×

வார்த்தைகளால் வதம் செய்யாதீர்கள்

மரபின் மைந்தன் முத்தையா

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 32


சிலபேர் நம்மிடம் உரையாடலை இப்படி தொடங்குவார்கள். “ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”. இதற்கு பொதுவாக நாம் தருகிற பதில் “பரவாயில்லை சொல்லுங்க “என்பதுதான்.  இந்தக் கேள்வியும் தவறு. இந்த பதிலும் தவறு. நானும் வெகு காலம் அப்படித்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் தான் என் பதிலை மாற்றிக் கொண்டேன். நான் தப்பா எடுக்கிறதும் எடுக்காததும் நீங்கள் சொல்ல போகிற விஷயத்தை பொறுத்தது. நீங்கள் ஒரு விஷயத்தை தப்பாக சொன்னால் தப்பாகத்தான் எடுத்துக்கொள்வேன்” என்றதும் பேச வந்தவர்கள் யோசிப்பார்கள்.ஏனென்றால் அனாவசியமான ஒரு விஷயத்தை சொல்லி நம் மூக்கை உடைக்க வருபவர்கள் வாங்கும் முன்ஜாமீன் தான் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்கிற கேள்வி.

ஒன்றிய நோக்கிச் செல்லவேண்டும் என்கிற உள்ள உறுதியோடு இருப்பார்கள். அது நமக்கு உண்மையிலேயே நன்மை பயக்கும் என்றால் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம் என்பது பற்றி கவலைப்பட மாட்டார்கள்.“சொன்னால் விரோதம் இது ஆயினும் சொல்லுவேன் கேண்மினோ” என்கிறார் நம்மாழ்வார்.நீங்கள் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை. இப்படித்தான் சொல்வேன் என்று சொல்வதுதான் நேர்மையும் அக்கறையும் உள்ளவர்கள் நம்மிடம் சொல்லக்கூடிய விஷயம்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நமக்கு சுத்தமாக ஒத்துவராத ஒரு கருத்தை ஒருவர் சொன்னாலும் கூட அதை மறுக்க முடியாமல் மென்று விழுகிற மனநிலை பலருக்கும்ஏற்படுவதுண்டு. நாம் உடன்படாத ஒரு விஷயத்தை நேரடியாய் சொல்வதற்கு அல்லது உடனடியாக மறுப்பதற்கு ஏனோ நம்மில் பலரும் பழகவில்லை.இந்தக் கேள்வி, வாழ்வின் எத்தனையோ தருணங்களில் தலைகாட்டியிருக்கிறது. நம்மால் ஏற்க முடியாத கருத்துக்களையோ, உடன்பட முடியாத யோசனைகளையோ யாரேனும் சொல்லும்போது, சில சமயங்களில் மறுத்திருக்கிறோம். பல சமயங்களில் மென்று முழுங்கியிருக்கிறோம். ஏன் மென்று முழுங்குகிறோம்?விவாதங்களை,தெரிந்து கொள்வதற்கும் திருத்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பங்களாய் சிந்திக்காமல், சர்ச்சைக்கான வாசல்களாய்ப் பார்ப்பவர்கள் மாற்றுக் கருத்துச் சொல்ல மணிக்கணக்கில் யோசிப்பார்கள்.

இதுபொதுவான கருத்து. இதையும் தாண்டிப் பார்த்தால் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. சின்னஞ்சிறிய வயது முதல் நமக்குப் போதிக்கப்பட்டுள்ள பால பாடங்களில் ஒன்று ‘‘எதிர்த்துப் பேசாதே” என்பது. பெற்றோர், ஆசிரியர், மூத்தவர்கள் என்று எல்லோரோடும் இப்படி ஒரு கட்டாய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்றுக் கருத்தை மனந்திறந்து சொல்லும் உணர்வு, மழலைப்பருவத்திலேயே பலருக்கும் மரத்துப்போய் விடுகிறது.இன்று காலம் மாறி வருகிறது.ஊடகங்கள் போதிக்கும் உலக அறிவும்,இணைய தளங்கள் மூலம் இளைய தலைமுறை பெறும் பன்முகப் பார்வையும்,பல விஷயங்களைத் தீர்க்கமாக யோசித்து, தெளிவாக விவாதிக்கும் துணிவைத் தருகிறது. வீட்டில் குழந்தைகள் எதையாவது பேசினால், “பெரியவங்களை எதிர்த்துப் பேசாதே” என்று 144 போடாமல், தங்கள் மறுப்புகளை அவர்கள் வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுங்கள். அவர்கள் துணிவோடும் தெளிவோடும் வளர இது துணை செய்யும்.  

எதிராக யாரிடமாவது எதையாவது சொன்னால் பெயர் கெட்டு விடும் என்றொரு மூட நம்பிக்கையும் காலங்காலமாகவே நிலவி வருகிறது. நாம் நினைக்கிற விஷயத்தை உறுதியாக, அதே நேரம் மென்மையாக எடுத்துச் சொல்லும்போது, நம்மீதான மதிப்பு அதிகரிக்குமே தவிர, பேர் கெட வாய்ப்பே இல்லை.ஒரு கருத்துக்குச் சொல்லப்படும் மறுப்பு, சொன்னவருக்கான எதிர்ப்பு என்று தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதும் உண்டு. இந்த தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே பலர், தப்புத் தப்பான கருத்துக்களுக்கும் தலையாட்டிவிட்டுப் போய் விடுகிறார்கள்.

“பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான்
வெந்தயம் இனிக்கும் என்பான்
கள்ளியே முல்லை என்பான்
காக்கையைக் குயில்தான் என்பான்
உள்ளவன் சொல்வதெல்லாம்
உண்மையல்லாமல் என்ன?”
என்றார் கவியரசு கண்ணதாசன்.

கருத்தைச் சொல்பவர் கனம் பொருந்தியவராக இருக்கும் பட்சத்தில், அவரைக் காக்காய் பிடிக்க வேண்டியிருந்தால், காக்கையைக் குயில் என்று ஒப்புக் கொள்ளும் சமரசத்தைச் செய்து தீர வேண்டி வருகிறது. மாற்றுக் கருத்தை மனம் நோகாமல் சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்வார்கள். சொல்லும் விதமும் சொல்வதன் நோக்கமுமே முக்கியம்.மாற்றுக் கருத்துகளைச் சொல்வதும் கேட்பதும், வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஒரு யோசனையை ஏற்க முடியாத போதுதான் அதைவிட நல்ல யோசனை ஒன்று பிறக்கிறது. மாற்றுக்கருத்தை சரியான கோணத்தில் அங்கீகரிக்கிற போது, புதிய உறவும், நம்பகத்தன்மையும் மலர்கிறது. குளிர்காலத்தைக் கோடை மறுக்கிறது. வெய்யிலை மழை மறுத்துப் பேசுகிறது. பருவ மாற்றங்களால் பூமி பயன் பெறுகிறது. மறுப்புக் கருத்தைச் சொல்லவும் சரி,மாற்றுக்கருத்தை ஏற்கவும் சரி, தயக்கம் காட்டாதீர்கள்.ஏற்க முடியாததற்கெல்லாம் தலையாட்டாதீர்கள். புதிய வளர்ச்சிகளைக் கட்டாயம் காண்பீர்கள். இது முதல் விஷயம்.

அதுசரி நம் பார்வைக்கோ காதுக்கோ வரக்கூடிய விஷயம் நமக்கு நல்லதுதானா என்று எப்படி கண்டறிவது என்பதும் முக்கியமான கேள்விதான். அப்போதுதான் மனிதன் தனக்குள்ளேயே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உள்ளுணர்வின் திரியைத் தூண்டிவிட்டு அது சொல்வதை சரியாக உள்வாங்க வேண்டும்.நமக்கு நெருங்கிய நண்பர் கூட நமக்கு பிடித்ததைச் சொல்வதாக நினைத்துக் கொண்டு எது நமக்கு நல்லதில்லையோ அதை சொல்லக் கூடும். அந்நேரம் நமக்கு வேண்டாதவர் கூட நமக்குப் பயன்படும் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லக் கூடும்.எம்.ஜி.ஆரும் கலைஞரும் பிரிந்த பிறகு குறிப்பிட்ட காலகட்டம் ஒன்றில் கூட்டம் பேசிவிட்டு வரும்போதெல்லாம் கலைஞர் ஒருவிதமான வயிற்று வலியில் அவதிப்பட்டிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., “அவருக்கு சின்ன வயதிலிருந்தே சூட்டு உடம்பு. பேசி முடித்ததும் கொஞ்சம் பால் பருகச் சொல்லுங்கள்” என்று சொன்னாராம். “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்காண்பது அறிவு’’ என்றார் திருவள்ளுவர்.

(தொடரும்)

Tags : death ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...