×

தென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்

தென்காசி, : தென்காசி  உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து தெப்பத்தில் சுவாமி, அம்பாள் நீராழி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகளை கைலாசம், முத்துகிருஷ்ணன், செந்தில் பட்டர் ஆகியோர் நடத்தினர். இதில் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், ஆய்வாளர் கணேஷ்வைத்திலிங்கம், கணக்கர் பாலு, மணியம் செந்தில்குமார், அழகராஜா, இலஞ்சி அன்னையாபாண்டியன், பா.ஜ.நகர தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், அதிமுக நகர செயலாளர் சுடலை, சாமி, வெள்ளப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு மாரிமுத்து, சுப்பாராஜ், அமமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள், பக்தர்கள் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு விஜயன், ஏட்டு செல்வம் தலைமையிலான வீரர்கள் செய்திருந்தனர்.கடையம்: கடையம் நித்திய கல்யாணியம்மன் உடனுறை வில்வவன நாதர் கோவில் ஆவணி தெப்பத்திருவிழா நடைபெற்றது.கடையம் ராமநதி அணை செல்லும் வழியில் நித்திய கல்யாணியம்மன் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் நித்தியகல்யாணி அம்பாள் வில்வவனநாத சுவாமி பூஞ்சுனை தீர்த்தத் தெப்பத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து புனித தெப்பத்தில் தேவாரம், திருவாசகம், வேதங்கள் முழங்க சுவாமி அம்பாள் 11 சுற்றுகள் வலம் வந்தனர். தெப்பத் திருவிழாவைக் காண கடையம், கீழக்கடையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணகான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடையம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் கோ.தேவி செய்திருந்தார். கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், போலீஸார், ஊர்க்காவல் படையினர் மற்றும் அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Tenkasi ,temples ,Kadaiyam ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...