×

தேனிக்காரரின் சிலீப்பர் செல்லுக்கு பதவி கொடுத்து செக் வைத்துள்ள சேலம்காரரின் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரரின் ஒவ்வொரு மூவும் தேனிக்காரர், மன்னார்குடி தரப்பினருக்கு உடனுக்கு உடன் தெரிந்து விடுகிறதாம். நம்ம கூட்டத்துக்குள்ள இருந்தே, இப்படி உளவு செல்றது யாரு என்பதை கண்டுபிடிக்க சேலம்காரர் டீம் போட்டுள்ளாராமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் சேலத்துக்காரரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அச்சு பிசகாமல் அப்படியே தேனிக்காரருக்கும், மன்னார்குடி தரப்புக்கும் சென்று விடுகிறதாம். இதனால எதிர்தரப்பினர் கோர்ட் கேஸ், முக்கிய நிர்வாகிகளை வளைப்பது, சேலம்காரர் முதல்வராக இருந்தபோது அவரின் பினாமியாக இருந்து பணத்தை பதுக்கி உள்ளவர்கள் லிஸ்ட், சேலம்காரரின் பின்னால் யார் யார் இருந்து பைனான்ஸ், அடியாள் ஏற்பாடு, சட்ட ரீதியான யோசனை செல்வது என்ற விவரங்களை தேனிக்காரர் மற்றும் சின்னமம்மிக்கு சரியாக பாஸ் செய்யப்படுகிறதாம். இதுக்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த 10 ஆயிரம் கோடி கான்டிராக்ட் மற்றும் பினாமிகள் வீடுகளில் நடந்த சோதனைகளை, சேலம்காரரின் அடிபொடிகள் சுட்டிகாட்டுகிறார்கள். இதனால கடும் அப்செட்டில் இருந்த சேலம்காரரை, ‘‘ அண்ணே நம்ம டீம்ளேயே சிலீப்பர் செல்கள் இருக்காங்க. அவங்க தான் நம்முடன் இருந்தபடியே, அனைத்து விவரங்களையும் தேனிக்கும், மன்னார்குடிக்கும் அனுப்பி வர்றாங்க. அதனால, முக்கியமான விஷயங்களை பேசும்போது கவனமாக பேசுங்க என்று சொன்னார்களாம். இதை கவனமாக கேட்ட சேலம்காரர், இலையின் முக்கிய தகவலை கசிய விடுவது யார் என்பது குறித்து விசாரிக்க ‘தனியாக ஒரு டீமை’ நியமித்துள்ளாராம். இந்த டீம் ரகசிய விசாரணையில் மனுநீதிசோழன் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சருக்கு முக்கிய பங்கு இருப்பதை கண்டுபிடித்தார்களாம். இந்த தகவல் உடனடியாக சேலத்துக்காரர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம். இதனால் சேலம்காரர் ஷாக் ஆனாலும், அவருக்கு பதவி கொடுத்து அவர் மீதான கண்காணிப்பை அதிகரிக்க சொல்லி இருக்கிறாராம். தற்போது மாஜி அமைச்சர் சேலத்துக்காரர் டீமில் இருந்தாலும், அவர் தேனிக்காரருக்கு தான் ஆதரவாக செயல்படுகிறாராம். இலை கட்சியில் எடுக்கப்படும் ரகசிய தகவல்களை மாஜி அமைச்சரே நேரிடையாக கசிய விடுகிறாரா அல்லது இவரது ஆதரவாளர்கள் மூலம் வேறு டீமுக்கு ரகசியமாக செல்கிறதா. வேற யாருக்கும் தொடர்பு இருக்கா என்பதை உறுதிப்படுத்த சேலத்துக்காரர் உத்தரவின் பேரில் அவரது டீம் டெல்டா மாவட்டம் முழுவதும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்களாம். விரைவில் டெல்டா மாவட்டத்தில் இலைகட்சியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என இலைகட்சிக்குள்ளே பேச்சு ஓடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலாட்டாவாமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதியமான்கோட்டை  மாவட்டத்தில் அன்பும், அழகும் கொண்ட மாஜியும், அவரது பேரை கொண்ட அக்ரிஅணி  நிர்வாகியும் ஆலோசனைக் கூட்டத்தில் அடிக்கப்பாய்ந்த விவகாரம், பூதாகரமாகி  கசிய ஆரம்பிச்சிருக்காம். இந்த மாவட்டத்தில், இலைகட்சி நிர்வாகிகளின்  ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்துச்சாம். அன்பும், அழகும் கொண்ட மாஜி,  கூட்டத்திற்கு தலைமை வகிச்சாராம். இந்த கூட்டத்தில் அவரது பெயரை  கொண்டவரும், மம்மி காலத்தில் மாவட்ட செயலாளராக இருந்தவருமான அக்ரிஅணி  நிர்வாகியும் கலந்து கொண்டாராம். ஆலோசனையின் போது, அக்ரிஅணி நிர்வாகி சில  கருத்துக்களை முன்வச்சாராம். இதை சிட்டிங் மாவட்ட செயலாளரான மாஜி,  கண்டுக்கவே இல்லையாம். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன அந்த நிர்வாகி,  ஒருமையில் மாஜியை வறுத்தெடுத்தாராம். அதோடு நிற்காமல் அப்படியே பாய்ந்து  மாஜியை அடிக்க முற்பட்டாராம். மாஜியும் பதிலுக்கு முஷ்டியை மடக்கினாராம்.  இதைக்கண்டு திடுக்கிட்ட கட்சிகாரங்க, ரெண்டு பேரையும் விலக்கி  விட்டாங்களாம். ஆர்ப்பாட்டத்துக்காக நடந்த ஆலோசனைக் கூட்டம் கலாட்டாவில் முடிந்ததாம். இதை பார்த்த இலை கட்சியினர் விட்டால் ேபாதும் என்று ஓடிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ இலை கட்சியின் இரண்டு அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவரின் பாக்கெட் காலியாக இருக்குமா என்ன…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூட்டு  மாவட்டத்தில் புதிது எனத் துவங்கும் மாவட்டத்துக்காரர் ஊராட்சித்துறையில்  முக்கிய அதிகாரியாக இருக்கிறார். இவர், இலைக்கட்சி ஆட்சியில் நலமான  துறையின் மாஜி மந்திரிக்கு வேண்டப்பட்டவராம். மாஜி மந்திரிக்கு  வேண்டப்பட்டவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தபோது, உதவியாளர் ஒருவருடன் இந்த  அதிகாரியானவர் நெருக்கமான நட்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும்,  கிராம வளர்ச்சிக்கான மணியான முன்னாள் அமைச்சரானவரின் உதவியாளருடனும்  கூட்டணி வைத்து, குறிப்பிட்ட கம்பெனி பிளீச்சிங் பவுடரையே அத்தனை  ஊராட்சிகளிலும் வாங்க வேண்டுமெனவும் கடந்த காலத்தில் வற்புறுத்தி வருவாய்  பார்த்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. எல்இடி விளக்குகளை ஊராட்சிகளுக்கு  வாங்கியது உட்பட பல வழிகளிலும் வசூல் பார்த்துள்ளார். மனைவி பெயரில்  பைனான்ஸ் நிறுவனமும் துவங்கி பெரும் தொகையை வருவாயாக பார்த்துள்ளார். மாவட்டத்தின் குளுகுளு இளவரசி ஊரிலும் பல கோடி நிலங்களை பினாமி  பெயர்களில் வாங்கிப் போட்டுள்ளார்.  இவர் குறித்த புகார்கள் பெருமளவில்  குவிந்து வருவதால், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, விரைவில் திடீர்  சோதனைக்கும் வாய்ப்பிருக்கிறதாம்… இதனால் அந்த அதிகாரியும், மாஜி  அமைச்சர்களின் உதவியாளர்களும் நடுக்கத்தில் உள்ளனர்…’’ என்றார்  விக்கியானந்தா. …

The post தேனிக்காரரின் சிலீப்பர் செல்லுக்கு பதவி கொடுத்து செக் வைத்துள்ள சேலம்காரரின் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkar ,Thenikar ,Yananda ,Salemkars ,Thenikarkar ,Mannargudi ,Thenikaran ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...