×

“மஹாளய அமாவாசை” அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா?

முன்னோர்கள் வழிபாடு என்பது நமது பாரத நாடு முழுவதிலும் வாழும் பெரும்பான்மையான மக்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். வருடந்தோறும் வரும் “தை அமாவாசை, ஆடி அமாவாசை” வரிசையில் “புரட்டாசி” மாதத்தில் வரும் அமாவாசை தினம் “மஹாளய அமாவாசை” தினம் என அழைக்கப்படுகிறது. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் இந்த புனித நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மஹாளய அமாவாசை தினத்தன்று வீட்டை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு சிராத்தம் தர்ப்பணம் ஆகியவைகளை கொடுத்து விடுவது நல்லது. மறைந்த முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் இருந்தால், அவர்கள் சிராத்தம்கொடுப்பது சிறந்தது. ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவர்கள் வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்கலாம்.

இந்த அமாவாசை தினத்தில் சிராத்தம் கொடுக்க வேண்டிய ஆண்கள் முடிவெட்டுதல், முகசவரம் போன்றவற்றை செய்ய கூடாது. புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தின் மறுநாளான பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை தினம் வரையான 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இக்காலத்தில் உங்களுக்கு தீட்டு ஏற்படும் வகையிலான நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்திருந்தால் மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. மறைந்த உறவினரின் 16 ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன், ஐப்பசி மாதத்தில் மாத சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கலாம்.

மஹாளய அமாவாசை தினத்தன்று மறைந்த நமது பித்ருக்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அன்றைய தினத்தில் உங்கள் வம்சத்தின் மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும். புண்ணியம் மிகுந்த இத்தினத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகள், புலால் உணவுகள், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிவது,போதை பொருட்கள் உபயோகிப்பது போன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அளிக்கும் முன்பு பிறரின் இல்லங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்கான திதியை கொடுத்த பிறகு இறந்து விட்ட உங்களின் உறவினர்கள், நண்பர்கள் இன்ன பிறருக்கும் சிராத்தம் கொடுப்பது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்று தரும் செயலாக இருக்கும். பித்ருக்கள் நம் மீது ஆசிகளை பொழியும் இந்த நன்னாளில் பித்ரு சிராத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தும், அதை செய்யாமல் தவிர்ப்பவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகிறது.

Tags : moon ,
× RELATED சேலத்தில் இன்று முதல் அமல்: சாலை...