×

உண்மையான இறை நம்பிக்கையாளர் யார்?

இஸ்லாமிய வாழ்வியல்

உண்மையான இறை நம்பிக்கையாளர் யார் எனில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு எந்தத் துன்பமும் தொல்லையும் இடையூறும் ஏற்படக்கூடாது. எந்த ஒரு சூழலிலும் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நன்மையும் பயனும் தான் விளைய வேண்டும். இதர மக்களுக்குத் தொல்லை தருபவர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆகமாட்டார்.ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்)  அவர்கள் கூறினார்: “யாருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் இதர முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார். யாரைக் குறித்து மக்கள் தம் உயிர், உடைமைகள் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே உண்மையான நம்பிக்கையாளர் ஆவார்.”(திர்மிதீ)

“நாவிலிருந்து” என்பதன் பொருள், ஓர் இறை நம்பிக்கையாளன் வசைமாரிப் பொழிபவனாகவோ, திட்டுபவனாகவோ ஒருபோதும் இருக்கமாட்டான்.  என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்தவனாகவே இருப்பான். பேச்சில் எப்போதும் நிதானமும் கண்ணியமும் இருக்கும்.அதே போல் “கையிலிருந்து” என்பதன் பொருள், அடிதடி, சண்டை சச்சரவுகள் போன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருப்பான். தன் கைகள் மூலமாக மற்றவர்களைக் காப்பவனாக இருப்பானே தவிர மற்றவர்களுக்குத் தீங்கு செய்பவனாக இருக்க மாட்டான். அவன் வாழும் தெருவில், பகுதியில் வசிக்கும் மக்கள் அவனைப் பற்றி உயர்வாகக் கருதவேண்டும். இவர் மூலம் நாம் உயிருக்கோ, உடைமைகளுக்கோ எந்த ஆபத்தும் நேராது என்று அவர்கள் நம்ப வேண்டும். அந்த அளவுக்கு நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும்.
நபிகளார் அவர்கள் பலமுறை இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.

இறைத்தூதரின் அன்புத் தோழரான அபூமூஸா அல்அஷ்அரி என்பவர் கூறுகிறார்: நபிகளாரிடம் “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “யாருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார்” என்று பதில் அளித்தார்கள்.உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதற்கு இன்னும் பல வரைவிலக்கணங்கள் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று வருமாறு:“பக்கத்து வீட்டார் பசியோடு இருக்க தான் மட்டும் உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.”மனிதநேயத்தை அழுத்தமாக வலியுறுத்தும் நபிமொழியாகும் இது. அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தாலும் சரி, இதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி- அவர்கள் பசித்துயரால் வாடுகிறார்கள்  எனத் தெரியவந்தால் ஓர் இறைநம்பிக்கையாளனின் முதல் வேலை, பக்கத்து வீட்டாரின் பசியைப் போக்குவது தான். அவர்தாம் சிறந்த நம்பிக்கையாளர் ஆவார்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை
“நம்பிக்கையாளர்களே ... நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்.”(குர்ஆன் 24:31)

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி