×

ஜெயிக்க வைப்பாள் சக்கராப்பள்ளி தேவநாயகி

சக்தி தரிசனம்

ஆதிசக்தியானவள் ஈசனோடு ஈசனாக இருந்தாலும் சிவ தரிசனம் பெற்று அதிலேயே ரமித்துக் கிடந்தாலும் புவிக்குள் வந்து தவமியற்றுவதுபோல சுகத்தை அவள் வேறெங்கும் பெறவில்லைதான். ‘‘நான் எத்தனைதான் கயிலையம்பதியிலே கிடந்தாலும் சரி, எம் குழந்தைகள் பரம பக்தர்கள் உலவும் இந்த புவியில் நான் அவர்களோடு பெறும் சிவ தரிசனத்திற்கு ஈடுஇணை வேறென்னவாக இருக்க முடியும்’’என்று சிவச் சின்னங்களை தரிசிக்கும் பொருட்டு பூமிக்குள் எங்கு தவம் செய்வது என்று நினைத்தபடி இருந்தாள்.அம்பிகையின் அவாவை அறிந்த சப்த மாதர்களும், ‘‘தாங்கள் சிவசின்னங்கள் உணர்த்துகின்ற பேருணர்வையும், அந்த சின்னங்களின் தரிசனங்களையும் பெற பூலோகத்தில் ஏழு ஆலயங்கள் உள்ளன.

நாங்கள் ஏழு பேரும் அங்குதான் தவமியற்றி அஸ்திரங்கள் பெற்றோம்’’ என்று கூறினர். பராசக்தியும் ஏழு தலங்களையும் தரிசித்தாள். அவளைத் தொடர்ந்து பண்டைய காலத்தில் அநவித்யநாத சர்மா எனும் பக்தர் தமது பத்தினியான அனவிக்ஞையுடன் காசி விஸ்வநாதரை வழிபட்டு ராமேஸ்வரம் நகர்ந்து கொண்டிருந்தபோது ஓரிரவு ஒரு தலத்தில் தங்க நேர்ந்தது. காசி விசாலாட்சியே கனவில் தோன்றி ‘‘நீங்கள் இருவரும் இந்த ஏழு தலங்களையும் தரிசித்து விட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று ஆணையிட்டாள். காசி விசாலாட்சியின் வாக்கை ஏற்று அவர்களும் தரிசித்தனர்.இன்றும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சக்கராப்பள்ளி பெருமான் மற்றும் அம்பாளோடு, அநவித்யநாதசர்மா அனவிக்ஞையுடன் தனிப் பல்லக்கில் எழுந்தருளி மற்ற ஆறு தலங்களுக்கு சென்று வருவதையே சப்த ஸ்தான பல்லக்கு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் & கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையைச் சுற்றியே இத்தலங்கள் அமைந்துள்ளன. அவர்கள்தம் அடியொற்றி நாமும் அத்தலங்களை தரிசிப்போமா?

சக்கராப்பள்ளி முதலில் ஆதிசக்தியானவள் இன்றைய சக்கராப்பள்ளி எனும் தலத்திற்குள் நுழைந்தாள். தலத்தை கண்டதும் அகமலர்ந்தாள். சக்ரவாஹம் எனும் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவை ஈசனை வணங்கியது கண்டு மகிழ்ந்தாள். இந்த பறவைதான் துகாராம் போன்ற பாகவத ஞானியர்களை சரீரத்தோடு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக நூல்கள் கூறுகின்றன. ஒரு ஜீவனை இந்த சக்ரவாஹப் பறவை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும்போது ஏற்படும் ஆனந்தத்தை ஆஹா... ஹூ.ஹூ... என்கிற சப்தங்களோடே சாம வேதம் அழகான கானமாக பாடுகிறது.ஒரு ஜீவனை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவையே இத்தலத்தின் கண் ஈசனை பூஜித்து தவமியற்றி தானும் முக்திப்பதம் அடைந்தது. அப்பேற்பட்ட சக்ரவாஹம் எனும் பறவையே இத்தல ஈசனை பூஜித்து தவமியற்றி தன்னை இயக்கும் ஈசனே தன் முக்திப்பதம் சேர்த்துக் கொண்ட அற்புதத்தலமாகும். அதனாலேயே இத்தலத்திற்கு சக்ரவாகேஸ்வரர் எனும் திருப்பெயர் ஏற்பட்டது.

ஆதிசக்தி இத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக் கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயைக் கலப்பேயில்லாத பூரண ஞானத்தை உணர்ந்தாள். ஈசனே நீக்கமற நிறைந்திருக்கும் மாபெரும் பேருணர்வை தனக்குள்ளும் தானாக நின்றுணர்ந்தாள். அருவமாக அத்தலத்திலேயே தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டாள்.மேலும் இத்தலம் சப்த மாதர்களில் ஒருவளான பிராம்மி பூஜிக்கப்பட்ட தலமாகும். சப்த மாதர்களும் சண்ட, முண்ட ரக்தபீஜனை சாமுண்டியான காளி வதைப்பதற்கு சகல தேவர்களும் காளியின் அருகே நின்றனர்.மகாகாளியான சண்டிகைக்கு வேறொருவர் தயவு தேவையில்லையெனினும் ஒவ்வொரு தேவர்களிடமிருந்தும் ஒவ்வொரு சக்தி வடிவினிலும் ஒவ்வொரு மாதராக சப்த மாதர்களும் வெளிவந்தனர். ஒவ்வொரு தேவனுக்குரிய வடிவம், வண்ணம், வாகனம், ஆயுதம், ஆபரணம் இவற்றினூடே சக்தியும் தோன்றினாள்.

சண்டிகை குதூகளித்தாள். அப்படித்தான் பிரம்மனிடமிருந்து அவனது சக்தியான பிராம்மணி வெளிப்பட்டாள். இங்கு பாருங்கள். இத்தலத்தின் விசேஷமான சக்ரவாஹம் போன்றே பிராம்மணியானவள் ஹம்ஸ எனும் மோட்ச நிலையை குறிக்கும் சொற்றொடரான ஹம்ஸ விமானத்தில் அமர்ந்து வந்தாள். அப்பேற்பட்ட பிராம்மணி கையில் அட்சமாலையுடனும், கமண்டலத்தோடும் அமர்ந்து இத்தல ஈசனை பூஜித்துச் சென்றாள். அவள் அரக்கர்களை அழிக்கத்தான் ஆயுதங்கள் பெற்றுச் சென்றதாகவும் கூறுவர்.அநவித்யநாதசர்மா தம்பதி இவ்வாறு ஆதிசக்தியும், பிராம்மணியும் தவமியற்றி தம்மை கரைத்துக் கொண்ட தலத்தில் நின்றனர். இந்த இரு மகா பெண் சக்திகளும் வணங்கிய தலத்தில் நிற்கும் பெரும்பேறு கிட்டியதே என்று மகிழ்ந்தனர்.

சக்ரவாகேஸ்வரரை தரிசித்துவிட்டு சக்ர மங்கையான தேவநாயகியை காண பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை (சிறுமி) வடிவினளாக அம்பாள் காட்சி தந்தாள். பெண்ணின் முழுமையை நோக்கிய பயணத்தில் முதல் அம்சமான பேதை எனும் பருவத்தில் சக்தி அங்கு நிலை கொண்டிருப்பதை உணர்ந்து வணங்கினர்.இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாகும். மிகப் பழமையான ஆலயமாக இது விளங்குகிறது. கோயிலின் கருங்கற் சுவற்றில் சக்ரவாஹப் பறவை பூஜிப்பது போன்ற சிற்பம் நம்மை நெகிழ்த்துகிறது. ஈசன் சக்ரவாகேஸ்வரர் மூலவராக கருவறையில் பேரருள் புரிகிறார். தியானத்தில் மூழ்கிக் கிடக்கும் ரிஷியின் சாந்நித்தியத்தை அளித்து திகைக்க வைக்கும் சந்நதி அது. மோட்ச ஆனந்தத்தின் கீற்றை இங்கு சர்வ சாதாரணமாக உணரலாம்.

அம்பாளின் வலது திருவடி பக்தர்களை ரட்சிக்க புறப்படும் பொருட்டு ஒரு அங்குலம் முன்வைத்திருப்பது விசேஷமாகும். பிராகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் மீது ஐந்து தலை நாகம் குடைபிடித்து அதன்மேல் ஆலமரமும், கரங்களில் நாகாபரணமும் பூண்டு அமர்ந்திருப்பது வேறெங்கும் காண முடியாததாகும்.நாமும் இந்த சக்கராப்பள்ளி எனும் சக்ரமங்கையை வழிபட்டு அடுத்ததான ஹரிமங்கைக்கு செல்வோமா? தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ள அய்யம்பேட்டை எனும் ஊருக்கு அருகே சக்கராப்பள்ளி எனும் இத்தலம் உள்ளது. 
                  
கிருஷ்ணா

Tags : Jayakka Vaikkal Chakkarappalli Devanagi ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்