×

காளியும் தேவியும்…

பெண்ணின் ஆற்றலை பழங்காலச் சமயம் காளி என்றும் நவீனப்படுத்தப்பட்ட சமயம் தேவி என்றும் இரண்டாக வகுத்துள்ளது. ஆக்ரோஷமான கொடூரமான ஆற்றல்மிக்க கொலைக் குணம் படைத்தவளாகப் பெண் வாழ்ந்த வேட்டைச் சமூகத்தில் தோன்றிய தெய்வம்  கருமை நிறம் கொண்ட காளி. வேட்டை சமுதாயம் மறைந்து வேளாண் சமுதாயம் மலர்ந்த பின்பு பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும் சாந்தமான அமைதியான தெய்வீகமான அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவள் தேவி. இவ்விரண்டில் அசுரத்தன்மை மிகுந்த காளி கருப்பு நிறம் கொண்டவளாக உருவகிக்கப் படுகிறாள். தேவி மென்மையான வண்ணம் கொண்டவளாகக் காட்டப்படுகிறாள்.

காளிக்கும் தேவிக்கும் சில முரண்பாடுகள் உள்ளன. காளி தலைவிரி கோலமாக சிங்கப்பல்லுடன் நாக்கைத்  தொங்க விட்ட படி நிர்வாணமாக ஒரு கையில் கத்தி அல்லது அரிவாள் மறு கையில் வெட்டப்பட்ட தலையின்  உச்சி மயிரைப் பிடித்தபடி இன்னொரு கையில் அந்த தலையில் இருந்து வடியும் ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஏந்தியபடி  கொடூரமான உருவத்துடன் காட்டப் படுகிறாள். ஆனால் தேவியோ மன்னனின் மகளாக சிவனின் மனைவியாக விநாயகர் மற்றும் முருகனின் தாயாக திருமாலின் தங்கையாக பல குடும்ப உறவுகள் கொண்ட அமைதியான பெண்ணாக காட்டப்படுகிறாள்.

தெய்வமான காளியைப் பச்சைக் காளி என்றும் பவளக்காளி என்றும் கருங்காளி என்றும் பல வண்ணங்களில் காண்கிறோம். பெரும்பாலும் பச்சைக் காளி என்பவள் மலையாளத்தில் இருந்து புறப்பட்டு வந்த காளியாக நம்பப்படுகிறாள். பச்சைக்காளி பவளக் காளியைக்  குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் முத்தாரம்மன் கோயிலின் தசரா பண்டிகையின் போது பக்தர்கள் ஆடும் ஆட்டத்தில் காணலாம். ஊருக்கு ஒரு பிடாரி; ஏரிக்கு ஒரு ஐயனார் என்று வழக்கில் இருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது பிடாரி ‘துடியான தெய்வம்’ என்ற பெயரில் ஊருக்கு ஊர் கோயில் வைத்து வணங்கப்பட்டாள். அவள் நல்லவள். மக்களுக்கு நன்மை செய்பவள்.

காளியை அசுரத்தனம் உடையவள் அல்லது கொடூரமானவள் என்று  புரிந்து கொள்வதைவிட ஒரு காலகட்டத்திய பெண் மக்கள் ஆதிக்கத்தின் ஓர் அடையாளம் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காளி மனித குல வரலாற்றின் வேட்டை சமூகத்தின் வரலாற்றுப் பதிவாக உலகெங்கும்  பாதுகாக்கப்பட்டு வருகிறாள். அக்காலகட்டத்தில் வலிமை மிக்க பெண் தலைமையில் ஆண்கள் அவளுக்குப் பணிந்து குழுவாக இணைந்து வாழ்ந்தனர். மனித குல வரலாற்றில் வேளாண்மை சமுதாயம் உருவான போது ஆண் முதன்மை சமுதாயம் உருவெடுத்தது.  அவள் பெண் மனைவி ஆனால்.

அவள் கணவனாகிய ஒருவனுக்கு மட்டுமே  குழந்தை பெறும் பெரும் பொறுப்பு உடையவள் ஆனாள். குழந்தைப் பேறு குழந்தை பராமரிப்பு அவர்களுடைய சகல தேவைகளையும் கவனித்தல் போன்ற பணிகள் அதிகமாகிவிட்ட காரணத்தினால் இந்த குடும்பத் தலைவி என்ற பொறுப்பு மட்டுமே பெண்ணுக்கு போதுமானதாகி விட்டது. வீடு அவளது ராஜ்ஜியமாகவும் குடும்பத்தினர்  அவளது பிரஜைகளாகவும் மாறிப்போயினர். இப்பெண் பல உறவு முறைகளுக்கு உரியவளாகிவிட்டாள். இவளது வடிவமே தெய்வங்களில்  பார்வதி ஆகிறது.  பார்வதி தேவி ஒரு சராசரி பெண்ணைப் போல தாய் தங்கை மகள் என பல உறவுகளுக்கிடையே உறவுச் சிக்கல்களுக்கிடையே பின்னி கிடக்கிறாள்..

இவள் சாந்த சொரூபியாக தாயன்பு கொண்டவளாக தியாகத்தின் திருவுருவாக வாழவேண்டும் என்ற சமூக  நியதிகளுக்கிடையே ஆட்பட்டு இயல்பு மாறிப் போகிறாள். காளியை சிவனின் கோபக் கனலான காலனின் பெண் வடிவம் என்கின்றனர். இவள் காலத்தின் தேவதை,. அதாவது மனிதனின் காலக் கணக்கை முடித்து வைப்பவள். அழிவின் கடவுள். வடமொழியில் காலா என்றால் கருப்பு . இவள் கருப்பு நிறத்தவள். காளிக்கு நிகராக ஒரு தெய்வம்  கொற்றவை என்ற பெயரில் தமிழகத்தில் வழிபடப்பட்டது. கொல் + தவ்வை என்றால் கொல்லும் மூத்தவள்  என்பது பொருள். போருக்குப் போவோர் கொற்றவையை வணங்கிச்  செல்வர்.

காளியைப் புரிந்துகொள்வது எப்படி?

நம் நாட்டில் மட்டுமல்ல மனித சமுதாயம் தோன்றி வளர்ந்த அனைத்து நாடுகளிலும் உண்டு. வட இந்திய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற  ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் காலி, காளி என்ற பெயர் அங்கு கேலே, காலே, என உயிரொலி இடம் பெயர்தல் [ காளி என்பதில் கா என்பதில் உள்ள அகரம் கே என எகரமாக மாறுதல்; அடுத்து ளி என்பதில் உள்ள இகரம் லெ என எகரமாக மாறுதல்]  என்ற ஒரு மாற்றத்துடன்   காணப்படுகிறது.

முனைவர் செ.ராஜேஸ்வரி

Tags : Kali ,Goddess ,
× RELATED நடந்து சென்ற பெண் டூவீலர் மோதி காயம்