×

சகல சம்பத்தையும் அருளும் ஸம்பத்கரிதேவி

லலிதாம்பிகையின் யானைப் படைத்தலைவி இந்த ஸம்பத்கரி தேவி. கோடிக்கணக்கான  யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ, சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட  ஸம்பத்கரி பரமேஸ்வரி, தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளையும்  வாரி வழங்கி  அருள்பாலிக்கிறாள். தேவியின் வாகனமான யானையின் பெயர் ரணகோலாஹலம்.லலிதா  ஸஹஸ்ரநாமத்தில் ஸம்பத்கரி ஸமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா எனும் நாமம் இந்த  தேவியைப் போற்றுகிறது. கோடிக்கணக்கான யானைகள் பின் தொடர, சகல அஸ்திரங்களும்  தேவியைப் பாதுகாத்தபடி சூழ்ந்து வர, தேவி தன்  வாகனமான ரணகோலாஹலம் எனும்  யானையின் மீதேறி அருட்கோலம் காட்டுகிறாள். அதுவரை லட்சுமி கடாட்சம்  கிட்டாதவர்களுக்குக் கூட இந்த தேவியின் அருளால் நிச்சயம் கிட்டும் என்பதை  தேவி ஆரோகணித்து வரும் யானை  எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாமரை  மலர்ந்து உணர்த்துகிறது. ஒரு யானையைக் கட்டி தீனி போடுவதற்கே பெருஞ்செல்வம்  வேண்டும். கோடிக்கணக்கான யானைகளைக் காப்பாற்றும் அளவிற்கு பெருஞ்செல்வம்  கொண்டவள் இத்தேவி எனில் இந்த அம்பிகையின் செல்வ வளத்தை அறியலாம். அந்த   செல்வ வளங்களை தன்னை உபாசனை புரியும் பக்தர்களுக்கும் வாரி வாரி வழங்கும்  பரம கருணாமூர்த்தினி இவள்.

லலிதாம்பிகையைப் போற்றும் சக்தி மஹிம்ன  துதியில் மிக வீர்யம் உள்ளதும் வெற்றியுடன் விளங்கக்கூடியதுமான உனது  அங்குசத்தை தன் உள்ளத்தில் எவன் தியானிக்கிறானோ அவன் தேவர்களையும்  பூவுலகில் ஆள்பவர்களையும் எதிரி  சைதன்யங்களைக் கட்டுப்படுத்தக்  கூடியவனாகவும் விளங்குவான் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வளவு பெருமை பெற்ற  லலிதையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி இந்த ஸம்பத்கரிதேவி.  யானையின் மதத்தை அடக்க அங்குசம் உதவுவதுபோல, நான் எனும் மதத்தை தேவி  அடக்குகிறாள். யானையைப் பழக்கிவிட்டால் அது எவ்வளவோ நல்ல பணிகளுக்கு  உதவுவது போல, இந்த தேவியும் தன்னை அன்பாக வழிபடும் பக்தர்களின் வாழ்வில்  மங்களங்கள் சூழ செல்வவளம் பெருக்குகிறாள். யானையும் குதிரையும் எங்கேயோ  காடுகளில் இல்லை. நமக்குள்ளேயே மனமாகவும், அகங்காரமாகவும்  உள்ளன.  இரண்டையும் பழக்கப்படுத்தி பக்குவமாக்க வேண்டும். அம்பிகையை அடைவதற்கு முன்,  குதிரையைப் பழக்குவது போல், நம் மனதைப்பழக்கி, யானையின் மதத்தைக்  கட்டுப்படுத்துவது போல நம் அகங்காரத்தையும் ஒடுக்க  வேண்டும் என்பதே இந்த  தேவியரின் தத்துவம் விளக்குகிறது.

எண்பதுகளில் பரமாச்சார்யார் அருளுரைப்படி பிடியரிசித் திட்டத்தை சைதாப்பேட்டையில் அறிமுகப்படுத்தி மாதா மாதம் சென்னையிலிருந்து 23 மூட்டை அரிசியை நானும் என் ஆருயிர் நண்பனுமான அமரர் கோயம்பேடு சரபேஸ்வரர்  வாசனும், மற்றும் சில அன்பர்களும் தேனம்பாக்கம் வேதபாடசாலைக்கு சேகரித்துத் தந்து கொண்டிருந்தபோது மகாபெரியவரின் அருளோடு ஸ்ரீவித்யையை உபாசிக்கும் பெரும்பேறு கிடைத்தது. தேவியை எனக்குத் தெரிந்த முறையில் உபாசித்த  போது 93ம் வருடம் தேவியின் யானைப்படைத் தலைவியான ஸம்பத்கரீ தேவியின் மந்திரம் கிடைத்தால் செல்வவளம் பெறலாம் என்று ஒரு புத்தகத்தில் பார்த்து ஒரு உபாசகர் மூலம் அந்த மந்திரத்தை உபதேசம் பெற்று வந்த அரைமணி  நேரத்தில் என் வீட்டின் முன் சர்வாலங்காரங்களோடு யானை வந்து என்னை ஆசிர்வதித்துச் சென்றது சத்தியம். அன்றிலிருந்து இன்று வரை தேவியின் அருட்கருணை எத்தனை எத்தனையோ சந்தர்ப்பங்களிலிருந்து காத்துகொண்டே வருகிறது.  நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். நான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் அந்த ஸம்பத்கரி மந்திரத்தை இங்கு அளிக்கிறேன்.

ஸம்பத்கரி தேவி தியானம்
அநேக கோடி மாதங்க துரங்க ரத பத்திபி:ஸேவிதாமருணாகாராம் வந்தே ஸம்பத் ஸரஸ்வதீம்

மூலமந்திரம்
க்லீம் ஹைம் ஹ்ஸெஹு ஹ்ஸௌஹு ஹைம் க்லீம்

Tags : Sampath Krishna Devi ,
× RELATED சுந்தர வேடம்