×

சிவபெருமானை சோதித்த முத்தாரம்மன்

அஷ்ட காளியர்களாக அவதரித்த முத்தாரம்மன் உள்ளிட்ட எட்டுபேரும் மகிஷா சுரனை வதம் செய்த பின் சிவபெருமான் தங்களை மணமுடிப்பதாக கூறினாரே, ஆகவே, உடனே சிவனை மணம் முடிக்க கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கயிலாயம் வருகிறாள். இதையறிந்த சிவன் நந்தி தேவரை அழைத்து ரகசியம் கூற, அதன்படியே நந்திதேவரும் வண்டு மலைக்கு சென்று 8 வண்டுகளை பிடித்து 8 குழந்தைகளாக்கி அஷ்ட காளிகள் வரும் வழியில் வைத்திருந்தார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்து அதன் அழுகுரலை நிறுத்தி, அவர்களுடன் கயிலாயம் வருகிறார்கள்.

சிவபெருமானிடம் தாங்கள் கூறியது போல எங்களை மணமுடிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது சிவபெருமான், நீங்கள் கன்னியர்களாக  வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள் என்றார். அப்படியானால்... என்று ஐயத்துடன் வினா தொடுத்தனர் அஷ்ட  காளிகள். நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்கவேண்டும். உங்களுக்கு எல்லா வரமும் தந்தருள்வேன்  என்றார்.

வரங்களை பெற்றவர்கள் அய்யன் சிவபெருமான் ஆசியோடு பூலோகம் புறப்படுகின்றனர். அப்போது முத்தாரம்மன், சிவனிடம் சென்று தனக்கு தனியே  ஒரு வரம் வேண்டும். அது மற்றவர்கள் பெறாததாக இருக்க வேண்டும் என்றாள். அப்படி என்ன வரம் என்று சிவபெருமான் யோசிக்க, முத்தாரம்மன்  கூறினாள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தப்பை உணர்ந்த பின் மன்னிக்கப்பட வேண்டும் அந்த வகையில் எனக்கு முத்து வரம்  வேண்டும் என்று கேட்க, சிவபெருமானும் தனது சக்தியால் 108 முத்துக்களை உருவாக்கி, அதை ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் வைத்து  அன்னை முத்தாரம்மன் கையில் கொடுத்தார்.

முத்துக்கள் சக்தி வாய்ந்தவையா என்று வினா தொடுத்த முத்தாரம்மனிடம், நிச்சயமாக சக்தி வாய்ந்தவை தான் என்றார் சிவபெருமான்.  அப்படியானால் அதை உங்களிடமே சோதித்து பார்க்கட்டுமா என்றாள் அன்னை நகைப்புடன். அய்யனும் புன்னகைத்தார். பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட  முத்துக்களை வாரி சிவபெருமான் மேல் இறைத்தாள் முத்தாரம்மன்.உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்துக்கள் விழுந்து வலியால் வேதனைப்பட்டார் சிவன். அதைக்கண்டு பார்வதி தேவி கலங்கினாள். அண்ணன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவரும் தங்கையின் அம்சமான முத்தாரம்மனிடம், நீ போட்டதை, நீயே தான் இறக்க வேண்டும் என்றார்.

எப்படி என்ற மறு கேள்வி கேட்ட முத்தாரம்மனிடம், அதற்கான விளக்கமளித்து வழிமுறையை சொல்லி கொடுத்தார் மகாவிஷ்ணு. அதன்படி தலைவாழை இலையை விரித்து, அதன் மேல் தயாபரனான சிவபெருமானை படுக்க வைத்து, சக்தியின் சூலாயுதத்தால் உருவான வேம்பு மரத்தின்  இலைகளைக்கொண்டு வந்து அதை வைத்து முத்துவை இறக்கினாள் முத்தாரம்மன். அகிலத்தையே ஆளும் சிவபெருமானாலேயே தாங்க  முடியவில்லை. மனித உயிர்கள் எப்படி தாங்கிக்கொள்ளும் என்று கருதி மகாவிஷ்ணு அந்த முத்துக்களை வாங்கி, கொப்பரையில் வைத்து வறுத்து,  அதன் வீரியத்தை குறைத்து அதன் பின் முத்தாரம்மனிடம் எடுத்து கொடுத்தார்.முத்து வரமும், தீராத நோய்களை திருநீற்றால் தீர்த்தருளும் வரமும் பெற்ற முத்தாரம்மன், முத்துக்கள் பெற்றதால் முத்துமாரி என்றும் முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படலானாள்.

Tags : Muttaraman ,Shiva ,
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்