×

அம்பாள் உடையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்

திருவானைக்காவல், திருச்சி

திருவானைக்காவல் எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்,  தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு  உரியது. சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’  என்றழைக்கப்படுகிறாள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60வது தேவாரத்தலம்  ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். இத்திருத்தல அகிலாண்டேஸ்வரி கம்பீரமான, திருத்தோற்றமுடையவள்;  கருணை பொழிகின்ற திருமுக நாயகி; வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருள்பவள். இந்த சிவசக்தி ஸ்வரூபிணியை நாமும்  பணிந்து அருள் பெறுவோம்.

அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும்  அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நதிக்கு செல்வார்.  சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சந்நதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக  ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். இது இத்தல விசேஷமாகும். ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு  சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில்  லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக  இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற  சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன்  அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம்,  “நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!’’ என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும்  மாறுவேடத்தில் சென்றனர்.

சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.  இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி  தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள  மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை  தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை  உணர்த்துகிறது.திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவியின் தாள்கள் பணிவோம்.


Tags : Archakar ,pooja ,Swami ,Ambal ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை