×

நம்பியவர்க்கு நல்வாழ்வு தருவாள் நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி

எத்தனை கோயில்களில் மீனாட்சி சந்நதி இருந்தாலும், மதுரை தான் மீனாட்சியின் மூலஸ்தானம். எத்தனை கோயில்களில் காமாட்சி சந்நதி  இருந்தாலும், காஞ்சிபுரம்தான் காமாட்சியின் மூலஸ்தானம். எத்தனை கோயில்களில் விசாலாட்சி சந்நதி இருந்தாலும், காசிதான் விசாலாட்சியின்  மூலஸ்தானம்.அதேபோல் எத்தனை கோயில்களில் ராஜராஜேஸ்வரி சந்நதி இருந்தாலும், நங்கநல்லூர் ஸர்வமங்களா ராஜராஜேஸ்வரி ஆலயம் தான்  ராஜராஜேஸ்வரியின் மூலஸ்தானம். இது ஒரு ஸ்ரீவித்யா மந்த்ராலயம். சக்தி வாய்ந்த பல யந்த்ரங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்.சென்னையில் கோயில் நகரம் என்று புகழ் பெற்ற நங்கநல்லூரில் முதன்முதலில் ஏற்பட்ட கோயில் இதுவே. ‘நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி’ என்ற கீர்த்தி பெற்று பாபநாசம் சிவன், ஸ்ரீலட்சுமிகாந்த சர்மா போன்ற பெரியோர்களால் பாடப்பெற்ற ஸ்தலம் இதுவே.ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ‘‘நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி  கோயிலுக்குப்போய் அம்பாளை தரிசனம் பண்ணு’’ என்று பல பக்தர்களிடம் பணித்த கோயிலும் இதுவே.

ஸ்ரீசிருங்கேரி ஆச்சார்யாள் அபிநவ வித்யாதீர்த்தர் ‘‘இது பல்லாயிரம் வருஷங்களாய் அம்பாள் கோயில் கொண்ட இடம்’’ என்று சொன்ன இடமும் இதுவே.சேஷாத்ரி ஸ்வாமிகள் பூஜை செய்த சிவலிங்கம் உள்ள கோயிலும் இதுவே. சுரைக்காய் ஸ்வாமிகளின் யோகதண்டம் உள்ள திருக்கோயிலும் இதுவே.பாபநாசம் சிவன் பக்திப்பரவசத்தில் பாடிய அம்பாள் ராஜராஜேஸ்வரி கொலுவிருக்கும் கோயிலும் இதுவே.ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீசக்ர மஹாமேருவை பகவான் ரமணர் முன்னிலையில் ஸ்தாபித்த ஸ்வாமி சாஸ்திரிகள் ஸ்தாபனம் பண்ணின அம்பாளும் மஹாமேருவும் அமைந்த ஸ்ரீவித்யா மந்த்ராலயமும் இதுவே.வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சக்தி வாய்ந்த கோயிலும் இதுவே.

இக்கோயிலில் நாற்பத்தி ஐந்தாவது ஆண்டு தசமஹாவித்யா மஹாயாகம்28-9-2019(சனி) தொடங்கி 9-10-2019 (புதன்) வரை பதினைந்து திதி நித்யாதேவிகளும் ஒவ்வொரு படியில் வீற்றிருக்க, ஸ்ரீவாராஹி, ஸ்ரீசியாமளா தேவிகள் அருகே கோயில் கொள்ள, பதினாறு படிமீது நாற்பத்து மூன்று கோணங்களும் உள்ளடங்கிய ஸ்ரீசக்ர மஹாமேருவின் மேல், யாக குண்டத்தில் ஆவிர்பவித்த ஸ்வயம்பு உற்ஸவமூர்த்தி சகிதமாய், ஸ்ரீலலிதா மஹாதிரிபுர சுந்தரியாய், கரும்புவில், மலரம்புகள், பாசம் அங்குசத்துடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமாதா சர்வ மங்களா ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு நாற்பத்தி ஐந்தாவது ஆண்டு நவராத்திரி உற்சவம் ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயப்படி நடைபெற உள்ளது.தினமும் காலையும் மாலையும் நவாவரண பூஜை, தசமஹாவித்யா, மஹாயாகம், ஸ்ரீவித்யா ேஹாமம் நடைபெற உள்ளது.

குடந்தை நடேசன்

Tags : Nanganallur Rajarajeswari ,
× RELATED காமதகனமூர்த்தி