×

வேதனைகளை விடுவிப்பாள் வேம்புலி அம்மன்

* ஜமீன்பல்லாவரம், சென்னை

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டது பல்லாவரம். இங்கு ரயில்வே நிலையத்திற்கு கிழக்கு பக்கம் வடக்கு நோக்கி கோயில் கொண்டு அருள்கிறாள்  வேம்புலி அம்மன்.சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிலையம் அருகே வேப்பமரத்தின் கீழ் அரையடி உயரத்திற்கு கல் ஒன்று இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆடி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அவ்வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த வேப்பமரத்தின் நிழலில் ஒதுங்கினார். நெடுந்தூரம் நடந்து வந்ததால் கால் வலியின் காரணமாக அந்த மரத்தின் கீழ் இருந்த கல் மீது அமர்ந்தார். அமர்ந்த உடனே தூக்கி எறியப்பட்டார். மீண்டும் உட்கார முயன்ற போதும் யாரே அவரை கீழே தள்ளி விடுவது போல் உணர்ந்தார். பின்னர்  அந்தக்கல்லில் ஏதோ சக்தி இருப்பதை உணர்ந்து கை தொழுதார்.

அன்றிரவு அவரது கனவில் ஒரு அம்மன் தோன்றி எனக்கு பூஜை செய்து என்னை நம்பி வணங்கி வா, உன் வாழ்வை வளப்படுத்துவேன் என்றது.  அதன் படி அந்த நபர், அவ்விடம் சென்று அந்த கல்லை அம்மனாக நினைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூவும், பழமும் வைத்து ஊதுவத்தி  ஏற்றிவைத்து கற்பூரம் காட்டி வழிபட்டார். அதோடு தனது வேண்டுதலையும் வைத்தார். அவரின் வேண்டுதல் அடுத்த மாதமே நிறைவேறியது. அதனை தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் கூறி பெருமை பட்டுக்கொண்டார். இதனால் அந்த அம்மன் புகழ் பரவியது. அம்மனுக்கு பெயர் இல்லாமல், வேப்பமரத்தின் கீழ் இருந்ததால் வேம்பு கல் அம்மன், வேம்படிகல் அம்மன் என்றும் வேம்பல் அம்மன், வேம்பலி அம்மன், வேம்புலி அம்மன் என்றானது என கூறப்படுகிறது.

அந்தது ரயில்வேக்குரியது இடம் என்பதால் பிற்காலத்தில் ரயில்வே துறை அந்த இடத்தை எடுக்கக்கூடும். அவ்வாறு எடுத்தால் அம்மனை எடுத்து  விடுவார்களே என்று அஞ்சி, தற்போது கோயில் இருக்கும் இடத்தின் சொந்தக்காரர் மேஸ்திரி ஒருவரிடம் அப்பகுதியினர் இடம் கேட்டனர். அவர்,  கோயிலுக்காக என்றதும் மறுக்காமல் இடத்தை கொடுத்தார். அந்த அம்மனை வைத்து வணங்கி வந்தனர். அந்த இடத்தில் வேப்பமரமும், புளியமரமும்  நின்றது. இதனால் வேம்பு, புளி அம்மன் என்று அழைத்து வந்தனர். அதுவே மருவி வேம்புலி அம்மன் என்றானது என கூறப்படுகிறது. சில  ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதிதாக கட்டப்பட்டது. அப்போது வேம்புலி அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதை சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேம்புலி அம்மன் வலது காலை மடித்து வைத்து, இடது காலை தொங்கவிட்ட படி, நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருட் பாலிக்கிறாள்.  வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ்கரத்தில் கத்தியும், இடது கை மேற்கரத்தில் திரிசூலமும், கீழ் கரத்தில் குங்கும கொப்பரையும் வைத்தபடி காட்சி தருகிறாள். அம்மன் முன்பு சிரசும்,  முன்பு வழிபட்ட சுயம்பு கல்லும் வைக்கப்பட்டுள்ளது. அந்த கல் ஆண்டு தோறும் வளர்ந்து கொண்டே வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்த அம்மன் துர்க்கையைப் போன்று வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.அம்பாள் முன்பு செல்வவிநாயகரும், பாலசுப்பிரமணியரும் அருட் பாலிக்கிறார்கள். அடுத்த சந்நதியில் கால பைரவர், கேதாரியும், கேதாரி ஈஸ்வரரும்  ஒரு சந்நதியிலும், நாகரும், நாகாத்தம்மனும் மற்றொரு சந்நதியிலும் வீற்றிருக்கிறார்கள். மேலும் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர்  முதலான தெய்வங்களும் வீற்றிருந்து அருட்பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் புளியமரமாகும்.

இக்கோயிலில் ஆடி மாதம் 2வது வாரம் திருவிழா நடைபெறுகிறது. புதன் கிழமை காலை 5 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை  மாலை 7 மணிக்கு நவக்கலச பூஜை, வெள்ளிக்கிழமை ரயில்வே நிலையத்திற்கு அருகேயுள்ள குளக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரும்  நிகழ்ச்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை சக்தி கரகம் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும், குறிமேடையில் ஏறி அம்மன் அருள் வந்து ஆடுபவர் அருள் வாக்கு  சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை தீமிதி விழா நடைபெறுகிறது. பௌர்ணமி தோறும்  ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. கோயில் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். வேம்புலி  அம்மனுக்கு ஜாங்கிரி நைவேத்யம் செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்கின்றனர் பக்தர்கள்.  இந்தக்கோயிலில் காஞ்சிபுரம் வரதராஜ  பெருமாள் கோயிலில் இருப்பது போல வலது சுவற்றின் பக்கவாட்டில் தங்க பல்லி என்கிற நாமத்துடன் பல்லி வைக்கப்பட்டுள்ளது. பல்லி தோஷம்  உடையவர்கள் அந்த பல்லியை தொட்டு வழிபட்டால் தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

- ஆர். அபிநயா
படங்கள்: ஜி. சிவக்குமார்

Tags : Vampuli Amman ,
× RELATED சீனாவில் எனக்கு மோசமான அனுபவம்: ஸ்கேட்டர் ஜெசிகா வேதனை