×

நவகிரகங்களின் தோஷங்கள் நீங்க துர்க்கை அம்மனுக்கு விரதம் இருங்கள்!!

பழங்காலம் முதலே உலகெங்கிலும் உள்ள பழமையான நாகரிகங்களில் பெண் தெய்வ வழிபாடு இருந்து வந்துள்ளது. மிகவும் பழமையான மதமான இந்து மதத்தில் இன்று வரை பெண் தெய்வங்கள் வழிபடப்படுகிறனர். அதிலும் சிவபெருமானின் சரிபாதியான சக்தி தேவி அம்மன், அம்பாள் என பல பெயர்களில் நாடெங்கிலும் வழிபடப்படுகிறார். தீமைகளை ஒழிக்கும் சக்தி தேவியின் ஒரு வடிவம் தான் “துர்க்கை அம்மன்”. இந்த துர்க்கை அம்மனுக்கு விரதம் மேற்கொள்ளும் முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.

துர்க்கை அம்மனுக்கு விரதம் மேற்கொள்ள சிறந்த நாட்களாக இருப்பது வாரத்தில் வரும் “செவ்வாய்” மற்றும் “வெள்ளிக்கிழமைகள்” ஆகும். ஒவ்வொரு மாதம் வரும் “அஷ்டமி, நவமி” ஆகிய தினங்களிலும் துர்க்கை விரதம் மேற்கொள்ளலாம். அஷ்டமி அல்லது நவமி தினத்தில் மேற்கொள்ளப்படும் துர்க்கை அம்மன் விரதம் சிறந்த பலன்களை தரும் என்பது ஆன்மீக பெரியோர்களின் கருத்தாக உள்ளது. துர்க்கை விரதம் அனுஷ்டிப்பவர்கள் துர்க்கை அம்மனின் முழுமையான அருளை பெற முதலில் தங்களின் குல தெய்வத்தையும், விநாயகர் பெருமானையும் வணங்கி விரதம் மேற்கொள்ள வேண்டும்.விரதம் மேற்கொள்ளும் நாளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் அம்பாளின் படத்திற்கு செவ்வரளி, செம்பருத்தி, செந்நிற ரோஜா பூ, செந்தாமரை போன்ற சிவப்பு நிற மலர்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது வகைக்கு ஒன்றாக சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி, குத்துவிளக்கில் விளக்கெண்ணெய் தீபமேற்றி, பால், கற்கண்டுகள், தேன், பாயசம், சர்க்கரை பொங்கல் போன்ற ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து, துர்க்கை அம்மன் அல்லது சண்டிகை தேவி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் துதித்து வழிபட வேண்டும்.

உணவேதும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வது சிறந்த நன்மைகளை தரும் என்றாலும், உணவு உண்ண வேண்டிய உடல்நிலை கொண்டவர்கள் பழங்கள் , பால் போன்றவற்றை உணவாக கொண்டு துர்க்கை விரதம் மேற்கொள்ளலாம். விரத தினத்தன்று மாலையில் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி, பழம், அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட்ட பிறகு, கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கி, அம்மனை உளமார வழிபட்டு வீடு திரும்பிய பின்பு பூஜையறையில் அம்பாளை வழிபட்டு நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினருக்கு உண்ண கொடுத்து, நீங்களும் உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

துர்க்கை விரதத்தை மேற்கூறிய முறைப்படி அனுஷ்டிப்பவர்களுக்கு நவகிரகங்களின் தோஷங்கள் நீங்கும். நோய்கள் நீங்க பெற்று உடல் நலம் பெறுவார்கள். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். வேலையில்லாதவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை அமையும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். செய்வினை, பில்லி சூனியம்போன்ற மாந்த்ரீக பிரயோகங்களின் பாதிப்புகள் நீங்கும். திருமணம் ஆகா இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

Tags : Durga Amman ,
× RELATED செங்குன்றத்தில் துர்கை அம்மன்...