×

சேலத்தில் அருள்பாலிக்கிறார் 8 பட்டியை கட்டியாளும் கோட்டை மாரியம்மன்

சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னகடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன் ஆகிய அம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

சேலத்தில் உள்ள எட்டுபேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பு பெயரும் இந்த அம்மனுக்கு உண்டு. இந்த மாரியம்மனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.  இக்கோயில் திருமணிமுத்தாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் திருமணி முத்தாற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு, அம்மை நோய் கண்ட பக்தர்கள் தம் நோய் நீக்கி நலமளித்து காக்குமாறு அம்மனை வேண்டி கொள்வர். அம்மனின் கோயில் தீர்த்தம் வாங்கிச்சென்று அம்மை நோய் கண்டவர்கள் தங்கள் உடலில் தெளித்து கொள்வர். இதனால் அம்மனின் அருள்பெற்று நோய் குணமாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் குணமடைந்தவுடன் பொம்மை உருவங்களை தம்தலை மீது வைத்துக்கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வந்து பலிபீடத்தின் அருகில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இதேபோல், பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்வர். அப்போது குங்குமம் கலந்து உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ, அதேபோன்று அம்மன் அருளால் நோய் இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும் என்பதும் ஐதீகம். வியாபாரிகள் தங்களது வியாபாரம் சிறப்பாக நடக்கவும், விவசாயிகள் விளைச்சல் பெருகவும், கால்நடைகள் நோய்நொடியின்றி இருக்கவும் அம்மனை மனமுருக வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

இக்கோயிலில், மாரிவளம் சுரக்க, மக்கள் நலம் பெற்று பசியும், பிணியும் நீங்கி வளமுடன் வாழ ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாட்கள் ஆடிப்பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது ஆடி 18ம் தேதியை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி 18ம் தேதிக்கு முந்தைய செவ்வாய்கிழமையில் பூச்சாட்டுதலும், இரண்டாம் செவ்வாயில் கம்பம் நடுதலும், ஆடி 18ம் தேதிக்கு பிறகு வரும் செவ்வாயில் சக்தி கரகமும், அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதலும் நடைபெறுகிறது. கடைசி செவ்வாயில் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அதன்படி, நடப்பாண்டு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Tags : Fort Mariamman ,bar ,Salem ,
× RELATED காரைக்காலில் மதுக்கடை...