×

ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 1 : உ(ரு)த்ரா செல்வி

பெண் என்பவள் பெரும் சக்தி. உயிரை இம்மண்ணில் பிரசவிப்பவள். அவள் வணங்கப்பட வேண்டியவள். அந்த பெண்மையை போற்றும் விதமாகத்தான் சக்தி வழிபாடே உருவானது. தாய் தெய்வ வழிபாட்டிற்கான காரணமும் அதுவே. அந்த பெண்மைக்குரிய மாதமாகவே ஆடி மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், அது பீடை அல்ல பீடம் என்பதன் சுருக்கமேயாகும்.

“பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் அம்மனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது. வீட்டிலிருக்கும் பெண்களையும் சக்தியின் அம்சமாகவே பாவித்து வணங்க வேண்டும் என்பதால் தான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதியர்களை பிரித்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் வந்தது. கோயில் வீடாக கூடாது. ஆனால் வீடு கோயில் ஆகலாம். அவ்வாறு வீடு கோயிலாகும் மாதம் தான் ஆடி மாதம். ஆகவே தான் அம்மாதம் தாம்பத்யம் கூடாது என்பதற்காக புதுமண தம்பதியர்களை பிரித்து வைக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தனர்.

ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, வெள்ளிக்கிழமைகளில் புத்தாடை அணிவித்து, உணவு கொடுத்து, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் சில மாவட்டங்களில் பல கிராமங்களில் உள்ளது. பெரிய பாளையத்தம்மன் முதல் பேச்சியம்மன் வரை, கற்பகாம்பாள் முதல் கருமாரி வரைக்கும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும் மாதம் ஆடி. உலகாளும் உமையாள் கயிலாயம் விட்டு, பூலோகம் வந்து வெவ்வேறு நாமங்களில் எழுந்தருளியுள்ள அம்மன் விக்ரஹங்கள் மூலம் தன்னுடைய சக்தியை வெளிக்கொணர்கிறாள்.

ஆகவே ஆடி மாதம் அம்மனை நினைத்து வழிபட வேண்டும். கோபுர கலசம் கொண்ட கோயிலானாலும் தெருவோர குடில் ஆனாலும் அம்மன் மகா சக்தியோடு அருள்பாலிக்கும் மாதம் ஆடி. பெருமாளுக்கு புரட்டாசி, ஐயப்பனுக்கு கார்த்திகை, சாஸ்தாவுக்கு பங்குனி, முருகனுக்கு வைகாசி, சிவனுக்கு ஆனி என்கிற வரிசையில் அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் அந்த மகா சக்திக்கு உரிய மாதம் ஆடி.

இந்த ஆடி மாதத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோயில் கொண்டுள்ள அஷ்ட செல்வியர்களை தரிசித்தால் சோதனைகள் மாறி சுபிட்சம் உண்டாகும். வடக்குவா செல்வி, விஸ்வநாத செல்வி, பேராத்து செல்வி, திருவரங்க செல்வி, ஆபத்துகாத்த செல்வி, ஐநூற்று செல்வி, அனவரத செல்வி, உத்ரா செல்வி ஆகிய அஷ்ட செல்வியரை வணங்கினால் ஐஸ்வர்யம் கூடும். உங்கள் இல்லம் பொலிவு பெறும். தடைப்பட்ட நற்காரியங்கள் உடனே நடந்தேறும். அஷ்ட செல்வியரைப்பற்றி பார்க்கலாம்...

சு.இளம் கலைமாறன்

உ(ரு)த்ரா செல்வி

சேரன் மகாதேவி, நெல்லை


அஷ்ட செல்வியர்களில் பொறுமையானவளாய், ஆக்ரோஷம் கொண்டால் எளிதில் தணியாதவளாய் திகழ்பவள் வடக்கு வா செல்வி. கயிலாயம் விட்டு பொதிகை மலை வந்த அஷ்ட மகா சக்திகளில் செல்வி அம்மன் மலையிலிருந்து இறங்கி, குற்றாலநாதர் கோயிலுக்கு வந்தாள். நந்திதேவன் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே கொடி மரத்தில் வந்தமர்ந்தாள்.

அதன்பின் குற்றாலநாதர் கோயிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம் கொடியேற்றம் அன்று வாலிப வயதுடைய யாராவது ஒருவர் மாண்டு போவது, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. உடனே கேரள தேசத்து நம்பூதிரிகள் வந்து பார்த்ததில் கொடி மரத்தில் இருக்கும் செல்வியம்மன் தான் கொடியேற்றத்தின் போது நடக்கும் துர்மரணங்களுக்கு காரணம் என தெரியவந்தது. அவர்களது ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை வரவழைத்து செல்வியம்மனை  பொன்னால் ஆன செம்பில் மஞ்சள் கொண்டு அடைத்து குற்றால மலையில் செண்பக மரங்கள் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

மாதங்கள் சில கடந்த நிலையில் மழை அதிகமாக பெய்ததால், குழியில் புதைக்கப்பட்ட பொற்செம்பு, மேலெழுந்து வந்தது. அப்போது செங்கோட்டையை சேர்ந்த மூப்பனார் வகையறாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு நிலை விடுவதற்காக மரம் வெட்ட கூலியாட்களுடன் செண்பக மலைக்கு வருகின்றார். அவர் கண்ணில் செம்புபட்டு விட, அதை எடுத்து திறக்க, மறுகனமே செம்பு விண்ணை நோக்கி பறந்தது, அருகே இருந்த மர உச்சியில் சிக்கிக் கொண்டது. மஞ்சள் விண்ணிலிருந்து மழைபோல் பொழிந்தது. அன்றைய நாள் சித்திரை மாதம் பௌர்ணமி. (இன்றும் சித்திரை பௌர்ணமி அன்று அந்த வனத்தில் மஞ்சள் மழை பொழிகிறது.)

அப்போது அசரீரி கேட்டது. ‘‘எனக்கு இவ்விடத்தில் கோயில் எழுப்பு. உனக்கு வேண்டிய செல்வங்களை நான் தருவேன் என்று உரைத்தது. அதன்படி அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. செண்பக மரங்கள் அடர்ந்த சோலையில் கோயில் கொண்டதால் செல்வி அம்மன், செண்பககாட்டு செல்வி அம்மன் என்றும், செண்பகமலை செல்வி அம்மன் என்றும் அழைக்கப்பட்டவள் நாளடைவில் செண்பகசெல்லி என்றும் செண்பகவல்லி என்றும் அழைக்கப்படலானாள். கேரளத்து காரர்கள் வருகைக்கு பின்னர் செண்பகாதேவி என்று அழைக்கப்படலானாள். இந்த காலக்கட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியில் மாந்திரீகத்தில் கொடிகட்டிப் பறந்தார் பட்டாணி என்பவர்.

அவர் மாந்திரீகத்தால் தான் நினைத்த காரியங்களை சாதித்து வந்தார். தன்னை எதிர்ப்பவர்களை முடமாக்கினார். இதனால் இவரைக்கண்டு பலரும் அஞ்சினர். ஒருமுறை சித்ரா பௌர்ணமிக்கு செண்பகமலைக்கு சென்ற சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர்கள் அந்த அம்மனிடம் முறையிட்டனர். இவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வமாக இருக்கிற தாயே, எங்கள் ஊரில் அநீதியை தட்டிக்கேட்க மாட்டாயா என்று வேண்டிக்கொண்டு வந்தனர். பட்டாணி பேய் விரட்டல், பில்லி சூனியம் எடுத்தல், செய்தல் முதலான வேலைகளை நள்ளிரவு செய்துவிட்டு அவ்விடம் ஓடும் தாமிரபரணி ஆற்றில் தலை முழுகிவிட்டு திரும்பி பார்க்காமல் வருவது வழக்கம்.

அதுபோல் அன்றைய தினம் அவ்விதம் ஆற்றில் தலைமுழுக இறங்கினான். அந்த நேரம் கடும் மழை பெய்தது. செண்பகமலையிலிருந்து செம்பு ஒன்று ஆற்று நீரில் அடித்து வந்தது. அந்த செம்பு சேரன்மகாதேவியில் தென்கரையில் நீராடிக்கொண்டிருந்த பட்டாணியின் மேல் இடித்தது. அந்த செம்பை எடுத்து பட்டாணி தூக்கி எறிய, மீண்டும் பறந்து வந்த செம்பு பட்டாணியை அடிக்க, பயத்தில் கரையேறிய பட்டாணி மந்திரத்தால் செம்பை வீச, அதிலிருந்து வெளிப்பட்ட செல்வி அம்மன் பட்டாணியை வதம் செய்தாள். இறக்கும் தருவாயில் ஆத்தா, உன் சந்நதி அருகே எனக்கும் நிலையம் இட்டுக்கொடு.

இருக்கும் வரை ராஜாபோல இருந்துவிட்டேன். மாண்டு போனாலும் என்னை மதிக்கணும் இந்த ஊரு சனம் என்று வேண்ட, இறக்க குணம் கொண்ட தாயல்லவா செல்வி அம்மன். அப்படியே ஆகட்டும் என்றாள். அதன்படி ஊரைகாக்கும் பொருட்டு செல்வி ஊரின் எல்லையில் கோயில் கொண்டுள்ளாள். அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அருட்பாலிக்கும் செல்வி அம்மன் கோயில் வளாகத்தில் பிரம்மசக்தி, சுடலையின் சந்நதி எதிரே பட்டாணியாருக்கும் பீடம் உள்ளது. மறுஎல்லையில் தன்னைப்போன்ற ஒரு சக்தி இருந்து இந்த ஊரை காக்கவேண்டும் என்பதற்காக தனது கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையை கீழே எடுத்து போட அதிலிருந்து ஒரு செல்வி உருவானாள்.

அவளே ருத்ரா செல்வி என்று அழைக்கப்பட்டாள். ருத்ரம் என்றால் சிவன் என்றும் பொருள் உண்டும். சிவனின் சக்தி என்பதால் ருத்ரா செல்வி என்று அழைக்கப்படலானாள். ருத்ரா செல்வி ஊரின் மறு எல்லையில் அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அருளாட்சி புரிகிறாள். ருத்ரா செல்வி என்பது மருவி உத்ரா செல்வி என்றும் உருத்வா செல்வி என்றும் உத்திரா செல்வி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் சித்திரை மாதம் 2வது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. ஆடி மாதம் முளைப்பாரி விழா நடைபெறுகிறது.

படங்கள்: ரா.பரமகுமார்,
சேரை. அய்யப்பன். ச.சுடலை ரத்தினம்.

Tags : Thra Selvi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?