×

வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணை-விரைவில் கட்ட இடம் தேர்வு; எதிர்பார்ப்பில் விவசாயிகள்

வெள்ளகோவில் : கேரள மாநிலம் தலையாறு பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் பகுதிகளை கடந்து சுமார் 230 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கரூர் அருகே காவிரியில் கலக்கும் அமராவதி ஆற்றில், வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை ஆகும். இந்த நிலையில் வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை திட்டத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள மயில்ரங்கம் பிஏபி பாசனத்தின் கடைமடை பகுதியான  இறுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மானாவாரி விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பை விவசாயிகள் பிரதானமாக செய்து வருகின்றனர். மேலும் கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி முருங்கை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்புகளை தவிர்த்து வேறு வேலை வாய்ப்பு இல்லாததால் இப்பகுதி கிராமப்புற மக்கள் அருகில் உள்ள திருப்பூர் கரூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று  வருகின்றனர். இந்நிலையில், மயில் ரங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் உபரியாக செல்லும் நீரை தேக்கும் வகையில், தடுப்பணை ஒன்றைக் கட்டினால், தேங்கும் தண்ணீர் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் பெருகும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணை முழுமையாக நிறைந்து விடுகிறது. மேலும்  ஒரு ஆண்டில் 4 முறைக்கு மேல் உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி அணையில் உபரியாக வெள்ள நீர் திறக்கும் காலங்களில் ஏறக்குறைய 4 டிஎம்சி அளவுக்கு உபரி நீர் காவிரியில் கலந்து வருகிறது.இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி ஆற்றில் வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் நீரை மயில்ரங்கம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அந்த பகுதியில் தடுப்பணை கட்டி தேக்குவதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பாக அமையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: அமராவதி அணையின் முழு கொள்ளளவான 4 டிஎம்சியில், ஏறக்குறைய அதே அளவுக்கு உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது. நிலை இவ்வாறு இருக்க, கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மயில்ரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட ஆய்வுகள் நடத்த  முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மயில்ரங்கம் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தள்ளி மேற்கு பகுதியில் அதிகாரிகள் தரப்பில் ஆய்வுகள் நடத்த இடத்தை அண்மையில் ஆய்வு செய்தனர். ஆனால் வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் அமராவதி ஆற்று நீரை தடுத்து பாசனத்துக்கு திருப்பும் வகையில் தாராபுரம், காங்கயம் பகுதிகளில் உள்ள நில அமைப்பு ஆற்றைவிட உயரமாக உள்ளதால், சிறு அளவிலான தடுப்பணைகள் பல கட்டினால் தேங்கும் நீர் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும்,விவசாயமும் பெருகும்.  தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள நில அமைப்பும், தேவையும் உள்ள இடங்களிலும் கட்டவேண்டும். இதனால் ஆற்று நீர் பல இடங்களில் தேக்கப்படும்போது, அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகள், சம்ப்கள், தரைமட்ட கிணறுகளில் நீர் தேக்கம் அதிகரிக்கும். இதை, குறிப்பிட்ட அளவு பாசனத்துக்கும் பயன்படுத்தலாம். பருவ மழை பொய்த்தாலும், பல மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். தடுப்பணை நீரை, உயிர்த்தண்ணீராக பயன்படுத்தி, பயிர்களை காக்க முடியும். இவ்வாறு தெரிவித்தனர்….

The post வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணை-விரைவில் கட்ட இடம் தேர்வு; எதிர்பார்ப்பில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Amravati River ,Manilaranga ,Vallako ,Zalako ,Kerala State ,Tiruppur district ,Udumalai ,Tarapuram ,Pallako ,Dinakaran ,
× RELATED மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க...