×

கடன் தொல்லை போக்கும் கதலி நரசிங்க பெருமாள்

தேனியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது ஜம்புலிபுத்தூர். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள கருவறையில் கதலி என்று அழைக்கப்படும் சிவபெருமானும், அருகில் தேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சிவபெருமான் வாழைப்பழ (கதலி) அமைப்பில் இங்கு சுயம்புவாக  எழுந்தருளியுள்ளார்.கோயிலில் கருடாழ்வார், விஷ்வ சேனர், லெட்சுமி நரசிம்மர், செங்கமல தாயார், அனுமன், கிருஷ்ணன், பன்னிரு ஆழ்வார்கள், காலபைரவர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இங்கு கொடிமரமும், பிரம்ம தீர்த்தக்குளமும் உள்ளது. தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது.

தல வரலாறு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஓடிய நாகலாற்றின் கரையில் ஜம்பைப்புல் நிறைந்த வனப்பகுதி இருந்தது. இப்பகுதியில் சுயம்புவாக கதலி வடிவில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு கண்டமனூர் ஜமீன் சார்பில் சிறிய கோயில் கட்டப்பட்டிருந்தது. கோயிலை சுற்றிய பகுதிகளில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் தங்களது வீடுகளில் வைத்திருந்த பாலின் அளவு வெகுவாக குறைந்து போவது கண்டு அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.

ஒருநாள் மறைந்திருந்து அவர்கள் கண்காணித்த போது நாகப்பாம்பு ஒன்று வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பாலை அருந்துவதை கண்டனர். அவர்கள் அதனை கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய பாம்பு கதலி கோயில் கருவறையில் இருந்த ஒரு புற்றுக்குள் நுழைந்தது. அந்த புற்றை மண்வெட்டியால் அகற்ற மக்கள் முயன்றனர். புற்றிலிருந்து பாம்பு ரத்த காயத்துடன் வெளியேறிய போது, ‘இனி என்னால் உங்களுக்கு தொல்லை ஏற்படாது. என்னை மனமுருக வணங்குவோரின் துன்பங்களை தீர்ப்பேன். உங்களுக்கு எப்போதும் பாதுகாவலாக இருப்பேன்’ என ஒரு அசரீரி ஒலித்தது. பின்னர் அந்த பாம்பு மறைந்தது.

இந்த சம்பவத்தில் மண்வெட்டியால் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயம் கோயில் கருவறையில் உள்ள கதலியின் மேல் தழும்பாக பதிந்துள்ளதை இன்றும் காண முடிகிறது.  பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் சைவ, வைணவ சமயங்களின் இணைப்பை பலப்படுத்தும் வகையில் அந்த கோயிலில் வீற்றிருக்கும் கதலியுடன், தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளின் விக்கிரகத்தையும் அமைத்தனர் என்பது புராணம்.
********
இந்த கோயிலில் சித்திரை திருவிழா,  நரசிம்மர் பிறப்பு, புரட்டாசி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ஆடி திருமஞ்சனம், ஆடி பதினெட்டாம் பெருக்கு, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை விசேஷ தினங்களாகும். சித்திரை திருவிழா 11 நாட்கள் நடக்கிறது. சித்திரை திருவிழாவில் நரசிங்க பெருமாள், தேவி, பூதேவியருடன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் முக்கிய விழாவாக தேரோட்டம் நடைபெறுகிறது.சுவாதி நட்சத்திர நாளில், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நரசிம்மருக்கு  சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு நரசிம்மரை வழிபட்டால், கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, வணிகம் பெருகிச் செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Tags : Kathalie Narasingha Perumal ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி