×

ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 6 : ஐநூற்று செல்வி

பள்ளிக்கோட்டை, தாழையூத்து

கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள கிராமம் வாயில் ஓடை. இந்த கிராமத்தைச் சேர்ந்த காந்திமதிபிள்ளை என்பவருக்கு பாளையக்காரர்கள் ஆட்சியின்போது திருநெல்வேலி மாவட்டம் பள்ளிக் கோட்டையிலே கிராம நிர்வாக அதிகாரியாக அரசு வேலை கிடைத்தது. வேலையின் நிமித்தமாக காந்திமதிபிள்ளை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகேயுள்ள பள்ளிக்கோட்டை கிராமத்துக்கு குடும்பத்தோடு வந்தார்.

பள்ளிக்கோட்டை கிராமத்திலே பணி செய்து வரும் வேளையிலே ஒரு நாள் இரவு காந்திமதிபிள்ளையின் கனவில் வந்த அவரது வழிபாட்டு தெய்வம் செல்வி அம்மன்,  வேலை கிடைச்சதும் ஊர விட்டு போனியப்பா, என்னை மறந்துட்டியே, என்னையும் நீ இருக்கிற இடத்துக்கு கொண்டு சென்று எனக்கு அங்கே ஒரு கோயில் கட்டி வழிபாடு செய் என்றது. மறுநாளே கேரள மாநிலம் வாயில் ஓடை கிராமத்துக்கு சென்ற அவர், தனது உறவினர்களிடம் தான் கனவு கண்டது குறித்து கலந்து பேசுகிறார்.  

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அங்கேயுள்ள வனத்திற்கு சென்று அங்கு கோயில் கொண்டிருந்த செல்வி அம்மனை ஆவாஹனம் செய்து நெல்லைச் சீமை தாழையூத்து அருகேயுள்ள பள்ளிக்கோட்டை கிராமத்திற்கு செல்வி அம்மனை கொண்டு வருகிறார்கள். ஐநூறுபேர் அம்மனுடன் பள்ளிக்கோட்டை கிராமத்திற்கு வருகிறார்கள். ஐநூறுபேருடன் வந்த செல்வி என்பதால் பள்ளிக்கோட்டை கிராமத்திலுள்ள செல்வி அம்மனுக்கு ஐநூற்றுபேர் செல்வி என்றும், ஐநூற்று செல்வி என்றும் பெயர் வந்தது.

மாதங்கள் மூன்று கடந்த நிலையில் காந்தி மதிபிள்ளையின் கனவில் மீண்டும் வந்த செல்வி அம்மன், நான், மூணாறு வனத்தில் இருந்தவள். ஆள், அரவம் இல்லா கானகம் அது. எந்த ஓசையும் இன்றி இருந்த எனக்கு ஊருக்குள் ஏற்படும் சேவல் சத்தம்,  உலக்கை சத்தம் முதலானவைகள் எனக்கு இடையூறாக இருக்கிறது. எனவே இப்பகுதியில் உள்ள காட்டில் எனக்கு கோயில் எழுப்பு என்றுரைத்தாள். தாயின் உத்தரவிற்கிணங்க பள்ளிக்கோட்டை வயக்காட்டில் ஐநூற்று செல்வி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. எட்டு கரங்களோடு ஐநூற்றுசெல்வி ஆங்கார சொரூபிணியாக அருள்கிறாள்.

படங்கள்: ச. சுடலை ரத்தினம்

Tags : Selvam ,
× RELATED அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி