×

குழந்தை பாக்கியம் அருளும் சித்தானந்த சுவாமி கோயில்

புதுச்சேரி

சித்தர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துபவர்கள் என்ற நம்பிக்கை எப்போதும் மக்களுக்கு உண்டு. அவர்கள் அரூப நிலையில் அருள்பாலிப்பவர்கள்.அந்த வகையில் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் பிரசித்தி பெற்றது.கோயிலின் உள்ளே நுழைந்தால் சில்லென்ற காற்றும், பூக்களின் நறுமணமும் நம்மை தெய்வீக உணர்வுக்கு அழைத்துச்செல்கிறது. பிரகாரத்தில் மூலமுதற்கடவுளான விநாயகர் அருள்பாலிக்கிறார். சற்று திரும்பினால் குரு சித்தானந்த சுவாமிகளின் கருவறை ஒட்டி ஸ்ரீகுரு தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளது. குரு பார்வை கோடி நன்மை என்பதற்கேற்ப சுவாமியை தரிசிக்கும்போது நமது மனம் தெய்வீக அனுபவத்தை உணர்கிறது. கோயிலை சுற்றிவரும்போது ஐயப்பன் சன்னதி தென்படுகிறது. சபரிமலை செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து ஐயப்பனை தரிசிக்கலாம். அருகே சப்தகன்னிகள் சிறுகல் வடிவில் அருள்பாலிக்கிறார்கள். அவர்களின் பின்னால் அரசு, வேம்பு மரங்கள் அமைந்திருப்பது சிறப்பானது. வலதுபுறத்தில் சித்தானந்த சுவாமிகளின் தியான திருமேனிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலின் சிறப்பு அம்சமாக கோயில் முழுவதும் வடிக்கப்பட்டுள்ள சித்தர்களின் சுதைவடிவம் அமைந்துள்ளது. இவர்களை தரிசித்து வெளியே வரும்போது வளாகத்தில் உள்ள அரசு, வேம்பு மரத்தின் அடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் ஆனந்தன் அல்லது ஆனந்தி என்று பெயரிட்டு மகிழ்கிறார்கள்.ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இவ்வரச மரத்தில் இருந்து ஒரு நாகம் கீழே இறங்கி வந்த மரத்தை மூன்று முறை வலம் வருகிறது. பின்னர் மறைந்து விடுகிறது. இதனை கோயில் குருக்களும், பக்தர்களும் கண்டு தரிசித்துள்ளனர். சித்தானந்த சுவாமிகளின் சன்னதி எதிரே நந்தி தேவர் உள்ளார். பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. நந்தி தேவரின் பின்னால் கொடிமரம் உள்ளது. கோயிலின் உள்ளே தியான மண்டபமும் உள்ளது. அதன் எதிரே திருக்குளம் உள்ளது. இதன் நடுவில் சித்தானந்த சுவாமிகள் சுதை வடிவம் தியான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மகாகவி பாரதி வந்து பாடல் பாடியுள்ளார். இதனால் பாரதிக்கும் இங்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிவராத்திரி விழாவும் பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மேலும் சித்தானந்தசுவாமிகளின் ஜீவன் முக்தி அடைந்த தினமான வைகாசி 15ம்தேதி குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு தட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சித்தானந்தரை வழிபட்டால் சீர்மிகு வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள். புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் பேருந்து வசதி உள்ளது.


Tags : Chittananda Swamy Temple ,Blessed Child ,
× RELATED குழந்தை பாக்கியம் அருளும் திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்