×

ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 2 : அனவரத செல்வி

தூத்துக்குடி  மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள ஊர் அனவரத நல்லூர். அனவரதம் என்றால் எந்த நிலையிலும் அழியாதது என்று அர்த்தம். புராணத்தில் இத்தலம் படப்பு வனம், கடம்ப வனம் என்று பெயர் பெற்றது. காசிப முனிவர் மூலம் இம்மண்ணில் அவதரித்த அசுரன் துர்க்கன். அவன் பிரம்மனை வேண்டி இமயமலையில் அக்கினி நடுவில் தவம் செய்தான். அவனுடைய தவத்தினை மெச்சிய  பிரம்மன் அவன் முன்பு தோன்றினார்.  

உடனே  துர்க்கன் அவரிடம் ஒரு வரம் கேட்டான். அந்த வரத்தின் படி ஆதிசக்தி மற்றும் தேவர்களின் சக்தியுடன் இணைந்து வரும் சக்தியால் மட்டுமே  என்னுடைய  உயிர் போகவேண்டும் என்று கேட்டான். பிரம்மனும் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார். வரத்தினை பெற்ற அரக்கன் தலைக்கனம் பிடித்து திரிய ஆரம்பித்தான். சகல உலகங்களையும்  அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் பேராசையை நிறைவேற்றிக் கொள்ள பல அகம்பாவ செயலில் ஈடுபட்டான். அதில் பல பாவச்செயல்களும் இடம் பெற்றது.

இவனால் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விடுமோ என தேவலோகத்தில் உள்ள  இந்திரன் முதலான தேவர்கள்  எல்லாம் பயந்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.  ஈசன் அவர்களை  சமரசம் செய்து அனுப்பி வைத்தார். அதன் பின் காளியை தன்னை நோக்கி வரும்படி கேட்டுக்கொண்ட சிவ பெருமான், காளியிடம், உன் கோர உருவம் மறைய வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே  நீ தென் நாட்டுக்கு சென்று தவம் செய் என்று உத்தரவிட்டார். இதை கேட்ட காளி, சிவபெருமானை நோக்கி நான்  தென் நாட்டில் தவம் செய்ய ஏற்ற இடம் எது என்று கேட்டார்.

அதற்கு சிவபெருமான் சம்ஹாரகாலத்திலும் அழியாத தன்மை கொண்ட ஒரு நகர் தென்னகத்தில் இருக்கிறது. அந்த இடம் தாமிரபரணி நதி பாயும் ஆற்றங்கரையில் மேற்புறத்தில் உள்ள கடம்ப வனமாகும். அங்கு சென்று நீ தவம் செய்வாயாக. அதுவே  நீ தவம் செய்ய ஏற்ற இடம் என்று கூறினார். உடனே பகவானே என் தவம் முற்றுவதை நான் எப்படி அறிவேன். என்னுடைய பணிதான் என்ன என்று கேட்டாள்.  சிவபெருமான் உன்னுடைய  தவம் முதிர்ச்சியில்  நான் உனக்கு காட்சி தருவேன் என்றார்.  அந்த நேரத்தில் உன்னுடைய கோர உருவம் மறையும்.  

அப்போது துர்க்கன் என்ற அரக்கன்  உன்னை அழிக்க வருவான். அவனை நீ சம்ஹாரம் செய்யவேண்டும் என்று கூறினார். காளியும் சிவபெருமானின் கூற்றின்படி, தென் பாண்டி நாட்டின் தாமிரபரணி மேற்கரையில் உள்ள  கடம்ப வனதுக்குள் வந்து பல ஆண்டுகள் தவம் செய்தார்.  அதன் பலனாக சிவன் அருளால் கோரமான காளி உருவம் நீங்கியது. அவளுக்கு சிவ பெருமான் கவுசிகை, அனவரதசெல்வி ஆகிய திருநாமங்களை சூட்டினார். பின் சிவபெருமான் ஒரு சூலாயுதத்தை அவள் கையில் தந்து, தேவர்களை  வாட்டி வதைக்கும்  சர்வ வல்லமையுடன் திகழும் துர்க்கனை அழித்திட வேண்டும் என்றார்.

பூலோகத்தில் உடனே யுத்தம் துவங்கியது.  கவுசிகையான அனவரதநாயகி, காளத்தி என்ற சக்தியை துர்க்கனிடம் தூது அனுப்பினாள். அவளும் துர்க்கனிடம் சென்று நீ அன்னைக்கு அடங்குகிறாயா அல்லது அழிகிறாயா என்று கேட்டாள். ஆனால்  துர்க்கன் அதை பொருட்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் காளத்தியின் அழகில்  அவன் மயங்கினான். அவளிடம்  நீ என்னுடன் இரு என்றான். கோபம் அடைந்தாள் காளத்தி. என் அன்னையை பற்றி உனக்கு தெரியாது. என் அன்னை நினைத்தால். உன்னோடு உன் கூட்டத்தினையே அழித்து விடுவாள் என்று  கொந்தளித்தாள்.

துர்க்கன், உன் அன்னையையும்  ஜெயித்து விட்டு உன்னை சிறை பிடிக்கிறேன் என்று ஆணவமாக கர்ஜித்தான். துர்க்கனின் படை வீரர்கள் அன்னையை நெருங்கியது. அனவரதசெல்வி  நெருங்கி வந்த துர்க்கனின் படைகளை தனது பார்வையால் சுட்டெரித்தாள். அனைத்து வீரர்களும் சாம்பலாக்கி விட்டனர் என்று தெரிந்தவுடன்  கோபம் அடைந்தான் துர்க்கன். பெரும்படையும் அனவரத செல்வியுடன் போர்புரிந்தான். மிகப்பெரிய போர் நடந்தது.

இறுதியில் துர்க்கனை சம்ஹாரம் செய்தார் தேவி. அந்த தேவி தவம் இருந்த இடம் தான் அனவரதநல்லூர். இக்கோயிலில் அனவரத செல்வி அமர்ந்த கோலத்தில் இடது காலால் அசுரனை மிதித்து வலது காலை மடித்து  எட்டு கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி  தருகிறாள். இந்த ஆலயத்துக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. நெல்லை - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு
அனவரதநல்லூர், ஸ்ரீவைகுண்டம்

Tags : Anavarathi Selvi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?