×

உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை நீக்க வேண்டும், மாநில செஸ் வரி விதிப்பை மறு பரிசீலனை செய்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.வி.விக்கிரமராஜா தலைமை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து ேகாஷங்களை எழுப்பினர். அப்போது, விக்கிரமராஜா பேசியதாவது:கடந்த 28, 29ம் தேதிகளில் சண்டிகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடித்தட்டு ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிக்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்பே புரியாத நிலையில் வணிகர்கள் உள்ளனர். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தவறான விளக்கங்கள் அளித்து, உணவுப் பொருட்களுக்கு வரி இல்லை எனும் மாயையை ஏற்படுத்தும் முயற்சியை பேரமைப்பு கண்டிக்கிறது.பொட்டலமிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உள்ளாகிறது. பொட்டலமிடாத பொருட்களுக்கு வரி இல்லை என்னும் வாதத்தை முன்வைத்துள்ளனர். உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டப்படி, அனைத்து பொருட்களுமே பொட்டலமிடப்பட்டு, சீலிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த 2 முரண்பட்ட சட்டவிதிகளுக்கு இடையில் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். உணவு பொருட்கள் மீது போடப்பட்டு இருக்கும் ஜிஎஸ்டிவரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். அரிசிக்கு இதுவரை எந்த அரசும் வரிவிதித்தது கிடையாது. இந்த அரசு 5 சதவீதம் விதித்துள்ளது. இதேபோல், பால் பொருட்களுக்கும், இரும்பு பொருட்களுக்கும் வரியை அதிகரித்திருக்கிறது. இந்த வரி உயர்வை எந்த முகாந்தரமும் இல்லாமல் உடனடியாக திரும்ப பெறவேண்டும். வருகிற 26ம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அனைத்து இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பல்வேறு போராட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எங்களுடைய அடுத்தகட்ட போராட்டம் மதுரையில் உண்ணாவிரத போராட்டமாக நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதல்வர் செஸ்வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும். அவருடைய கவனத்துக்கு இதை கொண்டு செல்வோம்.  இவ்வாறு அவர் கூறினார்….

The post உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vikramaraja ,Wickramaraja ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...