×

பழநி அருகே அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா : கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி, : பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து கருடாழ்வார், சங்கு, சக்கரம் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடி பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க நேற்று காலை 8 மணிக்கு கன்யா லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருவிழா நடைபெறும் 11 நாட்களும் சாமி சப்பரம், அனுமார் வாகனம், சிம்ம வாகனம், கருடன் வாகனம், அன்ன வாகனம் மற்றும் குதிரை வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி 14ம் தேதி நடக்க உள்ளது.

அன்றைய தினம் மாலை 6.43 மணிக்கு மேல் 7.43 மணிக்குள் மீன லக்னத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. 15ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி 16ம் தேதி நடக்க உள்ளது. காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. 17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாசுரங்கள் சேவித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

Tags : Amani Promotion Ceremony ,Akopila Varadaraja Perumal Temple Near Palani ,
× RELATED 8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் அருகே...