×

தங்கம், வெள்ளி, பணத்துக்கு ரசீது தருவதில்லை சிதம்பரம் தீட்சிதர்கள் மீது 28 வகை குற்றச்சாட்டுகள்: விளக்கம் கேட்டு இணை ஆணையர் கடிதம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்: நடராஜர் கோயில் குறித்து கடந்த ஜூன் 20, 21 தேதிகளில் பொதுமக்கள், கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்களிடம், நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், தபால் மூலமாகவும் மொத்தம் 19,405 மனுக்கள் வரப்பெற்றன. அதில் 14,098 மனுக்கள் புகார் மனுக்களாகும். அதில், காணிக்கை ரசீது வழங்கப்படுவதில்லை. ரூ.10 ஆயரிம் கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என வசூல் செய்கிறார்கள். தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும். தினமும் சிற்றம்பல மேடையில் ஒவ்வொரு கால பூஜையின்போதும் தேவார திருமுறைகளை பாட ஓதுவார்களை பணியமர்த்த வேண்டும். பிற கோயில்களில் உள்ளதுபோன்று உண்டியல் நிறுவிட வேண்டும். தரமான பிரசாத கடைகள் அமைக்க வேண்டும். அனைத்து விதமான பூஜை, அர்ச்சனைகளுக்கும் உரிய ரசீது தரப்பட வேண்டும், பக்தர்களை தரக்குறைவாக பேசி அவமதிப்பு செய்கிறார்கள். நாட்டியாஞ்சலி விழாவில் ரூ.20 ஆயிரம் முதல் கட்டமாக கேட்பதால் ஏழை குழந்தைகள் கலந்து கொள்ள முடியவில்லை. பூஜைகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை. பெண்களை மரியாதைக்குறைவாக நடத்துகிறார்கள், ஆயிரங்கால் மண்டபத்தினை நட்சத்திர விடுதிபோல் பயன்படுத்துகிறார்கள். சுவாமி சிலைகள் அந்தக்காலம் முதல் இந்தக் காலம் வரை சரியாக உள்ளதா என அரசு சோதனை செய்ய வேண்டும். கல்வெட்டுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். வருடம் முழுவதும் வீட்டு விலாசத்திற்கு பிரசாதம் அனுப்ப ரூ.2500 வசூல் செய்கிறார்கள். ஆனால் ரசீது வழங்குவதில்லை. நந்தனார் சிலையை தீட்சிதர்கள் அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடைபெற்றதில் தொழிலதிபர்கள்  காலணிகளுடன் சென்றார்கள், பிரம்மோற்சவம் மற்றும் எந்த விழாவும் நடத்த விடாமல் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர்.ஆண்டாள் சிலையை மறைத்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் நடத்துவது,  பைரவர் கோயில் அருகே சுரங்கத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான ஆபரணங்கள் தீட்சிதர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாற்றுத் திரனாளிகளுக்கு எந்தவித வசதியும் செய்துதரப்படவில்லை. ஆங்காங்கே அறைகளை அடைத்து வைத்துள்ளனர், பக்தர்களால் வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பணத்திற்கு ரசீது தராமல் தீட்சிதர்கள் எடுத்துக் கொள்கின்றனர், இவ்வாறு புகார்களில் கூறப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் குறித்து 15 நாட்களுக்குள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post தங்கம், வெள்ளி, பணத்துக்கு ரசீது தருவதில்லை சிதம்பரம் தீட்சிதர்கள் மீது 28 வகை குற்றச்சாட்டுகள்: விளக்கம் கேட்டு இணை ஆணையர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Dikshidar ,Chennai ,Commissioner ,Hindu Religious Charities Department ,Jyoti ,Chidambaram Nataraja Temple General Dikshitars Council ,Chidambaram Dikshitars ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...