×

சண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்!!

உலகை ஆளும் அன்னை பார்வதி பல காலங்களில் பல வடிவங்களை எடுத்து உலகை காத்தருளி வந்திருக்கிறாள். அதில் அரக்கர்களை வதம் செய்ய அன்னை எடுத்த வடிவம் “துர்கா தேவி” வடிவமாகும். அந்த துர்க்கா தேவிக்கு மங்கள சண்டிகா என்கிற ஒரு பெயரும் உண்டும். துர்க்கையின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம் தான் “சண்டி ஹோமம்” எனப்படும். இந்த சண்டி ஹோமம் செய்யும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

சண்டி ஹோமம் ஒரு பிரம்மாண்ட ஹோமம் என்பதால் நடுத்தர, பொருளாதார வசதி மிகுந்தவர்களால் மட்டுமே செய்ய முடிகின்ற ஒரு ஹோமமாக இருக்கிறது. ஏனெனில் சக்தி வாய்ந்த இந்த ஹோமம் செய்வதற்கு பல வருடங்கள் ஹோம பூஜை செய்வதில் அனுபவம் பெற்ற 9 வேதியர்களை கொண்டு செய்யப்படுவதால் நிச்சயமான பலன்களை ஹோம பூஜை செய்பவர்களுக்கு தருகின்றது.

 சண்டி ஹோமம் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் குறித்து தரும் சுப தினத்தில் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சார்பாக கோயிலிலோ, ஹோமம் செய்வதற்கான பொருட்கள் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். ஹோமம் செய்யப்படும் தினத்தில் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, முடிந்தால் உணவேதும் அருந்தாமல் இருந்து ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த ஹோமத்தில் பல தெய்வங்களை பூஜித்தும், 700 கும் மேற்பட்ட சக்திவாய்ந்த மந்திர உருவேற்றி பூஜை செய்யப்படுவதால் பூஜை செய்பவர்களுக்கு உறுதியான பலன்களை அளிக்கிறது. ஹோம பூஜையின் போது வேதியர்கள் உங்களுக்கு கூறும் முறைப்படி மனதில் முழுமையான பக்தியோடு நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தார் பூஜைகள் செய்திட வேண்டும். பூஜையின் இறுதியில் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் துர்க்கா தேவியாக பாவித்து, மரியாதை செய்யப்பட்டு, அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பிற பரிசு பொருட்கள் வழங்கி அவர்களின் ஆசிகளை பெறுகிறார்கள்.

ஹோமம் முடிந்ததும் ரட்சை எனப்படும் ஹோம பஸ்பம் உங்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. அதை உங்கள் பூஜையறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் திலகமிட்டு வருவது நன்மைகளை தரும். சண்டி ஹோமம் பூஜை செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டிகள், மறைமுக எதிரிகள், துஷ்ட சக்தி பாதிப்புகள், குல சாபங்கள் ஆகிய அனைத்தையும் போக்கும். வீட்டில் தரித்திர நிலை நீங்கி செல்வம் பெருகும். நீண்ட ஆயுள் மற்றும் நோய்கள் அணுகாத வாழ்க்கை குடும்பத்தினருக்கு உண்டாகும். வசதி வாய்ப்புள்ளவர்கள் வருடத்திற்கொருமுறை இந்த ஹோமம் செய்வதால் நன்மைகள் மேன்மேலும் அதிகரிக்கும்.

Tags : Sandy Homemade ,
× RELATED கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம்...