×

முயற்சிகளில் வெற்றியை தருவாள் வடகுலசை முத்தாரம்மன்

* கௌரிவாக்கம், சென்னை

* 29-09-2019 கொடியேற்றம், 08-10-2019 தசரா திருவிழா

பெண் தெய்வ வழிபாடுகளில் முதன்மை தெய்வமாக வழிபாட்டில் இருந்தது காளி வழிபாடு. இதனைத் தொடர்ந்து உருவான வழிபாடு தான் அஷ்ட  காளி வழிபாடு. அதிலிருந்து உருவானது தான் முத்தாரம்மன் வழிபாடு. இந்த முத்தாரம்மன் அஷ்ட காளியரில் ஒருவராக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் பல லட்சம் பேர் கூடும் அற்புதமான திருவிழா குலசை முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழா. நவராத்திரியை முன்னிட்டு   முத்தாரம்மனின் அருளாட்சியால் வேடமணிந்த பக்தர்கள் கூட்டம் வருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டே இருக்கிறது.மைசூர் தசராவை மிஞ்சும்  வகையில்,  தமிழ்நாட்டின் தென்கோடியான குலசேகரப்பட்டினம் கடற்கரையில் தசரா திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவின் நிறைவில்  மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறார்.   
   
தசரா திருவிழாவையொட்டி முத்தாரம்மனை வேண்டி, பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து தன் வேண்டுதலை நிறைவேற்றி தந்த அம்மனுக்கு  நன்றி செலுத்தும் விதமாக வேடம் இட்டு வருகின்றனர். சென்னை கௌரிவாக்கத்திலும் முத்தாரம்மன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சில கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வேலை தேடி  வந்தனர். அவர்கள் தாம்பரம் காமராஜபுரத்தில் குடியேறினர். அதில் ஒருவரின் தலைமையில் ஆண்டு தோறும் தசரா திருவிழா கொடியேற்றத்தின்  போது மாலையணிந்து விரதமிருந்து திருவிழாவுக்கு இரண்டு நாள் முன்னதாக புறப்பட்டு குலசேகரப்பட்டினம் செல்வார்கள். இதில் காளி வேடமிடுபவர்  48 நாட்கள் விரதமிருப்பார். விரத நாட்களில் அதிகமாக வெளியே வருவது இல்லை. இதனால் அவர்கள் குடிசைப்போட்டு அதில் தங்கி இருந்து  வந்தனர். சில ஆண்டுகள் கால்நடையாக கூட சென்னையிலிருந்து குலசேகரப்பட்டினம் சென்றுள்ளனர்.

அவ்வாறு மாலையணிந்து விரதமிருந்த முத்தாரம்மன் பக்தர்கள் பதினைந்து பேர் ஒரு சேரக்கூடி சென்னை கௌரிவாக்கத்தில் ஒரு குடிசைப்போட்டு  அதில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் படத்தை வைத்து பூஜித்து வந்தனர். நாளடைவில் அம்மன் உத்தரவு கொடுத்ததன்பேரில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனுக்கு சிலை  வடித்து நிலை நிறுத்தி கும்பாபிஷேகம் நடத்தினர். ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீமுத்தாரம்மன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன்  நிர்வாகிகளின் சீரிய செயல் திறனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இப்போது கோயில்  ராஜகோபுரத்துடன் அழகுற காட்சி தருகிறதுகுலசையின் தோற்றம் அப்படியே இங்கு இருக்கிறது. கடல் மட்டும் தான் இல்லை. வேறு எல்லா அமைப்பும் அப்படியே உள்ளன. இதனால் கௌரிவாக்கமும் ஒரு குலசையாக அழைக்கப்பட்டது. தென்குலசை குலசேகரப்பட்டினம். என்பதால் வடகுலசை என்று கௌரிவாக்கம் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தன்னை நம்பி வரும் பக்தர்களின் துயரை துடைத்து அவர்களின் வாழ்வை வளமாக்கி தருகிறாள்.  அம்மை அப்பனை மனதார நினைப்பவர்களுக்கு எல்லா செயலும் வெற்றியாக அமையும். கோயில் கருவறையில் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ  முத்தாரம்மன் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி புரிகின்றனர். கருவறை முன்பு வலப்புறம் காளி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. காளிக்கு  விக்ரஹம் இல்லை. அதையடுத்து பேச்சியம்மன் நின்ற கோலத்தில் உள்ளார். இடப்புறம் கால பைரவர். எதிரே சூரியன், சந்திரன், குபேர கணபதி,  சுப்பிரமணியரும் உள் பிராகாரத்தில் வீற்றிருக்கின்றனர். கோயில் வெளிப்பிராகாரத்தில் துர்க்கை, பிரம்மன் ஆகியோர் தனித்தனியாக வடக்கு  நோக்கியும், பிரம்மசக்தி அம்மன் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மகாவிஷ்ணு மேற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தியும், அகத்திய  மாமுனியும் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் வடபுறத்தில் அய்யா வைகுண்டரின் பதி உள்ளது. தெற்கே ஐகோர்ட் மகாராஜா என்கிற  நாமத்தில் சுடலைமாடசுவாமி கிழக்கு நோக்கி கம்பீரமாக நின்றகோலத்தில் அருள்புரிகிறார். அவரின் அருகே வலப்புறம் தங்கமாடசுவாமியும்,  இடப்புறம் காளைமாட சாமியும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கருப்பண்ணசுவாமியும் குதிரை வாகனத்தில் இருந்தபடி காவல்தெய்வமாக அருளாட்சிபுரிகின்றனர்.

இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக கருப்பசாமி, சங்கிலிபூதத்தார், முனீஸ்வரர், முப்பந்தல் இசக்கியம்மன், முண்டன், பேச்சியம்மன்,  பலவேசக்காரன், சிவனனைந்த பெருமாள், எல்லையம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.வாரம்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் சுடலைமாடசுவாமி கோயிலில் குறிமேடையில் ஆணி செருப்பு மேல் நின்று கருப்பண்ணசுவாமி அருள்வந்து ஆடுபவர் அருள்வாக்கு சொல்கிறார்.இத்திருக்கோயில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் நிறுவப்பட்டது. அதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அன்றைய தினம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. ஆடி மாதம் 4வது செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை குடியழைப்புடன் தொடங்கி, புதன் மாலை  அம்மன் மஞ்சள் நீராடலுடன் நிறைவு பெறுகிறது. அதனைத்தொடர்ந்து வியாழன் மாலை குடியழைப்புடன் சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா  தொடங்குகிறது. சனிக்கிழமை காலை பொழுதுடன் நிறைவு பெறுகிறது.

ஆவணி மாதம் இத்தல குபேர கணபதி சந்நதியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரியையொட்டி தசரா  நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் அப்பனுக்கும், அம்மைக்கும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தை  மாதம் பொங்கலன்று 108 பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தின் போது திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சித்திரை  முதல் தேதியில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் நன்கொடையை மட்டும் வைத்து நல்லமுறையில் தெய்வங்களுக்கும், தெய்வங்களை நாடி வரும் பக்தர்களுக்கும் சிறப்புற சேவை செய்யும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீமுத்தாரம்மன்  அறக்கட்டளை அன்பர்களின் பணி பாராட்டத்தக்கது. முயற்சிகளில் வெற்றியை கிடைக்கச் செய்வாள் முத்தாரம்மன்.

படங்கள்: ஜி.சிவக்குமார்

சு.இளம் கலைமாறன்

Tags : Muttaraman Vadakkulasi ,
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!